Published : 10 Nov 2022 06:37 AM
Last Updated : 10 Nov 2022 06:37 AM

2027-ல் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாக திகழும் - சர்வதேச முதலீட்டு வங்கி மோர்கன் ஸ்டான்லி கணிப்பு

புதுடெல்லி: இந்தியா 2027-ல் பொருளாதார ரீதியாக 3-வது பெரிய நாடாக உருவாகும் என்று அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.

முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருளாதாரக் கொள்கைகள், மக்கள் தொகை எண்ணிக்கை, டிஜிட்டல் கட்டமைப்பு ஆகியவை இந்தியாவை பொருளாதார ரீதியாக 3-வது பெரிய நாடாக மாற்றும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அந்நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் 2030-ல் இந்தியா 3-வது பெரிய நாடாக மாறும் என்று குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வளர்ச்சியை 2027-ம் ஆண்டிலேயே இந்தியா எட்டும் என்று புதிய கணிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் ஜிடிபி தற்போது 3.4 டிரில்லியன் டாலராக உள்ளது. இது அடுத்த 10 ஆண்டுகளில் 8.5 டிரில்லியன் டாலராக உயரும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து மோர்கன் ஸ்டான்லியின் ஆசியப் பிரிவின் தலைமை பொருளாதார நிபுணர் சேத்தன் அஹ்யா கூறியதாவது:

ஜிஎஸ்டி, நிறுவன வரி குறைப்பு, உற்பத்தி சார் ஊக்கத்தொகை திட்டம் ஆகியவை இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையில் கொண்டுவரப்பட்ட முக்கியமான மாற்றங்கள். இந்தியாவின் வளர்ச்சியில் அதன் டிஜிட்டல் கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய டிஜிட்டல் கட்டமைப்பானது ஆதாரை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மற்ற நாடுகளில் அது தனியார் தளங்களை அடிப்படை யாகக் கொண்டுள்ளது.

டிஜிட்டல் கட்டமைப்பை மேலும் விரிவாக்குவதற்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்து வருகிறது. அது நுகர்வோருக்கும் தொழில்களுக்கும் இடையிலான தூரத்தைக் குறைக்கும். இ-காமர்ஸில் இந்தியாவின் புதிய முன்னெடுப்பான ஓஎன்டிசி கட்டமைப்பு ஒரு முக்கிய உதாரணமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்போது உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டி யலில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x