

சாதாரணமாக வங்கியில் கடன் கேட்டுச் செல்லும் போது, வாடிக்கையாளர் மார்ஜின், கடனுக்கு ஈடாக கொலாட்ரல் செக்யூரிட்டி கேட்பதும், கேஒய்சி (KYC) பார்ப்பதும் வழக்கம். ஒருவேளை வாடிக்கையாளர் தொழில் தொடங்குவதற்காக கடன் கேட்டுச் செல்கிறார் என்றால் மார்ஜின், கொலாட்ரல் செக்யூரிட்டி, கேஒய்சி இவைகளுடன் தொடங்க இருக்கும் தொழில் குறித்து ப்ராஜக்ட் ரிப்போர்ட் எனப்படும் திட்ட அறிக்கை ஒன்றும் வங்கி கேட்கும்.
வாடிக்கையாளர் தொடங்க இருக்கும் தொழில், அதற்கான வாய்ப்புகள், லாபமீட்டும் சாத்தியம் போன்றவை குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்க வேண்டும். தொடங்குவதற்கு முன்பே எப்படி தொழில் குறித்து தீர்மானிக்க முடியும், அப்படியென்றால் அந்த திட்ட மதிப்பீட்டு அறிக்கையை எப்படித் தயாரிப்பது, அதில் வங்கி என்னென்ன எதிர்பார்க்கும் போன்ற கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் அளிக்கிறார் எழுத்தாளரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொதுமேலளருமான சோம.வீரப்பன்...
பொதுவாக ஒரு திட்டமதிப்பீட்டு அறிக்கையை...
1. தொழில்நுட்ப சாத்தியங்கள்
2. பொருளாதார நம்பகத்தன்மை
3. நிர்வாகத் திறன்
4. நிதி சாத்தியம்
என நான்கு பகுதிகளாக பிரிக்கலாம். திட்ட அறிக்கை இப்படிதான் பிரிக்கப்பட வேண்டும் என்பது கிடையாது. ஆனால் இப்படி இருக்கும் போது புரிந்து கொள்வதற்கு எளிதாகவும் வசதியாகவும் இருக்கும். முதலில் டெக்னிகல் ஃபிசிபிளிட்டி குறித்து பார்ப்போம்.
தொழில்நுட்ப சாத்தியங்கள் (Technical Fesibility): ஒரு பொருளை உற்பத்தி செய்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு பல்வேறு விஷயங்கள் தேவைப்படுகின்றன. முக்கியமாக பொருளை உற்பத்தி செய்வதற்கான இடம். எந்த இடத்தில் தொழில் தொடங்கப்பட இருக்கிறது, பொருளை உற்பத்தி செய்வதற்கான கட்டட வசதி அதில் இருக்கிறதா? அதற்காக யாரிடமாவது அனுமதி வாங்க வேண்டுமா? போன்ற கேள்விகள் முக்கியம். தொழிற்பேட்டையில் தொழில் தொடங்கப்பட்டால் எந்த சிக்கலும் இல்லை. வேறு இடமாக இருந்தால், சுற்றுச்சூழல் அமைப்பின் அனுமதி, தடையில்லா சான்று, போதுமான மின்சாரம், தண்ணீர் வசதி இருக்கிறதா, திறன் வாய்ந்த தொழிலாளர்கள் கிடைப்பார்களா, பொருளை உற்பத்தி செய்யும் முறை எளிமையானது தானா போன்ற விபரங்களை வங்கிகள் பார்க்கும்.
கடன் கேட்கும் வாடிக்கையாளர் மேற்சொன்ன தகவல்களை கோர்வையாக ஒரு கதை போல எழுத வேண்டும். இன்னார், இந்த இடத்தில் தொழிற்சாலை அமைக்க இருக்கும் தொழிற்சாலைக்கு இவ்வளவு இடம், கட்டடம் இருக்கிறது. இவ்வளவு வேலை ஆட்கள் வேலை செய்வார்கள். குறிப்பாக என்ன வகையான இயந்திரங்கள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும், அது உள்நாட்டில் தயாரானதா, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட இருக்கிறதா, அதற்கு எவ்வளவு மின்சாரம் தேவை, உற்பத்திக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்.
வேலையாட்கள் எங்கிருந்து வருவார்கள், எத்தனை ஷிப்ட் வேலைகள் நடக்கும். ஒரு ஷிப்டில் எத்தனை பேர் வேலை செய்வார்கள், எவ்வளவு யூனிட் உற்பத்தி நடக்கும், அதன் மதிப்பு என்ன போன்ற தொழில் தொடங்கப்படுவதற்கு சாத்தியமான அனைத்து விபரங்களையும் எழுத வேண்டும்.
ப்ராஜக்ட் ரிப்போர்ட்டின் தொடக்கத்தில் கடன் கேட்பவரைப் பற்றிய தகவல்களையும் சொல்லி விட வேண்டும். கடன் கேட்பவரின் "ஆதார் எண்", "பான் எண்", வீட்டு முகவரி, அரசு பதிவுகள் ஏதாவது வேண்டுமா, அரசின் தடையில்லா சான்று வேண்டுமா, ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்டிருக்கிறதா, வருமான வரி பதிவு செய்யப்பட்டிருக்கிறதா,
கூட்டாண்மை ஏதாவது உண்டா போன்ற விபரங்களை கோர்வையாக எழுதி விட்டால் வங்கி மேலாளருக்கு கடன் கேட்பவர் என்ன செய்யப் போகிறார் என்பது தெளிவாக புரியும். ஒரு தொழில் தொடங்குவதற்கான சாத்தியங்களை ஆராயும் தொழில்நுட்ப சாத்தியங்கள் என்பது திட்டமதிப்பீட்டில் ஒரு முக்கியமான அங்கம்.
