Last Updated : 09 Nov, 2016 10:07 AM

 

Published : 09 Nov 2016 10:07 AM
Last Updated : 09 Nov 2016 10:07 AM

கடந்த காலாண்டில் தங்கத்தின் தேவை 28% சரிவு: உலக தங்க கவுன்சில் அறிக்கை

கடந்த காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 28 சதவீதம் குறைந்திருக்கிறது. அதிக விலை, கிராமப்புற சந்தையில் பெரிய ஏற்றம் இல்லாதது ஆகிய காரணங்களால் தங்கத்தின் தேவை குறைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 271.1 டன் தங்கம் தேவைப்பட்டது. ஆனால் இப்போது 195 டன்னாக குறைந்திருக்கிறது.

கடந்த வருடம் இதே காலாண்டில் தேவை அதிகரித்தற்கு விலை குறைவும் ஒரு காரணமாகும். 10 கிராம் தங்கம் அப்போது 25,856 ரூபாய்க்கு விற்றதாக உலக தங்க கவுன்சில் தலைவர் பிஆர்.சோமசுந்தரம் தெரிவித்தார்.

மதிப்பு அடிப்படையில் 12 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.63,660 கோடி அளவுக்கு தேவை இருந்தது. ஆனால் இப்போது ரூ.55,970 கோடிக்கு தேவை குறைந்தது.

இது குறித்து உலக தங்க கவுன்சில் தலைவர் பி.ஆர்.சோமசுந்தரம் மேலும் கூறியதாவது: பொதுவாக விலை உயரும்போது, வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவது இயல்பு. தவிர உற்பத்தி வரி மற்றும் 2 லட்ச ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்குபவர்களின் பான் கார்டு தகவல் தேவை ஆகியவற்றுக்கு எதிராக வணிகர்கள் நடத்திய போராட்டம் ஆகியவை காரணமாக தேவை குறைந்தது. தற்போது பருவமழை ஓரளவுக்கு இருப்பதால் நடப்பு காலாண்டில் தங்கத்தின் தேவை வழக்கமான நிலையை எட்டும்.

சரக்கு மற்றும் சேவை வரியில் தங்கத்தின் மீதான வரி மிதமாக இருக்கிறது. இதனால் முறைப்படுத்தப்பட்ட நிறுவனங் களின் விற்பனையில் வளர்ச்சி இருக்கும். நடப்பு ஆண்டில் தங்கத்தின் தேவை 650 முதல் 750 டன் வரையில் இருக்க கூடும் என சோமசுந்தரம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x