Published : 20 Oct 2022 03:50 PM
Last Updated : 20 Oct 2022 03:50 PM

கோவை | தீபாவளியை முன்னிட்டு விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

கோவை: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. மக்கள் சிரமமின்றி தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல பல்வேறு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களிலும் பயணசீட்டு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கோவையிலிருந்து இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் விமானங்களில் பயண கட்டணம் (பிரிமியம்) பல மடங்கு அதிகரித்துள்ளது. தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தினர் கூறியதாவது: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை - கோவை இடையே வழக்கமாக ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படும் பயணச்சீட்டு ரூ.14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக, அக்டோபர் 22-ம் தேதி பகலில் சென்னையில் இருந்து கோவைக்கு விமான கட்டணம் ரூ.13,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நாள் இரவு பயணத்துக்கு ரூ.12,800-க்கு பயணச்சீட்டு விற்பனை செய்யப்படு கிறது. மும்பை- கோவை இடையே இயக்கப்படும் விமானத்தில் வழக்கமாக ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படும் பயணச்சீட்டு தற்போது குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்துக்கு மேல்விற்பனை செய்யப்படுகிறது.

அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை - மும்பை இடையே இயக்கப்படும் விமானத்தில் சாதாரண வகுப்பு, பிசினஸ் கிளாஸ், பிரிமியம் உள்ளிட்ட பிரிவுகளில் பயணச்சீட்டு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி - கோவை இடையே வழக்கமான விமான கட்டணம் ரூ.7,500. தற்போது ரூ.11,500-வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை - பெங்களூரு இடையே இரண்டு விமானங்கள் இயக்கப்படும்போதும் பயணச்சீட்டு முன்பதிவு வழக்கம் போலவே இருக்கும். விமானத்தை விட சாலை வழியாக பலர் பயணிப்பதே இதற்கு காரணம். தீபாவளிக்கு பிறகு மீண்டும் பழைய கட்டணமே வசூலிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x