Published : 27 Sep 2017 10:38 AM
Last Updated : 27 Sep 2017 10:38 AM

தொழில்துறையில் செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் இந்திரா நூயி, சாந்தா கொச்சார், ஷிகா சர்மா: ஃபார்ச்சூன் பத்திரிகை வெளியீடு

அமெரிக்காவுக்கு வெளியே மிகவும் செல்வாக்குமிக்க பிஸினஸ் பெண்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த சாந்தா கொச்சார், ஷிகா ஷர்மா இடம்பெற்றுள்ளனர். ஃபார்ச்சூன் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் அமெரிக்காவின் செல்வாக்குமிக்க முதல் மூன்று பிசினஸ் பெண்கள் பட்டியலில் இந்திரா நூயி உள்ளார்.

அமெரிக்காவுக்கு வெளியே செல்வாக்குமிக்க பிசினஸ் பெண்கள் பட்டியலில் பான்கோ சான்டான்டர் குழுமத்தின் தலைவர் அனா போடின் முதலிடத்தில் உள்ளார். ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சாந்தா கொச்சார் 5-வது இடத்திலும், ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் ஷிகா சர்மா 21-வது இடத்திலும் உள்ளனர்.

பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி, அமெரிக்காவின் மிகவும் செல்வாக்குமிக்க பிசினஸ் பெண்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மேரி பாரா முதல் இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மெரிலின் ஹியூசன் இடம்பிடித்துள்ளார்.

ஐசிஐசிஐ வங்கியின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சாந்தா கொச்சாரை பற்றி குறிப்பிடுகையில், இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியை 8 ஆண்டுகளாக வழி நடத்தி வருகிறார். இவரது தலைமையின் கீழ் வங்கி சிறப்பான வளர்ச்சியைடைந்துள்ளது என்று கூறியுள்ளது.

ஷிகா சர்மாவைக் குறித்து குறிப்பிட்டுள்ள ஃபார்ச்சூன், வங்கியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுள்ளர். வங்கியின் டிஜிட்டல் சேவைகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறார். டிஜிட்டல் பேமண்ட் செயலி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு விரிவாக்கம் செய்துள்ளார் என்று கூறியுள்ளது.

சர்வதேச அளவிலான பட்டியலில் ஜிஎஸ்கே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எம்மா வாம்ஸ்லே இரண்டாவது இடத்திலும், பிரான்ஸைச் சேர்ந்த என்ஜீ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஓ இசபெல் கோசெர் மூன்றாவதாகவும் உள்ளனர்.

இந்த பட்டியலை ஃபார்ச்சூன் 17 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. 17 நாடுகளிலிருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த சர்வதேச அளவிலான 50 பிசினஸ் பெண்களை இதில் வரிசைப் படுத்துகிறது. இந்த ஆண்டில் புதிதாக 11 பேர் இடம் பெற்றுள்ள னர். சர்வதேச அளவினாலான பொருளாதாரத்தில் இவர்களின் பங்களிப்பு, பிசினஸை வழிநடத்தும் விதம், அவர்கள் கடந்து வந்த பாதை மற்றும் சமூக கலாச்சார செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வரிசையை ஃபார்ச்சூன் வெளியிடுகிறது.

அமெரிக்க அளவிலான வரிசையில் 26 பெண் தலைமைச் செயல் அதிகாரிகளை வரிசைப்படுத்தியுள்ளது. இவர்கள் நிர்வகித்து வரும் நிறுவனங்களின் சொத்துமதிப்பு 1.1 லட்சம் கோடி டாலராகும். இதில் 9 பேர் தொழில்நுட்ப துறையிலிருந்து இடம் பிடித்துள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x