Published : 29 Mar 2023 07:55 PM
Last Updated : 29 Mar 2023 07:55 PM

ஏப்.1 முதல் யுபிஐ பரிமாற்றத்துக்கு 1.1% கட்டணம் யாருக்கெல்லாம் பொருந்தும்? - ஒரு விளக்கம்

புதுடெல்லி: என்பிசிஐ எனப்படும் நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சமீபத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ப்ரீபெய்டு வாலட்களைப் பயன்படுத்தி செலுத்தப்படும், ரூ.2,000-க்கு அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் கட்டணம் வசூலிக்க பரிந்துரைத்துள்ளது. மார்ச் 24-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, இந்த மாற்றம் வரும் ஏப்ரல்1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணம் வசூல் யாருக்கெல்லாம் பொருந்தும் என்ற கேள்வியும், குழப்பமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களின் பல பதிவுகளில் என்பிசியின் பரிந்துரைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, ஏப்.1-ம் தேதி முதல் அனைவரும் இந்தக் கட்டணச் சுமையை ஏற்கவேண்டியது வருமோ என்று கவலைப்படுகின்றனர். ஆனால், யாரெல்லாம் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை என்பிசிஐயின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிமாற்ற கட்டணம் என்றால் என்ன? - பரிமாற்ற கட்டணம் என்பது, வங்கி அல்லது சேவை வழங்குநரால் வணிகர்களிடம் வசூலிக்கும் கட்டணம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம், யுபிஐ பரிமாற்றங்களால் அதிக சிரமத்திற்குள்ளாகி வரும் வங்கிகள் மற்றும் சேவை வழங்குநர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக பெறப்படுகிறது.

யாரெல்லாம் 1.1 சதவீதம் பரிமாற்ற கட்டணம் செலுத்த வேண்டும்? - என்பிசிஐ-யின் அறிக்கையில் வாடிக்கையாளர்கள் 1.1 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது. பிபிஐ எனப்படும் பிரீப்பெய்டு பேமென்ட் கருவியினைக் கொண்டு, ரூ.2000-க்கு அதிகமாக செய்யப்படும் பரிமாற்றத்திற்கு வணிகர்கள் மேற்கொள்ளும் பரிமாற்றத்துக்குதான் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

அதேபோல் கடன் அட்டை, வாலட்களைக் கொண்டு பிபிஐ மூலம் செய்யப்படும் யுபிஐ பரிமாற்றங்களுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும். முக்கியமாக, க்யூஆர் கோடு மூலம் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கே இந்த பரிமாற்றக் கட்டணம் பொருந்தும்.

இதுகுறித்து பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கியும் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டு தெளிவு படுத்தியுள்ளது. அதன் ட்விட்டர் பக்கத்தில், "என்பிசிஐயின் சுற்றறிக்கைப்படி, யுபிஐ, வங்கிக் கணக்கு அல்லது பிபிஐ, பேடிஎம் வாலட் மூலம் செய்யப்படும் பரிமாற்றங்களுக்கு வாடிக்கையாளர்கள் எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

பணப் பரிவர்த்தனையின் பரிமாற்றக் கட்டணம் வணிர்களால், கடன் அட்டை அல்லது வாலட் கொடுப்பவர்களுக்கு செலுத்தப்படும்போது, அது வணிகர்களை பாதிக்கலாம். ஆனாலும், இது சிறு வணிகர்கள் மற்றும் கடைக்காரர்களை பாதிக்காது. ஏனென்றால் பரிமாற்றக் கட்டணம் ரூ.2000-க்கு அதிமான பரிமாற்றத்திற்குதான் வசூலிக்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், யுபிஐ பரிமாற்றத்திற்கு வாலட் மற்றும் பிபிஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்தக் கட்டண வசூல் தற்போது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், பின்னர் வணிகர்கள் இந்தக் கூடுதல் சுமையை தவிர்க்க நினைத்தால் அது வாடிக்கையாளர்களை பாதிக்கலாம். ரூ.2000-க்கு அதிகமான பரிமாற்றத்திற்காக வால்ட்களை புதுப்பிக்கும்போது, அதற்கான சேவைக் கட்டணமாக 15 அடிப்படை புள்ளிகளை பணம் அனுப்புவோரின் வங்கிக்கு பிபிஐ சேவை வழங்குபவர் செலுத்த வேண்டும் என்று என்சிபிஐ தெரிவித்துள்ளது.

அதாவது, வாடிக்கையாளர் ஒருவர் யுபிஐ பரிவர்த்தைனைக்காக தனது டிஜிட்டல் வால்ட்டில் பணம் ஏற்றும்போது, அந்த பிபிஐ வழங்குபவர் வாடிக்கையாளரின் வங்கிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதில் வாடிக்கையாளர் எந்த விதத்திலும் பாதிக்கப்பட போவதில்லை. ஆனால், இந்தக் கூடுதல் கட்டணத்தை வால்ட் வழங்குபவர் வாடிக்கையாளிடம் வசூலிக்க நினைத்தால், அவர் பாதிக்கப்படலாம்,

மேலும், என்பிசிஐ புதன்கிழமை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், "புதிய பரிமாற்றக் கட்டணம் பிபிஐ வணிகர்கள் பரிமாற்றங்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்றும், வாடிக்கையாளர்களுக்கு (மக்களுக்கு) எந்த விதமான கட்டணமும் கிடையாது என்றும், யுபிஐ மூலம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் செலுத்தும்போது கட்டணம் வசூல் செய்யப்படாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x