Published : 13 Feb 2023 04:04 PM
Last Updated : 13 Feb 2023 04:04 PM

2000 பேருக்கு வேலை: ரேனால்ட் நிஸ்ஸான் உடன் தமிழக அரசு புரிந்துணர்வு

ரேனால்ட் நிஸ்ஸான் நிறுவனம் மற்றும் தமிழக அரசு இடையே முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது

சென்னை: ரேனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் பயன்பாட்டை விரிவுபடுத்துவது மற்றும் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகிய நோக்கங்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 5,300 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (பிப்.13) மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திங்கள்கிழமை (பிப்.13) சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5,300 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசிற்கும் ரேனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாடு இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்து வருகிறது. தமிழக முதல்வர் நிர்ணயித்துள்ள இலக்கான 2030-31-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

ரேனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (RNAIPL): ரேனால்ட் நிஸ்ஸான் நிறுவனம், ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரேனால்ட் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிஸ்ஸான் ஆகிய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும். 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட ரேனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 2007-08ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் ஒரகடம் தொழிற் பூங்காவில், 4,80,000 கார்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு முழுமையான ஒருங்கிணைந்த அதிநவீன பயணிகள் வாகன உற்பத்தி ஆலையை நிறுவியது. இந்த ஆலை, 2010ம் ஆண்டில் தனது உற்பத்தியைத் தொடங்கியது.

ரேனால்ட் நிஸ்ஸான் தொழில் நுட்ப மற்றும் வர்த்தக மையம் (RNTBCI): ரேனால்ட் நிஸ்ஸான் தொழில் நுட்ப மற்றும் வர்த்தக மையம் (RNTBCI) என்பது உலக அளவில், இக்குழுமத்திற்கான தொழில் நுட்பம் மற்றும் வர்த்தக மையமாக விளங்கும் ஒரு அமைப்பாகும். 2007ம் ஆண்டில் சென்னையில் உள்ள மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் அமைந்துள்ள இந்த பிரத்யேக தொழில்நுட்ப மற்றும் வர்த்தக மையம், 8000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.

ரேனால்ட் நிஸ்ஸான் குழும முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு: ரேனால்ட் நிஸ்ஸான் குழுமம் இந்த வசதிகளில் 13,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு மேற்கொண்டுள்ளது. உற்பத்திப் பிரிவில் 7,000 நபர்களுக்கும், தொழில் நுட்பம் மற்றும் வணிக மையத்தில் 8,000 நபர்களுக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இது மட்டுமின்றி, பொறியியல் மையங்கள், உற்பத்தி திட்டங்கள், விற்பனை நிறுவனங்கள் மற்றும் வாகனங்களுக்கான நிதி உதவி ஆகியவற்றில் இக்குழுமம் முதலீடுகள் மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனங்களில் சுமார் 16,000 நபர்களுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். அவற்றில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்: RNAIPL மற்றும் RNTBCI நிறுவனங்கள், வாகன உற்பத்தி தளங்களை நவீன மயமாக்குவதற்கும், புதிய மாதிரிகளை அறிமுகப்படுத்தவும் முன்வந்துள்ளன. தற்போதைய செயல்பாடுகளை விரிவுபடுத்துவது, மற்றும் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகிய நோக்கங்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 5,300 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதற்கான அரசாணையும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்டுள்ளது. 5300 கோடி முதலீட்டிற்கான மற்றும் 2000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இன்றையதினம் தமிழக முதல்வர் முன்னிலையில், தமிழ்நாடு அரசிற்கும் ரேனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன்,வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே. விஷ்ணு, சென்னையிலுள்ள ஜப்பான் நாட்டு தூதரகத்தின் துணைத் தூதர் டாகா மாசாயுகி ( Taga Masayuki), சென்னை மற்றும் புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டு துணைத் தூதர் லிஸ் டால்போட் பர்ரே ( Lise Talbot Barre), நிஸ்ஸான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் கில்லாவுமா கார்டியர், நிஸ்ஸான் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் அஸ்வினி குப்தா, நிஸ்ஸான் இந்தியா ஆப்பரேஷன்ஸ் தலைவர் ஃப்ராங்க் டாரஸ், ரேனால்ட் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெங்கட் மிலாபாலே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x