Published : 10 Jul 2014 10:00 AM
Last Updated : 10 Jul 2014 10:00 AM

பணியாளர்களின் தேவையை புரிந்துகொள்ளுங்கள்

மனித வள மேம்பாட்டின் தொடர்ச்சியை இவ்வாரமும் காண்போம். சிறிய நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தொழில் பற்றிய அறிவு (exposure) மிக நன்றாக கிடைக்கும். சிறிய நிறுவனம் என்பதால் இலாகாக்கள் என்று அங்கு தனித்தனியாக இருக்காது. ஆகவே தொழில் பற்றிய நுணுக்கங்களை நன்றாகக் கற்றுக்கொள்ளலாம்.

சில காலம் முன்பு ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் 1960 – களில் இன்ஜினீயரிங் முடித்தார். அவருடன் படித்த சக நண்பர்களுக்கு மின்சார வாரியம், பொதுப்பணித்துறை போன்றவற்றில் வேலை கிடைத்தது. இவருக்கோ அது போன்ற நல்ல வேலை கிடைக்கவில்லை. அவர் சென்னை புறநகர் பகுதியிலுள்ள ஒரு சின்ன இன்ஜினீயரிங் யூனிட்டில் வேலைக்குச் சேர்ந்தார். சில காலங்கள் வேலை செய்துவிட்டு சம்பளம் போதவில்லை என்பதால் அவரே அதுபோன்ற ஒரு சிறிய யூனிட்டை தொடங்கினார்.

காலம் வேகமாக ஓடியது. அவர் நண்பர்கள் சில காலம் முன்பு ஓய்வு பெற்றார்கள். அவர்களுடன் ஒப்பிடும்பொழுது நண்பருடைய நிதி நிலைமை மற்றும் வாழ்க்கைத்தரம் மிகவும் உயர்வாக இருந்தது. வேலையில் கிடைக்கும் திருப்தி, சொத்துக்கள், வசதிகள் என அனைத்துமே அவருக்கு திருப்திகரமாக இருந்தது. ஆகவே தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள், தொழிலில் ஆர்வத்துடன் வேலை செய்ய நினைப்பவர்கள், பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள விருப்பப்படுபவர்கள் போன்ற அனைவருக்கும் சிறுதொழில் நிறுவனங்களில் வேலை செய்வது ஒரு வரப்பிரசாதம் ஆகும். சொந்தமாக தொழில் துவங்க நினைப்பவர்கள் சிறிய நிறுவனங்களில் பணிபுரிவதே சிறந்தது.

சிறுதொழில் செய்பவர்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினை வேலையாட்கள் விலகிச் செல்வது ஆகும். இதைச் சமாளிப்பதற்கு சிறு தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தையும் வசதிகளையும் சந்தையை ஒட்டி கொடுக்க வேண்டும்.

மேலும் ஊழியர்களை கையாளும் முறை மிகவும் நன்றாக இருக்க வேண்டும். அது தவிர அவர்களின் வேலைத் திறமைக்கு ஏற்ப ரிவார்டுகளையும் ஏற்படுத்தி வைக்க வேண்டும். இந்த ரிவார்டு என்பது ஒவ்வொரு வகைத் தொழிலிற்கும் மாறுபடும். அத்துறையில் உள்ள பெஞ்ச்மார்க்கைப் (benchmark) பொறுத்து நீங்கள் ஊழியர்களுக்கு கொடுக்கும் சலுகைகளை (benefits) அமைத்துக்கொள்ளுங்கள். இவை தவிர பெரிய நிறுவனங்களைப் போல மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, பி.எஃப் போன்றவற்றையும் ஏற்படுத்திக் கொடுங்கள்.

