Published : 25 Aug 2022 09:10 AM
Last Updated : 25 Aug 2022 09:10 AM

குறுந்தொழில்பேட்டை வேண்டும்: முதல்வர் ஸ்டாலினிடம் கோவை தொழில்துறையினர் வேண்டுகோள்

கோவையில் இருந்து சர்வதேச விமான சேவையை அதிகரிக்க வேண்டும், குறுந்தொழில் பேட்டை தொடங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தொழில்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை பீளமேட்டில் உள்ள விமானநிலையத்தின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, கடந்த 2010-ல் சர்வதேச விமான நிலைய விரிவாக்க திட்டம் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 627 ஏக்கரில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில், நில ஆர்ஜித பணிகளை துரிதப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு, தேவையான நிதியை ஒதுக்கீடு செய்தார்.

இதனால் பணிகள் வேகமெடுத்துள்ளன. 70 சதவீதத்துக்கு மேல் நில ஆர்ஜித பணிகள் நிறைவடைந்துள்ளன. இது தொடர்பாக, கொங்கு குளோபல் போரம் (கேஜிஎஃப்) துணைத் தலைவர் வனிதா மோகன், இயக்குநர் டி.நந்தகுமார் ஆகியோர் கூறியதாவது:

ஏழு மாவட்டங்களில் உள்ள தொழில்முனைவோரை ஒன்றிணைத்து இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் தற்போது வழங்கப்படும் சேவையை அதிகரிக்க மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று வருகிறோம்.

முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை காரணமாக கோவை விமானநிலைய விரிவாக்க திட்டத்துக்கு தேவையான நில ஆர்ஜித பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளாக முடங்கி கிடந்த இத்திட்டம் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது, பயணிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு நிலங்களை ஒப்படைத்த மறுதினமே உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) நிதியுடன் தயாராக உள்ளது. நீண்ட நாள் கோரிக்கையான கோவையிலிருந்து துபாய், தோகா உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளுக்கும், மலேசியா, கோலாலம்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் விமான சேவையை தொடங்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் முதல்வர் வலியுறுத்த வேண்டும்.

தமிழ்நாடு ஊரகத்தொழில் மற்றும் குறுந் தொழில்முனைவோர் சங்கத்தின்(டாக்ட்) தலைவர் ஜேம்ஸ்:

கோவை மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. மாவட்டத்தின் மொத்த தொழில் வளர்ச்சியில் குறுந் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் பெற்றுள்ள போதும் குறுந் தொழிற்பேட்டை இல்லாத காரணத்தால் நகரில் செயல்படும் நிறுவனங்களுக்கு நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருகிறது.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் குறுந் தொழிற்பேட்டை அமைக்க கோரிக்கை விடுத்து வருகிறோம். ஏற்கெனவே ஜிஎஸ்டி, மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறுந் தொழில் நிறுவனங்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் இடப்பற்றாக்குறை பிரச்சினை தொழில்முனைவோருக்கு நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.

எனவே, கோவை மாவட்ட தொழில்முனைவோரின் 16 ஆண்டு கால கோரிக்கையான குறுந் தொழிற்பேட்டை அமைக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x