Published : 19 Jun 2014 10:00 AM
Last Updated : 19 Jun 2014 10:00 AM

மார்க்கெட்டிங் மிக அவசியம் - 2

தொழில் ஆரம்பித்த காலத்தில், அதுவும் முதல் தலைமுறை தொழிலதிபராக இருக்கும் பட்சத்தில் முடிந்த அளவிற்கு செலவுகளைக் குறையுங்கள்.

பல சிறு தொழில் செய்யும் நிறுவனங்கள் குறுகிய காலத்திலேயே காணாமல் போவதற்கு முக்கியக் காரணம் மார்க்கெட்டிங்கில் பணத்தை அளவிற்கு அதிகமாக இறைத்து விடுவதுதான்! உங்கள் தொழில் ஓரளவு வளர்ச்சி பெற்றபின் நீங்கள் பத்திரிகை அல்லது தொலைக்காட்சி அல்லது விளம்பரப் பலகைகள் போன்றவற்றின் மூலம் உங்கள் தொழிலை விளம்பரப்படுத்தலாம். ஆகவே உங்கள் தொழில் நன்றாக லாபம் ஈட்டும்வரை பெரிய அளவு விளம்பரங்களில் குதித்து விட வேண்டாம்.

நீங்கள் உங்கள் வாடிக்கையாளருடன் அணுகும் விதம், பழகும் விதம், மேலும் அவர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் விதம் போன்றவற்றை வைத்தே உங்களிடம் அதிகமான வாடிக்கையாளர்கள் திரும்ப திரும்ப வருவார்கள். மேலும் அவர்களது நண்பர்களையும் உறவினர்களையும் உங்களிடம் வருவதற்கு பரிந்துரை செய்வார்கள்.

எத்தொழிலிக்கும் மார்க்கெட்டிங் என்பது மிகவும் அவசியமான ஒன்று. கடையை அல்லது அலுவலகத்தை திறந்து விட்டு வெறுமனே உட்கார்ந்திருந்தால், ஒரு வாடிக்கையாளர் கூட உங்களைத் தேடி வரமாட்டார். வாய் மூலமாகவோ, மின் அஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ அல்லது நோட்டீஸ் மூலமாகவோ நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை பிறருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அது மிக மிக அவசியம்.

மார்க்கெட்டிங் என்பது ஒரு தொழிலுக்கு உயிர் மூச்சைப் போன்றது என்பதை நினைவில் கொள்க! எவ்வளவு பெரிய நிறுவனங்களாக இருந்தாலும் அவற்றிற்கும் மார்க்கெட்டிங் மிகவும் அவசியமாகிறது. எவ்வளவுதான் மார்க்கெட்டிங் செய்தாலும் நாம் விற்கும் பொருள் தரமாக இல்லாவிட்டால் அதற்காக செலவிடும் பணம் விரயம்தான். ஆகவே மார்க்கெட்டிங் செய்வதற்கு முன் உங்களது பொருட்களின்/ சேவையின் தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள்.

உங்களுக்கென்று ஒவ்வொரு செயலுக்கும் அல்லது சேவைக்கும் ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு விற்பனை குறித்து கேள்வி வந்தால், அக்கேள்விக்கு 24 மணி நேரத்திற்குள் பதில் செய்து விடுவேன் என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.

அதேபோல் ஒரு ஆர்டர் வந்தால் எவ்வளவு நாட்களுக்குள் உங்களால் பூர்த்தி செய்ய முடியும் என்று வாடிக்கையாளருக்கு முன் கூட்டியே சொல்லி விடுங்கள். நமது ஒவ்வொரு சொல்லும் சத்தியமாக இருக்க வேண்டும். தொழிலில் அந்த சத்தியம் சிதையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மார்க்கெட்டிங் செய்வதற்கு முன்னால் எந்த மீடியம் உங்களுக்கு சரியாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். அந்த மீடியத்தில் எந்த நிறுவனம் மூலமாக விளம்பரம் கொடுத்தால் உங்களுக்கு அதிக ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு விளம்பரம் கொடுக்கும் பொழுது, எதன் மூலமாக குறைந்த பணத்தில் நிறைந்த விளம்பரம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் யோசித்து முடிவெடுக்கும்பொழுது செலவும் குறைவாக இருக்கும். அதே சமயத்தில் விளம்பரமும் பயனுள்ளதாக இருக்கும்.

நீங்கள் புதிதாக ஆரம்பிக்கும் தொழில் அனைத்துமே சில்லறை வாடிக்கையாளர்களை ஒட்டியே இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. பல சமயங்களில் நீங்கள் புதிதாக ஆரம்பிக்கும் தொழில்களுக்கு வாடிக்கையாளர்கள் நிறுவனங்களாக அல்லது அரசு அலுவலகங்களாக இருக்கலாம். அதுபோன்ற சமயத்தில் நீங்கள் பொட்டன்ஷியல் வாடிக்கையாளர்களை நேரில் சென்றுதான் பார்க்க வேண்டும்.

அவ்வாறு நீங்கள் நேரில் சென்று பார்த்து உங்கள் பொருட்கள் அல்லது சேவைகளைப் பற்றியும், பிற நிறுவனங்களை விட நீங்கள் எவ்வளவு சிறப்பாக செய்கிறீர்கள் என்றும் எடுத்துக்கூற வேண்டும். நீங்கள் ஒரு நிறுவனத்தைப் பார்த்தவுடன் உங்களுக்கு ஆர்டர் கிடைக்கும் என்று கனவு காணாதீர்கள். அந்நிறுவனங்களுடன் நீங்கள் தொடர்ச்சியாக உறவில் இருக்கும் பொழுதுதான் அவர்களிடமிருந்து உங்களுக்கு ஆர்டர் கிடைக்கும்.

ஆகவே எந்த நிறுவன வாடிக்கையாளரையும் ஒருமுறை பார்த்தவுடன், ஆர்டர் கிடைக்கவில்லையே என்று எண்ணி விட்டுவிடாதீர்கள். தொடர்ச்சியாக பலமுறை பார்க்கும்பொழுதுதான், உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

உங்களிடம் திருப்தி அடைந்த வாடிக்கையாளரிடம், அவர்களைப் போல உங்களின் சேவை/ பொருள் தேவைப்படும் நிறுவனங்களின் பெயர்களையும் அங்கு முக்கிய பொறுப்பில் இருப்பவர்களின் பெயர்களையும் கேட்டு வாங்கி பொட்டன்ஷியல் வாடிக்கையாளர்களை சென்று பாருங்கள். இவ்வாறு தான் ஒரு சங்கிலிபோல சில வருடங்களில் உங்கள் தொழில் பெரிதாக உச்சிக்குச் செல்லும். சிறுதுளிதான் பெரு வெள்ளமாகிறது.

ஆகவே மார்க்கெட்டிங் என்ற உயிர் மூச்சை உங்கள் வசதிக்கு மற்றும் தோதிற்கு ஏற்ப செய்து கொள்ளுங்கள்! உங்கள் தொழிலில் நீங்கள் வெற்றி அடைவது உறுதி!

prakala@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x