Last Updated : 15 Jul, 2014 12:00 AM

 

Published : 15 Jul 2014 12:00 AM
Last Updated : 15 Jul 2014 12:00 AM

மாத சம்பளதாரர்களை ஏமாற்றிய பட்ஜெட்!

ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டாலும், இந்த முறை அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை இந்த பட்ஜெட் ஏற்படுத்தியிருந்தது என்று கூறினால் அது மிகையல்ல. மோடி அரசின் முதலாவது பட்ஜெட் என்பதோடு அதிகபட்ச சலுகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மாதாந்திர சம்பளதாரர்களிடையே மேலோங்கியிருந்தது.

சூப்பர் பட்ஜெட் என பல தரப்பினரால் பாராட்டப்பட்டாலும் மாதாந்திர சம்பளதாரர்களைப் பொறுத்தமட்டில் இது ஏமாற்ற மளிக்கும் பட்ஜெட் என்பதில் சந்தேகமில்லை.

மாதாந்திர சம்பளதாரர்களுக்கு இது எந்த வகையில் ஏமாற்ற மளிக்கும் பட்ஜெட்டாக அமைந்தது என்று அவர்களது கோணத்தி லிருந்தே பார்க்கலாம்.

மற்ற பிரிவினருடன் ஒப்பிடுகை யில் அரசுக்கு முறையாக வரி செலுத்துபவர்கள் மாதாந்திர சம்பளதாரர்கள்தான். மற்றவர் களுக்கு வர்த்தகம் மூலமாக வருமானம், முதலீட்டு வருமானம் என பல வழிகளில் வருமானம் வரும். ஆனால் மாதந்திர சம்பள தாரர்களுக்கு வேறு வகையான வருமானம் கிடையாது. ஊழியர் களுக்கு சம்பளம் அளிக்கும் முன்பாக அவர் செலுத்த வேண்டிய வருமான வரியை பிடித்தம் செய்த பிறகே அவருக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

வரி குறித்து முன்கூட்டியே திட்டமிடுவதற்கான வாய்ப்புகள் மாதாந்திர சம்பளதாரர்களுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. அதிகபட்சம் 80 சி பிரிவின் கீழ் செய்யப்படும் முதலீடுகளுக்கும் மற்றும் வீட்டு கடன் வட்டிக்கான (பிரிவு 24) விலக்குகள் மட்டுமே கிடைக்கும்.

வீட்டுக் கடனுக்குச் செலுத்தப் படும் வட்டிக்கு 80சி பிரிவில் கீழ் அளிக்கப்படும் வருமான வரிச் சலுகை புதியது அல்ல. இந்த சலுகை அனைத்துப் பிரிவினருக் கும் பொதுவாகக் கிடைக்கிறது.

மாதாந்திர சம்பளதாரர்களுக் கென எந்தவித சிறப்பு சலுகை யையும் எந்த ஒரு அரசும் அளிக்க முன்வராதது மிகவும் துரதிருஷ்டமாகும். அந்த வகையில் மோடி அரசும் எந்த சலுகையையும் அறிவிக்கவில்லை.

முன்பு மாதாந்திர சம்பளதாரர் களுக்கென நிர்ணயிக்கப்பட்ட கழிவு (Standard deductions) அளிக்கப்பட்டது. ஆனால் எந்தவித காரணமும் இன்றி இந்த சலுகை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்பார்ப்புகள் கேட்கப்படும். தொழிற்சங்கங்களும் வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துமாறு கேட்பது வழக்கமாக உள்ளது. ஆனால் சம்பளதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிர்ணயிக்கப்பட்ட கழிவு சலு கையை மீண்டும் அளிக்க வேண்டும் என வலியுறுத்துவதில்லை.

இது தவிர, மாதாந்திர சம்பள தாரர்கள் பயனடையும் வகையில் பல்வேறு சலுகைகள் உள்ளன. ஆனால் எந்த அரசும் இத்தகைய சலுகைகளை வழங்குவதில்லை. இத்தகைய சலுகை திரும்பப் பெறப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டபடியால் மீண்டும் அத்தகைய சலுகையைத் தர எந்த அரசும் முன்வருவதில்லை.

பணவீக்கம் காரணமாக ரூபாயின் மதிப்பு குறைந்தபோதி லும், அதற்கேற்ப வரிச் சலுகை பல ஆண்டுகளாகவே வழங்கப்படவில்லை.

சம்பளதாரர்களுக்கு உள்ள சில சலுகைகள்

1. வாகன அலவன்ஸ் (மாதம் ரூ. 800 என்ற அளவில் நீண்ட காலமாகவே உள்ளது).

2. சில வரையறுக்கப்பட்ட ஊழியர்களுக்கு (Specified employees) சில சலுகைகள் கிடையாது. ஒரு நிறுவனத்தின் இயக்குநர் அல்லது நிறுவனத்தில் 20 சதவீதம் பங்குகளை வைத்துக் கொண்டு அங்கு பணிபுரிவோர் மற்றும் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ஊதியம் பெறுவோர் வரையறுக்கப்பட்ட ஊழியர்களாகக் கருதப்படுவர். ரூ. 50 ஆயிரம் அடிப்படை அளவாகக் கருதப்படுமேயாயின் இப்போது அடிப்படை வரி விலக்கு வரம்பு ரூ. 2,50,000 ஆக உள்ளது. ஆனால் இவ்விதம் சிறப்பு ஊழியர்களுக்கான சலுகை வரம்பு நீண்ட காலமாகவே மாற்றப்படாமல் உள்ளது. இதனால்தான் பெரும்பாலான மாதாந்திர சம்பளதாரர்கள் வரி விலக்கு சலுகையை அனுபவிக்க முடியாமல் உள்ளனர்.

