Last Updated : 26 Oct, 2016 10:40 AM

 

Published : 26 Oct 2016 10:40 AM
Last Updated : 26 Oct 2016 10:40 AM

முதலிடத்தில் இருக்க முயற்சி செய்யுங்கள்: டாடா குழும சிஇஓ-க்களுக்கு ரத்தன் டாடா அறிவுரை

டாடா குழும நிறுவனங்களில் பணி புரியும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தங்களது தொழிலில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். தலைமை மாற்றத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று டாடா குழுமத்தின் இடைக் காலத் தலைவராக பொறுப் பேற்றுள்ள ரத்தன் டாடா கூறினார்.

திங்கள் கிழமை நடைபெற்ற டாடா சன்ஸ் இயக்குநர் குழு கூட்டத்தில் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி அதிரடியாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 4 மாதங்களுக்கு இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடா நியமிக்கப்பட்டதாக டாடா சன்ஸ் வெளி யிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

கார்ப்பரேட் உலகையே கலக்கிய இந்த அதிரடி மாற்றம் டாடா குழும பணியாளர்களிடையேயும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று, குழும நிறுவனங்களின் மூத்த தலைவர் கள், இயக்குநர்கள் ஆகியோர் மத்தியில் ரத்தன் டாடா உரை யாற்றினார். அப்போது பேசிய அவர் ``குழும நிறுவனங்கள் அவை சார்ந்த தொழிலில் கவனம் செலுத்த அந்தந்த நிறுவனங்களின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தையில் நிலவும் போட்டிகளை எதிர்கொள்வதற் கான உத்திகளை வகுக்க வேண் டும். தங்கள் தொழிலில் சந்தையில் முன்னணியில் இருப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடர வேண் டும். நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகளுடன் தங்களை பொருத்திப் பார்த்துக் கொள்ளக் கூடாது என்றார். உயர் அதிகாரிகள் மற்றும் அந்தப் பொறுப்பில் உள்ளவர்கள் அவர்களுக்கான இலக்கை செயல்படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டும்.’’

``கடந்த காலங்களில் உங்களு டன் இணைந்து பணியாற்றியதைப் போன்ற ஒத்துழைப்பை இனி வரும் காலங்களிலும் எதிர்பார்க்கிறேன். ஒரு நிறுவனமானது அதன் தலை வருக்கு அப்பாலும் சிறப்பாக செயல்படக் கூடியதாக இருக்க வேண்டும். உங்களைப் போன்ற தலைவர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றுவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தக் குழுமத்தை மிகவும் வலிமை யானதாக உருவாக்குவோம்,’’ என்று அவர் கூறினார்.

குழுமத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்குள்ளும் எது தேவை என்பதை கண்டறியும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. இந்த மதிப்பீடு நிகழ்வுகள் தொடரும், தேவைப்படும் நிறுவனங்களுக்கு அதற்குரிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். உங்கள் நிறுவனத் தில் ஏதேனும் மாற்றம் செய்வ தாயிருப்பின் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள உங்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவுகள் எடுக்கப்படும் என்று டாடா கூறினார்.

``தலைமைப் பொறுப்பில் வெற்றிடம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக குழுமத்தின் இடைக் காலத் தலைவராக பொறுப்பேற் றேன். இது குறுகிய கால ஏற்பாடு தான். விரைவிலேயே நிரந்தர தலைவர் ஒருவர் நியமிக்கப்படு வார்,’’ என்று அவர் கூறினார்.

பங்குகள் சரிவு

சைரஸ் மிஸ்திரி நீக்கப் பட்டதைத் தொடர்ந்து டாடா குழும நிறுவனங்களின் பங்கு விலைகள் கடுமையான சரிவைச் சந்தித்தன. டாடா எலெக்ஸி (0.6%), டாடா கம்யூனிகேஷன்ஸ் (3.85%), இந்தியன் ஹோட்டல்ஸ் (3.28%), டாடா கெமிக்கல்ஸ் (4.22%), டிரென்ட் (1%), டைட்டன் (1.85%), வோல்டாஸ் (2.6%), ராலிஸ் இந்தியா (0.8%), டாடா காபி (4.11%), டாடா குளோபல் பிவரேஜஸ் (3.66%), டாடா மெடாலிக்ஸ் (8.55%) ஆகிய பங்குகள் சரிந்தன. டாடா குழும நிறுவனங்களில் 29 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

டாடா சன்ஸ் கேவியட் மனு தாக்கல்

உச்ச நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய நிறுவன சட்ட ஆணையம் (என்சிஎல்டி) ஆகியவற்றில் டாடா குழுமம் கேவியட் மனுக்களை தாக்கல் செய்தது. அதில் டாடா சன்ஸ் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது தொடர்பாக மனு தாக்கல் செய்தால் அதில் தங்களது கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என்றும், ஒருதலைப்பட்சமாக (எக்ஸ்-பார்டி) தீர்ப்பு வழங்கிவிடக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சைரஸ் மிஸ்திரி நீக்கம் தொடர்பாக ஏதேனும் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக தங்களது தரப்பு கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என அதில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனிடையே ரத்தன் டாடா, டாடா சன்ஸ், சர் தோராப்ஜி அறக்கட்டளை ஆகியவற்றின் மீது மூன்று கேவியட் மனுக்களை சைரஸ் மிஸ்திரி இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்ததாக செய்திகள் வெளியானது. இந்த மனுக்களை சட்ட நிறுவனமான அமர்சந்த் மங்கள்தாஸ் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது.

மிஸ்திரி மறுப்பு:

ஆனால் எத்தகைய கேவியட் மனுவையும் தாக்கல் செய்யவில்லை என்று சைரஸ் மிஸ்திரி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படலாம் என அஞ்சும் ஒருவர் அத்தகைய நடவடிக்கையை எதிர்கொள்வதற்கு முன்பாக தற்காப்பு நடவடிக்கையாக தாக்கல் செய்வதே கேவியட் மனுவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x