Published : 30 Jan 2023 07:55 PM
Last Updated : 30 Jan 2023 07:55 PM

மத்திய பட்ஜெட் 2023 | பொருளாதார ஆய்வறிக்கை குறித்து அறிய வேண்டியவை

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பட்ஜெட் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இருக்கிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது பிப்ரவர் 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத் தேர்தலுக்கு முந்தைய முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். அதற்கு முன்னதாக மற்றொரு முக்கியமான ஆவணத் தயாரிப்பு வேலைகளில் நிதியமைச்சக ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். பட்ஜெட்க்கு முந்தைய நாளில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் அந்த ஆவணம் இந்திய பொருளாதார மதிப்பாய்வு என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான இந்திய பொருளாதார மதிப்பாய்வு, பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஜன.31 செவ்வாய்க்கிழமை நிதியமைச்சரால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பின்னர் அதே நாளில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம், தலைமை பொருளாதார ஆலோசகரால் நாட்டுமக்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த முறை தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் பொருளாதார மதிப்பாய்வை சமர்ப்பிக்கிறார்.

பொருளாதார மதிப்பாய்வு: பொருளாதார மதிப்பாய்வில் கடந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம், நிதி போக்குளை மதிப்பீடு செய்கிறது. இது அனைத்து துறைகளின் தகவல்களை வழங்குகிறது. விவசாயம், உற்பத்தி தொழில், உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, பணவீக்க விகிதம், வர்த்தகம், வெளிநாட்டு பணப்பரிமாற்ற கையிருப்பு போன்ற பிற பொருளாதாரம் சார்ந்த துறைகளின் போக்குகளை மதிப்பீடு செய்கிறது.

இந்த ஆய்வு அறிக்கை, பட்ஜெட் தயாரிப்பின் போது ஆதாரங்களை உருவாக்கவும், அவற்றை திறமையாக ஒதுக்கீடு செய்யவும், வரும் ஆண்டிற்கு இந்திய பொருளாதாரத்திற்கான யுக்திகளை உருவாக்கவும் அரசுக்கு உதவுகிறது. கொள்கை வகுப்பாளர்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்ள முக்கியமான சவால்களை அடையாளம் காணவும் இந்த பொருளாதார அறிக்கை உதவுகிறது.

முதல் ஆய்வு அறிக்கை எப்போது சமர்ப்பிக்கப்பட்டது: கடந்த 1950 - 51-ம் ஆண்டில் முதல் பொருளாதார மதிப்பாய்வு சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது அது மத்திய பட்ஜெட் உடன் சேர்ந்து தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் 1964-ம் ஆண்டுக்கு பின்னர் அது பட்ஜெட்-ல் இருந்து பிரிக்கப்பட்டு தனியாக சமர்ப்பிக்கப்படுகிறது.

கடைசியாக, எப்போது பொருளாதார மதிப்பாய்வு சமர்ப்பிக்கப்பட்டது? - கடந்த ஆண்டு அப்போதைய முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்ஜீவ் சன்யால் இந்திய பொருளாதார மதிப்பாய்வைச் சமர்பித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். கடந்த 2022ம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கைக்கான கருப்பொருள் "சுறுசுறுப்பான அணுகுமுறை", இது கோவிட் 19 பொதுமுடக்கம் காரணமாக தேசம் எதிர்கொண்ட பொருளாதார சவால்களையும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கிறது.

இந்த ஆய்வறிக்கை கடந்த ஆண்டு முதல் ஒற்றைத் தொகுதியாக வெளியிடப்பட்டது. அதற்கு முன்பாக இது இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டன. இந்த இரட்டைத் தொகுதி வழிமுறை மிகவும் அசாத்தியமானது என்று சஞ்சீவ் சன்யால் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பொருளாதார மதிப்பாய்வு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2021 - 22ம் ஆண்டில் 9.2 சதவீதமாகவும், ஜிடிபி வளர்ச்சி 2022-23ம் ஆண்டில் 8லிருந்து 8.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கணித்திருந்தது.

பொருளாதார மதிப்பாய்வு அறிக்கையை எவ்வாறு பெறலாம்: நாடாளுமன்றத்தில் பொருளாதார மதிப்பாய்வு அறிக்கை தாக்கல் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது பொதுமக்களின் பார்வைகக்கும் பயன்பாட்டிற்கும் கிடைக்கிறது. இதனை பொதுமக்கள் ‘www.indiabudget.gov.in/economicsurvey‘ என்ற இணைய முகவரியில் படிக்கவும் பதிவிறக்கமும் செய்யலாம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x