Last Updated : 28 Jul, 2014 10:00 AM

 

Published : 28 Jul 2014 10:00 AM
Last Updated : 28 Jul 2014 10:00 AM

கடனை குறைத்து முதலீட்டை அதிகரிப்போம்

பல்வேறு முதலீட்டு வகைகளையும் அதன் செயல்பாடு, அதனுடைய ரிஸ்க் மற்றும் வருமானம் முதலியவற்றையும் பார்த்தோம். பலர் என்னிடம் பணம் இல்லை, இருந்தால் தானே முதலீடு செய்வது பற்றி எல்லாம் யோசிப்பது என்று கேட்டிருந்தார்கள்.

முதலீடு செய்ய முடியாததற்கு காரணம் அவர்களிடம் கடன் அதிகமாக இருப்பது. ஒன்று வருமானத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது செலவுகளை குறைக்கவேண்டும். வருமானத்தை அதிகரிப்பது அவ்வளவு எளிதல்ல; செலவை குறைப்பது என்பது ஓரளவிற்கு சாத்தியம். கடன் என்பது நோயை போன்றது. சிலர் ஆரம்பத்திலேயே அதை உணர்வர். பலர் காலம் கடந்த பின்புதான் அதை உணரு வார்கள்.

கடன் வாங்கியவர்கள் எவ்வளவு உழைத்தாலும் ஓட்டை வாளியில் தண்ணீர் எடுத்துச் செல்வது போலத்தான். எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும், தரமான வாளியை உபயோகித்தாலும் அந்த ஓட்டையை அடைக்காவிட்டால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதேபோல நம்முடைய கடனும். கொஞ்சம் உற்று நோக்கினால் ஒவ்வொரு கடனும் ஒவ்வொரு வட்டி விகிதத்தில் இருக்கும். இதை அறியாமல் பலர் அதை தொடர்ந்து கொண்டே இருந்தால் நஷ்டம்தான் வரும்.

கடன்கள் பலவகை

கடன்களில் பொதுவானவை வீட்டுக்கடன், தனி நபர் கடன்- வங்கி மற்றும் சில நிறுவனங்களில் வாங்குவது, நிறைய பேர் கந்து வட்டி என்று சொல்லகூடிய மிக அதிகம் உள்ள வட்டியை தனி நபரிடம் வாங்குவது. கிரெடிட் கார்ட், இன்ஷூரன்ஸ் பாலிசி, வீடு மற்றும் தங்கம் போன்ற பொருள்களை வைத்து கடன் வாங்குதல் என்று நிறைய வகைகள் உண்டு. இதில் எல்லா கடனும் ஒரே வட்டி விகிதம் கொண்டதல்ல. கந்து வட்டி மிக அதிகம், வீட்டுக் கடன் வட்டி மிகக்குறைவு.

முடிவு எப்போது?

கடன் வாங்குபவர்களில் பலருக்கு தற்போதைய தேவை தான் பெரியதாக உள்ளது, அதிலிருந்து மீளப்போகிறோம் என்று மிகப்பெரிய கடனில் மாட்டி கொள்வதுண்டு. இதை புரிந்து கொள்வது என்பது ஒன்றும் கடினமான செயல் இல்லை. நீங்கள் வாங்கக்கூடிய கடன் மற்றும் நீங்கள் செலுத்தவேண்டிய மாதத் தவணை எத்தனை மாதங்களுக்கு என்று எளிதில் உணர முடியும்.

மாதத் தவணையை, நாம் கட்டக்கூடிய மாத எண்ணிக் கையுடன் பெருக்கினால் நாம் செலுத்த வேண்டிய தொகை தெரிந்து விடும். இதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கினால் உங்களால் எளிதாக புரிந்து கொள்ளமுடியும்.

ஒருவர் வீட்டுக்கடன் ரூ. 25 லட்சம் வாங்குகிறார், அதற்கு வட்டி 11%, கால அவகாசம் 20 வருடம் என்றால் அவர் கட்டக்கூடிய மாத தவணை ரூ. 25,805. அதை 240 மாதங்களுடன் பெருக்கினால் வரக்கூடிய தொகை ரூ. 61,93,130. ஏறக்குறைய ரூ. 62 லட்சம். உடனே பலரும் இந்த தொகையை பார்த்து கவலைப்படுவதுண்டு. பெரிய தொகை, ஆனால் வருடங்கள் அதிகம். நாம் கட்டக்கூடிய தொகை மாதா மாதம் ஒரே தொகைதான். ஆனால் கொஞ்சம் ஏற்ற இறக்கம் இருக்கும். அதை கணக்கில் கொள்ளவேண்டாம்.

அந்த 25 லட்சம் ரூபாயை நாம் வங்கியில் போடும்போது நமக்கு 8% வட்டி கொடுத்தால் வருடா வருடம் நமக்கு 2 லட்சம் கிடைக்கும் அதை 20 வருடங்களோடு பெருக்கினால் 2x20=40 லட்சம் மற்றும் நம்முடைய அசல் 25 லட்சம் அதில் ரூ. 65 லட்சம் கிடைக்கும். மேலும் 20 வருடம் என்பதால் நம்முடைய வாழ்விலும் நல்ல முன்னேற்றம் இருப்பதால் இதை சமாளிப்பது ஒரு பெரிய விஷயமே இல்லை என்று சொல்லலாம்.

