Published : 13 Apr 2023 08:31 AM
Last Updated : 13 Apr 2023 08:31 AM

கிரிப்டோ கரன்சி சவால்கள்: ஐஎம்எஃப் துணை நிர்வாக இயக்குநருடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

வாஷிங்டனில் நேற்று சர்வதேச செலாவணி நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத்தை சந்தித்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

வாஷிங்டன்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக வங்கியின் கூட்டங்களில் கலந்து கொள்ளவும், ஜி-20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கவும் அமெரிக்கா சென்றுள்ளார்.

முன்னதாக, வாஷிங்டனில் உள்ள பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் பார் இன்டர்நேஷனல் எகனாமிக்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசினார்.

இந்நிலையில். நேற்று முன்தினம் ஐஎம்எஃப் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத்தை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது உலக வங்கியுடன் இணைந்து உலகளாவிய வட்டமேசை மாநாட்டில் இந்தியாவின் பணிகளை விரைவுபடுத்தியதற்காக கீதா கோபிநாத்துக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் வளர்ந்து வரும் கடன் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை முடுக்கி விடுவது தொடர்பாக இந்தியாவின் உறுதிப்பாடு குறித்து அவர் அப்போது விளக்கம் அளித்தார். மேலும், கிரிப்டோ கரன்சி தொடர்பாக இந்தியா முன் எழுந்துள்ள சவால்கள் தொடர்பாகவும் கீதா கோபிநாத்துடன் ஆலோசனை நடத்தினர்.

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பேற்க ஐஎம்எஃப் ஆதரவு தெரிவித்ததற்காக கீதா கோபிநாத்துக்கு அப்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்தார்.

கீதா கோபிநாத் தனது ட்விட்டர் பதிவில் கூறும்போது, “கடன் பிரச்சினை, கிரிப்டோ கரன்சி சவால்கள் குறித்தும், இந்தியா ஜி20 அமைப்புக்கு தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ளது குறித்தும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் விவாதித்தேன். இந்த சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x