Last Updated : 22 Nov, 2022 04:05 AM

 

Published : 22 Nov 2022 04:05 AM
Last Updated : 22 Nov 2022 04:05 AM

கார்பன் உற்பத்தி, சிமென்ட் ஷீட் தயாரிப்புக்காக உடுமலையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தடுக்கு

உடுமலை: உடுமலையில் இருந்து வெளிநாடுகளுக்கு தடுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், தடுக்கு பின்னும் தொழிலாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 50,000 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. இத்தொழிலை சார்ந்து தென்னை நார், கயிறு மற்றும் தடுக்கு தொழில் நடைபெற்று வருகிறது. உடுமலையில் இருந்து தளி செல்லும் வழியில் உள்ள ஜல்லிப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தென்னை ஓலைகளைக் கொண்டு தடுக்கு பின்னும் தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

அருகில் உள்ள தென்னந்தோப்புகளில் தென்னங்கீற்றுகளை விலைக்கு வாங்கி, அதனை அங்குள்ள கசிவுநீர் குட்டையில் ஊற வைத்து, பின்னர் அவற்றை தடுக்குகளாக உருவாக்குகின்றனர். இவை, பந்தல், கூரை வேய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், உடுமலையில் இருந்து இடைத்தரகர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு தடுக்குகள் ஏற்றுமதியாகி வருவதாக தடுக்கு பின்னும் தொழிலாளர்கள் உற்சாகமாக தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: ஒரு நாளைக்கு 50 தடுக்குகள் வரை ஒருவரால் பின்ன முடியும். உடுமலை சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கு வருமானம் ஈட்டித்தரும் தொழிலாக தடுக்கு பின்னும் தொழில் உள்ளது. 25 தடுக்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது. பந்தல் ஒப்பந்ததாரர்கள், கிராமப்புற மக்கள், விவசாயிகள்தான் இதனை அதிகளவில் வாங்கி வந்தனர். ஆனால் ‘கூலிங் ஷீட்’கள் வரவுக்குப்பின், பெரும்பாலானோர் தடுக்குகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

காரணம், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தடுக்குகளை மாற்ற வேண்டும். மரங்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளன. ‘கூலிங் ஷீட்’கள் அமைப்பதால் 20 முதல் 30 ஆண்டுகள் வரை எந்த செலவும் ஏற்படுவதில்லை. இந்தியாவை காட்டிலும், வெளிநாடுகளில் தடுக்கு விற்பனை அமோகமாக இருப்பதாக இடைத்தரகர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அவர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு தடுக்குகளை ஏற்றுமதி செய்து வருகிறோம்.

வெளிநாடுகளில் கார்பன் உற்பத்திக்காகவும், சிமென்ட் ஷீட் தயாரிப்புக்காகவும் தடுக்குகள் மூலப்பொருளாக பயன்படுவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே தேங்காய், தென்னை நார் கழிவுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வரும் நிலையில், தற்போது தடுக்குகளும் ஏற்றுமதி செய்யப்படுவதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x