Published : 22 Feb 2023 04:34 PM
Last Updated : 22 Feb 2023 04:34 PM

இஸ்ரேல் துறைமுகத்தை அதானி குழுமம் சிறப்பாக நிர்வகிக்கும்: இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர்

புதுடெல்லி: இஸ்ரேல் துறைமுகத்தை சிறப்பாக நிர்வகிக்கும் ஆற்றல் அதானி குழுமத்துக்கு இருப்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''இஸ்ரேலின் ஹைபா துறைமுகம் தற்போது அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஹைபா துறைமுகம் எங்களின் வியூக முக்கியத்துவம் வாய்ந்த சொத்து. அதனை நாங்கள் அதானி குழுமத்துக்குக் கொடுத்திருப்பது மிக முக்கியமான நடவடிக்கை. ஹைபா துறைமுகத்தை சிறப்பாக நிர்வகிக்கும் ஆற்றல் அதானி குழுமத்துக்கு இருக்கிறது.

பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் அதானி குழுமத்தின் மிக முக்கிய தொழிலாக துறைமுகங்கள் உள்ளன. அவர்களின் துறைமுகங்களைப் பார்த்தேன். அவை நன்றாக இயங்குகின்றன. ஹைபா துறைமுகத்தை அதானிக்கு கொடுத்திருப்பதன் மூலம் இந்தியா - இஸ்ரேல் இடையேயான வர்த்தகம் அதிகரிக்கும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் ஓர் இந்திய நிறுவனத்துக்கு எங்கள் துறைமுகத்தைக் கொடுத்திருக்கிறோம். இந்தியா மீதான; இந்திய நிறுவனங்கள் மீதான எங்களின் ஆழமான நம்பிக்கையின் வெளிப்பாடு இது.

இஸ்ரேலில் மேலும் பல தொழில்களைத் தொடங்க அதானி குழுமம் ஆர்வம் காட்டி இருக்கிறது. அதில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறேன். டாடா, கல்யாணி, பெல் உள்பட 80 இந்திய நிறுவனங்களுடன் இணைந்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்தியா - இஸ்ரேல் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இரு நாடுகளுமே ஆர்வமாக உள்ளன. இதற்கான ஒப்பந்தம் இறுதியானதும், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் மேலும் பெருகும்.

இந்தியா எங்கள் நண்பன். எங்கள் நண்பன் எங்களோடு மேலும் நெருங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவோடு எங்கள் உறவு மிகவும் சவுகரியமாக இருக்கிறது. பிராந்திய சூப்பர் பவர் என்பதில் இருந்து சர்வதேச சூப்பர் பவராக இந்தியா வளர்கிறது'' என்று அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தின் பொறுப்பை சமீபத்தில் அதானி குழுமம் ஏற்றது. இதற்காக அதானி குழுமம் 1.2 பில்லியன் டாலர் தொகையை அதில் முதலீடு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x