

எதிர்கால சேமிப்புக்காக முதலீடு செய்யும் மக்களில் பெரும்பாலானோர் தங்கம் போன்ற ஆபரணங்களில் முதலீடு செய்வது வழக்கம். இதனை தாண்டி 5 - 10 ஆண்டு கால வங்கி வைப்பு நிதிகளில் முதலீடு செய்கின்றனர். ஆனால் தற்போது இதற்கு 5.4 சதவீதம் தான் வங்கிகள் வங்கி வட்டி கொடுக்கின்றன.
அதேசமயம் தபால் நிலையங்களில் வங்கியை விட கூடுதல் வட்டி கிடைக்கிறது. தபால் நிலைய சேமிப்பு தொடங்கி பல திட்டங்கள் அதில் செயல்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று செல்வமகள் சேமிப்புத் திட்டமாகும்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் எனப்படும் சுகன்யா சம்ருதி யோஜனா - Sukanya Samrudhi Yojana திட்டம், 2015-ம் ஆண்டு, ஜனவரி 22-ம் தேதி தொடங்கப்பட்டது. பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்கைக்குத் தேவையான சேமிப்பாக இருக்க வேண்டும், உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்பாக இருக்க வேண்டும், அதற்கு நல்ல வட்டி வருமானம் வேண்டும், அதே நேரத்தில் பாதுகாப்பும் வேண்டும் என்பவர்களுக்கே வடிவமைக்கப்பட்டது தான் செல்வ மகள் சேமிப்புத் திட்டம்.
இந்தத் திட்டத்தில் 26.03 லட்சம் கணக்குகள் தொடங்கி தேசிய அளவில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் 2021-ம் ஆண்டு வரை நாடு முழுவதும் 1.42 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், 29.12 லட்சம் புதிய கணக்குகளைத் தொடங்கி உத்தரப்பிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.
முக்கிய தகவல்கள்
இதில் ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேரலாம். குறைந்த சேமிப்புத் தொகை, அதிக வட்டி, கணக்கை முடிக்கும்போது 3 மடங்கு தொகை என பல்வேறு பலன்கள் உள்ளதால், ஏராளமானோர் இத்திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர்.
ஒரு பெண் குழந்தை 10 வயது வரை அவர் பெயரில் கணக்கைத் தொடங்கலாம். ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். 2 பெண் குழந்தைகள் இருந்தால் இருவரின் பெயரிலும் தனித்தனியாக 2 கணக்குகள் தொடங்கலாம்.
இதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர், தங்கள் குழந்தையின் பெயரில், பிறப்புச் சான்றிதழுடன் கணக்கை வைத்து தொடங்க வேண்டும்.
குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை ஒரு நிதி ஆண்டில் முதலீடு செய்யலாம். 250 ரூபாயில் தொடங்கும் முதலீட்டுத் தொகை 300, 350, 400... என 50 ரூபாய் கூட்டலில் குறைந்தபட்ச தொகையைச் நிர்ணயித்து செலுத்தலாம்.
இந்த தொகைக்கு தற்போது 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் சிறு சேமிப்புத் திட்டங்களிலேயே மிக அதிக வட்டி கிடைக்கும் திட்டம் இது. திட்டம் தொடங்கப்பட்டபோது 9.1 சதவீதமாக இருந்த வட்டி விகிதம், ரிசர்வ் வங்கி அடிப்படை வட்டியை குறைத்ததால் மற்றபல திட்டங்களை போலவே இந்த திட்டத்துக்கும் வட்டி குறைக்கப்பட்டது. ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதியிலும் இத்திட்டத்துக்கான வட்டி, முதலீட்டு கணக்கில் செலுத்தப்படுகிறது.
செல்வ மகள் சேமிப்பு திட்டம் முதலீடு செய்யத் தொடங்கி 21 ஆண்டுகளில் நிறைவடையும். ஆனால் 18 வயது நிறைவடைந்த பெண், தன் திருமணத்தை முன்னிட்டு கணக்கை மூடி பணத்தை எடுத்துக் கொள்ளலாம். 18 வயது நிறைவடைந்த பிறகு மேற்படிப்புக்காக கணக்கில் இருக்கும் மொத்த தொகையில் 50% வரை பணத்தையும் எடுக்கலாம்.
கணக்கு தொடங்கப்பட்ட குழந்தை எதிர்பாராத விதமாக இறக்க நேரிட்டால் உடனே செல்வ மகள் செமிப்பு திட்டத்தின் கணக்கு மூடப்பட்டு அதில் இருக்கும் பணம் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்படும்.
வரிச்சலுகை
குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இறந்து விட்டால் குழந்தையால் மாதம் மாதம் பணத்தை கட்ட முடியாது என்பதால் கணக்கு மூடப்பட்டு மீதி இருக்கும் பணம் குடும்பத்தினரிடமோ அல்லது அந்த குழந்தையிடமோ ஒப்படைக்கப்படும். ஒருவேளை தொடர்ந்து அந்த கணக்கில் மாதம் மாதம் முதலீடு செய்யப்பட்டால் 21 வயதுக்குப் பிறகு அந்த பெண் குழந்தையிடமே முதிர்வு தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் பணத்துக்கு வருமான வரிச் சட்டப் பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு பெறலாம். இதில் பெறப்படும் வட்டிக்கு கூட வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. இதுபோன்ற வசதி மற்றும் நன்மைகளால் தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெருமளவு வரவேற்பு பெற்று வருகிறது.