Last Updated : 21 May, 2017 11:29 AM

 

Published : 21 May 2017 11:29 AM
Last Updated : 21 May 2017 11:29 AM

வடகிழக்கு மாநிலங்களுக்கு புதிய தொழில் கொள்கை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

வடகிழக்கு மாநிலங்களில் தொழில் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு புதிய தொழில் கொள்கையை உருவாக்கி வருவதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2007-ம் ஆண்டு வடகிழக்கு தொழில் மற்றும் முதலீட்டு மேம் பாட்டுக் கொள்கை அமல்படுத்தப் பட்டது. இந்த வருடத்துடன் இந்தக் கொள்கை முடிவுக்கு வருகிறது. இதனால் புதிய கொள்கையை மத்திய அரசு உருவாக்கி வரு கிறது.

இந்த கொள்கையின் கீழ் 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த பிராந்தியத்தில் தொழில்மயத்தை மேம்படுத்துவதற்கும் முதலீட்டை அதிகப்படுத்துவதற்கும் உண்டான நிதியுதவி அளிப்பதற்கு மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

‘‘வட கிழக்கு மாநிலங்களுக்கு புதிய தொழில் கொள்கை உருவாக்குவதற்கு சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் வரைவு கொள்கை கேபினட் அமைச்சகத்துக்கு சமர்பிக்கப்படும்’’ என்று மத்திய தொழிற் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை கூடுதல் செயலாளர் அதுல் சதுர்வேதி தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் நிறுவன அமைச்சகத்தின் சாதனை கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து நேற்று பத்திரிகையாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:

பழைய கொள்கைக்கான காலவரையறை இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் நிதி ஆயோக் மற்றும் மத்திய தொழில் கொள்கை துறையுடன் இணைந்து புதிய தொழில் கொள்கையை உருவாக்கி வருகிறோம். மேலும் வடகிழக்கு மாநிலங்களில் எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது குறித்தும், எந்தெந்த துறைகள் அதிக வேலை வாய்ப்பையும் தொழில் வளர்ச்சியையும் மேம் படுத்தும் என வட கிழக்கு மாநில அரசுகளுடன் ஆலோசனையை நடத்தி வருகிறோம்.

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் 7 நாட்களுக்குள் ஏற்றுமதியாளர் களுக்கு கட்டிய வரித் தொகை திருப்பி அளிக்கப்படும். வரியை திருப்பி அளிப்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். 6 முதல் 10 நாட்களுக்குள் திரும்ப வழங்கப்படும். ஏற்றுமதி யாளர்களுக்கு கட்டிய வரியை திரும்ப வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் 6 சதவீதம் வட்டியுடன் தொகை வழங்கப்படும்.

மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வரி செலுத்துவது குறித்து மாற்று நடைமுறைகளை உருவாக்குமாறு ஜிஎஸ்டி கவுன்சிலிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

எப்ஐபிபி நீக்க நடவடிக்கை

25 ஆண்டு பழமையான அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தை நீக்குவதற்கு விரைவில் கேபினட் அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும். அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தை நீக்குவதற்கு உண்டான நடவடிக்கைகளை மற்ற அமைச்சங்களோடு சேர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

விரைவில் கேபினட் அமைச்ச கம் இதுகுறித்து முடிவெடுக்கும். ஜிஎஸ்டி சட்டத்தால் ஏற்றுமதி அதிகரிக்கும். உற்பத்தி சார்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு மூலதன செலவு குறையும் என்பதால் ஏற்றுமதி அதிகரிக்கும். இது சர்வதேச அளவில் போட்டித் தன்மையை உருவாக்கும் என்று வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அந்நிய முதலீடு கொள்கைகளில் மேலும் தாரளமயமாக்கல் கொண்டுவரப்படுமா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ‘‘மத்திய அரசு தொடர்ந்து பெரிய சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சீர்திருத்தம் தொடரும். அந்நிய முதலீட்டு விதிமுறைகளை எளிதாக்குவதற்கு இன்னும் பல ஆலோசனைகள் செய்ய உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

‘ஹெச் 1 பி விசா மாற்றங்கள் குறித்து பயப்பட தேவையில்லை’

தற்போது ஹெச் 1 பி விசாவில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து பயப்படத்தேவையில்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்கா தற்போது செய்துள்ள மாற்றங்களில் திருத்தம் கொண்டு வரும். தற்போது வழங்கப்பட்டு வரும் விசா எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது. அமெரிக்க அரசு விசா எண்ணிக்கையை குறைக்காது என்று நம்புகிறேன். அதிக திறனுள்ள ஊழியர்களே தற்போது தேவைப்படும் பட்சத்தில் முதல் பட்டதாரிகளை விட அமெரிக்கா திறனுள்ள ஊழியர்களுக்கே முன்னுரிமை தரும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x