வீட்டுக்கடனை சீக்கிரம் அடைத்தல் என்பது சரியான செயல் இல்லை. வீட்டுக் கடனுக்கு வரிச்சலுகை கிடைக்கும். இரண்டாவது நமக்கு கிடைக்கக்கூடிய கடன்களில் மிகவும் குறைந்த வட்டிக்கு கிடைப்பது இது ஒன்றுதான். ஆனாலும் இதை நம் வயதுக்கேற்ப அதிக கால அவகாசம் எடுத்துகொள்வதும் நல்லது.

அதே சமயம் கந்து வட்டியில் ரூ. 5 லட்சம் வாங்கினால் 3 வட்டி என எடுத்துக்கொண்டால் மாதம் ரூ.15,000 கட்டவேண்டும். 3 வருடத்தில் நாம் வாங்கிய பணத்தை விட அதிகமாக வட்டியே கட்டி இருப்போம். 15x36=540. அதாவது ரூ. 5.40 லட்சம். இன்னும் அசல் அப்படியே இருக்கும்.

மேலே சொன்ன இரண்டு உதாரணங்களும் மிகக்குறைவு மற்றும் மிக அதிகமான வட்டிகள். மற்றவை யாவும் இதற்குள் அடங்கும். ஒருவருக்கு இதர வழிகளில் கடன்கள் அதிகம் இருந்தால் 5 வருடத்திற்கு முன்பு வாங்கிய வீட்டின் மதிப்பு இப்போது உயர்ந்திருக்கும். அதற்கேற்ப கூடுதல் பணம் வாங்கினால் அதை மற்ற கடன்களுக்கு வட்டி கொடுத்து அடைத்து விடலாம்.

கடன் மறுசீரமைப்பு மிகவும் முக்கியமான ஒன்று. கடன்களை சீராக்கவில்லை என்றால் ஏற்கெனவே சொன்னதுபோல எவ்வளவு சம்பாதித்தாலும் வீண்தான். இதைப்பற்றி தெரியாததால்தான் பலர் அவதிப்படுகின்றனர். நிதி ஆலோசகரின் உதவியுடன் சரி செய்துகொள்வது நல்லது.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழியை கேள்விப் பட்டிருக்கிறோம் அதுபோல கடன் இல்லாமல் இருந்தால் தான் நம்மால் முதலீடு செய்வது, மேலும் அதைப்பெருக்குவது என்று நினைக்க முடியும். நாம் எவ்வளவு சம்பாதிக் கிறோம் என்பது முக்கியமில்லை. மாத இறுதியில் நம்மிடம் எவ்வளவு பணம் மிச்சப்படுகிறது, அதை எவ்வாறு திறம்பட முதலீடு செய்கிறோம் என்பதில் தான் ஒருவருடைய வெற்றி இருக்கிறது.

கடன் கொஞ்சம் நம்மை அழுத்த ஆரம்பித்தவுடன் அதற் கான தீர்வை தேடவேண்டும். இல்லை கொஞ்சம் நாமே சமாளிக் கலாம் என்று நினைப்பது பெரிய அழிவைத் தேடுவதற்கு சமம்.

சாராம்சம்: கடன் வாங்காமல் இருக்க முடியாது என்பது எப்படி உண்மையோ அதேபோல அதிக கடன் ஆபத்து என்பதும் உண்மை. நீண்ட காலத்துக்கு கடன் வாங்குகிறீர்கள் என்றால் வரும் நாட்களில் சம்பளம் உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் முதலியவற்றை யோசித்தே முடிவெடுக்கவேண்டும்.

பலர் எளிதாக கடன் கிடைக்கிறது என்று பார்க்கக் கூடிய எல்லாவற்றையும் வாங்கி விடுவார்கள். மேலும் இன்று வீடு தேடி வந்து கடன் கொடுக்கிறார்கள். தினசரி மொபைல் போனில் கூப்பிட்டு கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வதால் நாம் இதில் எளிதாக மாட்டிக்கொள்கிறோம்.

இயந்திரத்தனமான இன்றைய வாழ்வில் நமக்கென்று நேரம் ஒதுக்காததே இதற்கு முக்கிய காரணம். வாரம் ஒருமுறை ஒரு மணி நேரம் ஒதுக்கி நம்முடைய வாழ்வை அசை போட்டால் பல துன்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். கடன் வாங்கும்போதே பொறுப்புடன் செயல்பட்டால் கடன் சீரமைப்பு நிலைக்கே நாம் வரவேண்டியதில்லை. சிலரைப் போல பணத்தை முதலீடு செய்து அதை பெருக்குவதில் நாம் கவனம் கொண்டிருப்போம். கடனிலிருந்து மீண்டு பணம் செய்யலாம்! வாருங்கள்.

padmanaban@fortuneplanners.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x