3. ஊழியர்களுக்கு கேளிக்கை அலவன்ஸ் என்று தருவதுண்டு. வாடிக்கையாளர்களுக்கு நிறு வனங்கள் தருவதைப்போன்ற இந்த அலவன்ஸுக்கு வரிச் சலுகை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உண்டு. பிற தனியார் நிறுவன மாதாந்திர சம்பளதாரர்களுக்குக் கிடையாது.

4. குழந்தைகளின் கல்விக் கட்டண அலவன்ஸ் மாதம் ரூ. 100 வீதம் 2 குழந்தைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இது பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட வரம்பாகும். (ரூ. 100 மாத கட்டணத்தில் மாதாந்திர சம்பளதாரர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடியும் என அரசு கருதுகிறது போலும்.) 1997-ம் ஆண்டுக்குப் பிறகு இதில் மாற்றம் செய்யவில்லை.

5. இதேபோல விடுதிக் கட்ட ணம் மாதம் ரூ. 300 வீதம் 2 குழந் தைகளுக்கு அளிக்கப்படுகிறது. (எந்த விடுதியில் கட்டணம் இவ் வளவு குறைவாக உள்ளது) இந்த வரம்பும் நீண்ட காலமாக மாற்றிய மைக்கப்படவில்லை. மேலே கூறப் பட்டவை உதாரணங்கள்தான். இதுபோல 20 வகையான அலவன்ஸுகளுக்கான சலுகைகள் (பிரிவு 10 (14)) பல ஆண்டுகளாக திருத்தி அமைக்கப்படவில்லை.

6. இப்போது ஊழியர்கள் பணியிடம் மாறுவது சர்வ சாதாரணம். இவ்விதம் மாறும் போது முந்தைய நிறுவனத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக (3 மாத சம்பளம்) அளிக்கின்றனர். இவ்விதம் அளிக்கப்படும் தொகைக்கான கழிவை வருமான வரி விலக்கி லிருந்து பெற முடியாத துரதிருஷ்ட மான நிலையே உள்ளது. அதே சமயம் ஒரு நிறுவனம் ஊழியருக்கு இழப்பீடு அளிக்கும்போது அதற்கு வருமான வரி பிடித்தம் செய்யப்படுவது மட்டுமின்றி, நிறுவனம் செலுத்தும் தொகையை அந்த நிறுவனங்கள் செலவுக் கணக்காகக் காண்பித்து வருமான வரியில் சலுகை பெற முடியும்.

தொழிலதிபர் ஒருவர் ஒரு காரை வாங்கிப் பயன்படுத்தும்போது அதற்கு தேய்மானத்திற்கான சலு கையை அவர் அனுபவிக்கலாம். அதேபோல அந்த காரை மாதத் தவணையில் பெற்றிருந்தால் அதற்கு செலுத்தும் வட்டிக்கான சலுகையையும் அவர் பெற முடியும். அதேசமயம் மாத சம்பளம் பெறுவோர் ஒரு காரை வாங்கி அலுவலகம் செல்ல பயன்படுத்தினாலும் இதைப் போன்ற வரிச் சலுகையைப் பெற முடியாது.

மாதாந்திர சம்பளதாரர்களுக் கான தொழிற்சங்கங்களும் இது போன்ற சலுகைகள் தங்களுக்கும் வேண்டும் என்று கோரிக்கை வைப்பதில்லை. இதுபோன்ற சலுகைகள் இருக்கிறது என்பதே அவற்றுக்கு தெரியவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

மாதச் சம்பளம் பெறுவோருக்கான சில யோசனைகள்.

1 வீட்டுக் கடன் பெற்று அதற்கு தவணை செலுத்துவோர் அந்த வீட்டிலேயே குடியிருந்தால் அதற்கு வட்டித் தொகையில் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் சலுகையாகப்பெற முடியும். ஆனால் அதே வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால், அந்த வட்டிக்கு வரி விலக்கு வரம்பு கிடையாது. அவர் செலுத்தும் மொத்த வட்டித் தொகைக்கும் வரி விலக்கு சலுகையைப் பெற முடியும்.

2 நிறுவனம் ஒரு ஊழியருக்கு வீட்டு வாடகை அலவன்ஸ் அளிக்கிறது எனில் அவர் சொந்த வீட்டில் வசித்தால் அவர் வீட்டு வாடகை வரிச் சலுகையைப் பெற முடியாது. அவர் வாடகை வீட்டில் வசிப்பதாகவோ (பெற்றோ ருக்கே வீட்டு வாடகை அளித்தா லும்) அல்லது சொந்த வீட்டை வாடகைக்குவிட்டுவிட்டு வேறு இடத்தில் வாடகைக்கு குடியிருந் தாலும் வீட்டுக் கடனுக்கான வட்டிச் சலுகையை முழுமையாகப் பெற முடியும். மேலும் வீட்டு வாடகை அலவன்ஸுக்கான சலுகையையும் பெற முடியும்.

வெளியான பட்ஜெட்டில் அளிக் கப்பட்டுள்ள சலுகையைக் கணக் கிடும்போது அதில் அதிக சம்பளம் பெறுவோருக்குத்தான் அதிக சலுகை காட்டப்பட்டுள்ளது. மத்திய தர மக்களுக்கு இதில் சலுகைகள் மிகக் குறைவு.

இப்போது புரிகிறதா மாதாந்திர சம்பளதாரர்களுக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் என்று.

எஸ்.பாலாஜி- balthulca@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x