Published : 07 Apr 2023 08:39 AM
Last Updated : 07 Apr 2023 08:39 AM

ரூ.12 கோடி பரிவர்த்தனையா? ஜெராக்ஸ் கடை உரிமையாளர் அதிர்ச்சி: விளக்கம் கேட்டு வருமான வரி துறை நோட்டீஸ்

பிரதிநிதித்துவப் படம்

அஜ்மீர்: ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிஷன் கோபால் சப்பர்வால் (38). இவர் ஜெராக்ஸ் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த நிதியாண்டில் சப்பர்வால் ரூ.12 கோடிக்கு பரிவர்த்தனை மேற்கொண்டதாகவும், இந்த வருமானத்துக்கு விளக்கம் கேட்டும் வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

இதுகுறித்து சபர்வால் கூறுகையில், “குஜராத்தில் உள்ள சூரத்துக்கும், பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் பிற இடங்களுக்கும் நான் இதுவரை சென்றதே இல்லை. வருமான வரி துறை எனக்கு அனுப்பிய நோட்டீஸை காண்பித்து நண்பர்களிடம் ஆலோசித்ததில் எனது பான் கார்டு மற்றும் பிற ஆவணங்களை பயன்படுத்தி போலி நிறுவனங்களுக்காக இந்த பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என காவல் துறையினரிடமும், வருமான வரி துறையினரிடமும் முறையிட்டு வருகிறேன்” என்றார்.

ரூ.113 கோடி செலுத்த நோட்டீஸ்

இதேபோன்ற சம்பவம் மத்திய பிரதேசத்திலும் அரங்கேறியுள்ளது. பிண்டு நகரைச் சேர்ந்த ரவி குப்தா மாதம் ரூ.58,000 மட்டுமே சம்பளம் வாங்கும் நிலையில் ரூ.133 கோடி வரி செலுத்துமாறு வருமான வரி துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011-12-ல் அவரது கணக்கில் மேற்கொள்ளப்பட்டிருந்த ரூ.132 கோடி பணப்பரிவர்த்தனைக்காக இந்த தொகையை டெபாசிட் செய்யும்படி வருமான வரி துறை கூறியுள்ளது. இதுகுறித்து அவர் பிரதமரின் அலுவலகத்தில் புகார் தெரிவித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையிலும் வருமான வரி துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

குப்தாவுக்கு கடந்த 2019-லும் ரூ.3.5 கோடிக்கான அபராத நோட்டீஸ் வருமான வரி துறையால் வழங்கப்பட்டது. அப்போது, அவர் ஒரு பிபிஓ நிறுவனத்தில் மாதம் ரூ.7,000 சம்பளத்தில்தான் வேலை செய்து வந்துள்ளார்.

மோசடி பேர்வழிகள் பிறரின் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபடும் சம்பவம் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. நிதி விவகாரங்களில் மிகவும் கவனமாக செயல்பட நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x