Published : 03 Jan 2023 04:07 AM
Last Updated : 03 Jan 2023 04:07 AM

உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்ததால் உதகையில் விளையும் கிளைகோஸ் ஒரு கிலோ ரூ.515

உதகை: பனிக்காலத்தில் அறுவடை செய்யப்படும் ‘பிரசில்ஸ் ஸ்பிரவுட்ஸ்’ எனப்படும் கிளைகோஸ்கள், சந்தையில் அதிக விலைக்கு விற்பனையாவது வழக்கம் என்றாலும், இந்த ஆண்டு கிளைகோஸ் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில், தேயிலைக்கு அடுத்தபடியாக காய்கறிகள் விவசாயம் பெருமளவில் நடந்து வருகிறது. அதன்படி கேரட், பீட்ரூட் உட்பட ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட காய்கறிகள் விளைச்சல் ஒருபுறம் இருந்தாலும், சைனீஸ் ரக காய்கறிகளை உற்பத்தி செய்வதிலும் விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோடப்பமந்து, தாம்பட்டி, கொதுமுடி, தூனேரி, கூக்கல்தொரை, ஒரநள்ளி, கேத்தி உள்ளிட்ட உதகை சுற்றுவட்டார பகுதிகளிலும், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் சுகுணி, ரெட் கேபேஜ், சைனீஸ் கேபேஜ், புரூக்கோலி, செல்லரி, லெட்யூஸ், ஸ்பிரிங் ஆனியன் உள்ளிட்ட சைனீஸ் காய்கறிகளும் விளைவிக்கப்படுகின்றன.

இந்த வகை காய்கறிகள் சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களிலுள்ள நட்சத்திர ஒட்டல்களில், நூடுல்ஸ், சூப், பர்கர் மற்றும் துரித உணவுகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அசைவ பிரியர்களுக்கு மீன், ஆட்டுக்கறி இருப்பதைபோல, சைவப் பிரியர்களுக்கு இந்த மாதிரியான காய்கறிகள் சுவை தருவதாக கூறப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கக்கூடிய சைனீஸ் காய்கறிகள், ஒவ்வொரு நாளும் காலையில் உதகை மார்க்கெட்டில் ஏலம் விடப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தநிலையில், புத்தாண்டு காரணமாக தற்போது சைனீஸ் காய்கறிகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. ‘பிரசில்ஸ் ஸ்பிரவுட்ஸ்’ எனப்படும் கிளைகோஸ் கிலோ ரூ.515-க்கு விற்பனையானது.

சாதாரண நாட்களில் ரூ.100 முதல் 150 வரை விற்பனையாகி வந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல, சாதாரண நாட்களில் ரூ.10 வரை விற்பனையாகி வந்த சுகுணி காய், தற்போது ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளது. ரூ.100 வரை விற்பனையாகி வந்த புரூக்கோலி தற்போது ரூ.220-க்கும், ரூ.40-க்கு விற்பனையான லீக்ஸ் ரூ.80 வரையும் விலை உயர்ந்துள்ளன.

இதுகுறித்து கிளைகோஸ் பயிரிட்ட விவசாயிகள் கூறும்போது, "எப்போதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நேரத்தில் நல்ல விலை கிடைக்கும். ஆனால், இந்த முறை எதிர்பார்த்ததைவிட அதிகமாக கிடைத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக கிலோ ரூ.500-ஐ கடந்துள்ளது. இந்த பயிரை, குறைந்த அளவிலான விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இம்மாத இறுதி வரை விலை உயர்வு இருக்கும்" என்றனர்.

தோட்டக்கலை துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலா மேரி கூறும்போது, "கிளைகோஸ் காய்கறியை பொறுத்தவரை கேரட் மாதிரி ஏக்கர் கணக்கில் பயிரிடுவது கிடையாது. 10 சென்ட் அல்லது 20 சென்ட் என்று அளவாக பயிரிடுகின்றனர். நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தமே சுமார் 20 ஹெக்டேர் வரை மட்டுமே கிளைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது. உற்பத்தி குறைந்ததால், தேவை ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x