Published : 13 Dec 2022 05:47 AM
Last Updated : 13 Dec 2022 05:47 AM

டேங்கர் கப்பல் தயாரிக்க இந்தியாவுக்கு உதவி - ரஷ்ய துணைப் பிரதமர் அறிவிப்பு

மாஸ்கோ: கச்சா எண்ணெய் விலை மீதான ஜி7 நாடுகளின் உச்சவரம்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை சமாளிக்க, மிகப்பெரிய டேங்கர் கப்பலை தயாரிக்க இந்தியாவுக்கு உதவ தயார் என ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இதையடுத்து, கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் வழங்க ரஷ்யா முன்வந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இந்தியா, அந்த நாட்டிடமிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயை அதிகரித்தது.

இதனால் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ததில் ரஷ்யா முதலிடம் பிடித்தது. இதற்கு முன்பு ஈராக், சவுதி அரேபியா ஆகிய நாடுகள்தான் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முன்னிலை வகித்தன.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் முடிவுக்கு மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், நாட்டு நலன் கருதி குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வாங்க உரிமை உள்ளது என இந்தியா கூறி வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் பணிய மறுக்கும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வருவாயை குறைக்க ஜி7 மற்றும் ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளன.

இதற்காக, கடந்த 5-ம் தேதி கச்சா எண்ணெய் விலை மீது உச்சவரம்பை அறிவித்துள்ளன. அதாவது பீப்பாய் ஒன்றுக்கு 60 அமெரிக்க டாலருக்கு மேல் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்க முடியாது.

மேலும் உச்ச வரம்பை மீறி கூடுதல் விலையில் விற்கப்படும் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்ல கப்பல்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 5-ம் தேதிக்கு முன்பே கப்பலில் ஏற்றப்பட்ட கச்சா எண்ணெயை ஜனவரி 19-ம் தேதிக்குள் விநியோகிக்க தடை இல்லை.

இந்த சூழ்நிலையில், உச்ச வரம்பு நிர்ணயித்தாலும், ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதை ரஷ்யா வரவேற்றுள்ளது.

இதனிடையே, ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதர் பவன் கபூரை சமீபத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்ய கச்சா எண்ணெய் மீது விதிக்கப்பட்டுள்ள விலை உச்ச வரம்பை ஆதரிக்கப் போவதில்லை என்ற இந்தியாவின் முடிவை துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் வரவேற்றுள்ளார். மேலும் ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த கப்பல் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையை சமாளிக்க பெரிய டேங்கர் கப்பல் களை தயாரிக்கவோ குத்தகைக்கு எடுக்கவோ இந்தியாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x