

ஓசூர்: ஓசூர் பகுதி தக்காளிக்கு சந்தையில் வரவேற்புக் குறைந்ததை தொடர்ந்து, பழச்சாறு ஆலைகளுக்கு தினசரி 200 டன் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை, மத்திகிரி, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் சொட்டு நீர்ப் பாசனம் மூலம் தக்காளி. பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு, முள்ளங்கி, காலிஃபிளவர், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி பயிர்களை விவசாயிகள் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் விளையும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட தமிழக ஊர்களுக்கும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
குறிப்பாக ஓசூர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டர் பரபரபளவில தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. மகசூல் அதிகரிக்கும்போது, கிலோ ரூ.10 வரை விற்பனை செய்யப்படும். மகசூல் பாதிக்கும்போது, ரூ.100 வரை விற்பனை செய்யப்படுவதுண்டு.
தற்போது, மகசூல் அதிகரித்துள்ளதால், தரமான தக்காளி கிலோ ரூ.12-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தரம் குறைந்த தக்காளி உள்ளூர் சந்தையில் ரூ.5 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், உத்தனப்பள்ளி, பந்தாரப்பள்ளி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உயர் ரக தக்காளி தரமில்லாததால் (உருவத்தில் சிறுத்த த க்காளி) கிலோ ரூ.2.50-க்கு பழச்சாறு ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.
இதுதொடர்பாக விவசாயி புருஷோத்தமன் கூறியதாவது: உத்தனப்பள்ளி பகுதியில் உயர் ரக தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தரமில்லாத விதைகளை வாங்கிப் பயிரிட்டதால், 3-வது அறுவடையில் தக்காளி எலுமிச்சை பழம் அளவுக்குச் சிறுத்து, சந்தையில் வரவேற்பு குறைந்தது.
இதனால், அறுவடை செய்யாமல் செடிகளில் காய்களை விட்டிருந்தோம். இந்நிலையில், தக்காளி பழச்சாறு ஆலை நடத்துவோர் பெரிய மற்றும் சிறிய தக்காளியை ஒரே விலையாக 25 கிலோ பெட்டியை ரூ.65-க்கு நேரில் கொள்முதல் செய்கின்றனர்.
இதனால், எங்களுக்குப் போக்குவரத்து செலவு மிச்சம். கிடைத்த வரை லாபம் என விற்பனை செய்து வருகிறோம்.தினசரி 200 டன் வரை பழச்சாறு ஆலைக்குச் செல்கிறது. தரமான தக்காளி விதையை விவசாயிகளுக்குத் தோட்டக்கலைத் துறையினர் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.