இவற்றையெல்லாம் கொடுத்து விட்டு எனக்கு என்ன மிஞ்சும் என்று நீங்கள் கேட்கலாம். இவற்றை நான் தொழில் தொடங்கிய முதல் நாளே உங்களை கொடுக்கச் சொல்லவில்லை. தொழில் வளர வளர, உங்கள் வருமானம் உயர உயர, நீங்கள் உங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகளையும் அதிகரிப்பது நல்லது. இவை தவிர நீண்ட நாள் உங்களிடம் இருக்கும் ஊழியர்களின் குழந்தையின் கல்விச் செலவு போன்றவற்றிற்கும் நீங்கள் கொடுத்து உதவலாம். இதுபோல் பார்த்து பார்த்துச் செய்ய, சிறிய நிறுவனங்களால் மட்டுமே முடியும்.

நீங்கள் உங்களால் முடிந்த சலுகைகளை ஏற்படுத்திக் கொடுத்தும், உங்களை விட்டு விலகிச் செல்லும் ஊழியர்களை நீங்கள் தடுக்க முடியாது. ஆகவே விலகிச் செல்பவர்களைப் பார்த்து கவலை கொள்ளாதீர்கள். இந்தியாவில் வேலை செய்ய ஆட்களுக்குப் பஞ்சமில்லை. நீங்கள் நபர்களை பொறுக்கி எடுத்து பயிற்சி தர வேண்டி இருக்கும். அடிக்கடி வேலையை விட்டுச் செல்லும் ஊழியர்களை சமாளிப்பதற்கு, 10 – 30% அதிக ஊழியர்களை பணியில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதுபோல் விடுமுறை தினங்களையும், பெரிய நிறுவனங்களைப்போல் வருடத்தின் முதல் தேதியிலேயே அறிவித்து விடுங்கள். பண்டிகை மற்றும் அரசாங்க விடுமுறைகள் வருடத்திற்கு எப்படியும் 10 நாட்களாவது வந்து விடும். அதுபோல் ஊழியர்கள் தற்காலிக விடுப்பு எடுப்பதற்கு வருடத்திற்கு ஒரு 15 நாட்களாவது நீங்கள் கொடுக்குமாறு இருக்கும். பிறகு வார விடுமுறை இருக்கவே இருக்கிறது. உங்களின் நிறுவனத்திற்கென்று வேலை செய்யும் நேரத்தையும் அறிவித்து விடுங்கள். இவ்வாறு செய்யும் பொழுதுதான், உங்களுக்கும் ஓய்வு கிடைக்கும், நிறுவனத்தில் வேலைசெய்யும் அனைவருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்.

நீங்கள் சிறிய நிறுவனம் என்பதால் ஊழியர்களும் உங்களிடம் சமமாக பழகுவார்கள். அப்பொழுது அவர்களின் தேவைகள் மற்றும் கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் உங்களுக்குப் புரிய வரும். அவற்றைப் பொறுத்து ஒவ்வொரு ஊழியர்களின் தேவையும் உங்களுக்குத் தெரிய வரும். இது, சம்பள அட்வான்ஸ் கொடுப்பதில் ஆகட்டும், அல்லது வேலை செய்யும் நேரத்தைச் சற்று மாற்றிக்கொடுப்பதில் ஆகட்டும், அல்லது அவர்களுக்கு உரிய பயிற்சி கொடுப்பதில் ஆகட்டும், நீங்கள் அவர்களுக்கு சிறப்பாகச் செய்து கொடுக்கலாம்.

சிலர் உங்கள் நிறுவனத்தை விட்டுச் சென்றாலும் நாம் மேற்கூறியபடி ஒவ்வொரு ஊழியர்களின் வேலைத் திறமையை அறிந்து, அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும்பொழுது அவர்கள் உங்களிடம் நீண்ட காலத்திற்கு இருக்கவே விருப்பப்படுவார்கள். சுருக்கமாகச் சொன்னால் உங்களது பெரிய குடும்பத்தின் உறுப்பினர்களைப் போல அவர்களை நடத்துங்கள். வெற்றி உங்கள் இருவருக்குமே கிட்டும்!

prakala@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x