பொருளாதார நம்பகத்தன்மை (Economical Vaiablity): ஒரு பொருளை உற்பத்தி செய்ய முடியுமா என்பதைப் போல, அந்த பொருளை லாபகரமாக உற்பத்தி செய்ய முடியுமா என்பதையும் வங்கி சரி பார்க்கும். உதாரணமாக வைரத்தைச் சொல்லலாம். வேதியியல் ரீதியாக வைரம் என்பது கரியே (கார்பன்). வைரம் தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் தோண்டி எடுக்கப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். வைரத்தை ஆய்வகத்திலும் உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்கள்.மிக அதிகமான வெப்பம், மிக அதிகமான அழுத்தம் மூலமாக கார்பனை வைரமாக மாற்ற முடியும். அப்படியானால் ஏன் அப்படி செய்வதில்லை என்றால் இயற்கையாக தோண்டி எடுக்கும் வைரத்தின் விலையை விட, செயற்கையாக வைரத்தை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு மிக அதிகம். ஆக வைரத்தை செயற்கையாக செய்ய முடியும், ஆனால் லாபகரமாக செய்ய முடியாது.
பிரேக் ஈவன் பாயின்ட்: கடன் பெற்று ஒருவர் ஒரு பொருளை உற்பத்தி செய்கிறார் என்றால் அதிலிருந்து அவருக்கு லாபம் வர வேண்டும். அப்போது தான் அவரால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும். இதற்காக வங்கி பிரேக் ஈவன் பாயின்ட் (Break-Even Point) என்ற ஒன்றைப் பார்க்கும். ஒரு தொழில் நடத்தும் போது சில செலவுகள், உற்பத்தி பணிகள் நடந்தாலும் நடக்கா விட்டாலும் நிரந்தரமாக இருக்கும். உதாரணமாக, கட்டட வாடகை, குறைந்தபட்ச மின்சார செலவு, குறைந்தபட்ச தண்ணீர் செலவு, குறைந்த பட்ச தொழிலாளகளுக்கான செலவு போன்றவைகளைச் சொல்லலாம். அப்படியானால் வேறு செலவும் உண்டா என்றால், மாறுபடும் செலவு என்ற ஒன்று உண்டு.
அதாவது பொருளின் உற்பத்திக்கேற்ப மாறும் செலவுகளை இது குறிக்கும். நிரந்தரச் செலவினை ஈடு செய்வதற்கு மாதத்திற்கு எவ்வளவு பொருள்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதே பிரேக் ஈவின் பாயின்ட். நிரந்தர செலவுகளை, விற்பனை விலையால் வகுத்து, செலவிற்கான விலையில் இருந்து கழித்தால் வரும் தொகையே பிரேக் ஈவன் பாயின்ட் . இதனையும் திட்டமதிப்பீட்டில் சொல்ல வேண்டும்.
அதே போல வங்கியில் திட்டமதிப்பீட்டு அறிக்கைக் கொடுக்கும் போது எவை எல்லாம் நிரந்தரச் செலவுகள், எவை எல்லாம் மாறுபடும் செலவுகள் என்றும் குறிப்பிட வேண்டும். இதில் சென்சிட்டிவ் அனாலிசிஸ் (Sensitive Analysis) என்று ஒன்றைக் கேட்பார்கள். ஒருவேளை பொருள்களின் விலைகள் மாறி விட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்படும். இவைகளையும் திட்ட மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்க வேண்டும்.
நிர்வாகத் திறன் (Managerial Competency): திட்ட மதிப்பீட்டு அறிக்கையின் மூன்றாவது விஷயம் நிர்வாகத் திறன். ஒரு பொருளை உற்பத்தி செய்தால் மட்டும் போதாது, அதனை லாபகரமாக உற்பத்தி செய்யதால் மட்டும் போதாது. அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். ஒரு பொருளை விற்பனை செய்வது என்பது எளிதான காரியம் இல்லை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பிரபலமான பல பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் ஒருவராகவும், விற்பனை செய்பவர்கள் வேறு ஒருவராகவும் இருப்பார்கள்.
உற்பத்தியாளர்களால் பொருள்களை உற்பத்தி செய்ய முடிந்த அளவிற்கு, நிறைய விளம்பரம் செய்து, முகவர்களை நியமித்து, அவர்களை ஒருங்கிணைத்து, போட்டியைச் சமாளித்து விற்பனை செய்வது கடினம். விற்பனை என்பது மிகப்பெரிய விளையாட்டு. அதை கடன் வாங்குபவரால் செய்ய முடியுமா, உற்பத்தி செய்த பொருளை கடன் வாங்குபவரே விற்பனை செய்யப் போகிறாரா, வேறு யாருடனாவது கூட்டு சேர்ந்து விற்பனை செய்யப்பேகிறீர்களா என்பதைத் தான் நிர்வாக திறனில் வங்கிகள் பார்க்கும்.
அதைத் தவிர ஒரு தொழிலை நடத்துவதற்கு பலவிதமான திறமைகள் அனுபவங்கள் தேவைப்படும். அந்த திறமையும், அனுபவமும் கடன் கேட்பவரிடம் உண்டா, அவர் எந்த மாதிரியான ஆட்களை வேலைக்கு எடுக்கப்போகிறார். நிர்வாகத்தை நடத்துவதற்காக என்ன மாதிரியான கட்டமைப்புகளை வைத்திருக்கிறார் போன்ற விஷயங்கள் நிர்வாக திறனின் கீழ்வரும். கடன் பெறுபவர் அவரின் திறமைகளைப் பற்றி இந்த பகுதியில் பேசிக் கொள்ளலாம்.
நிதி சாத்தியம் (Financial Viability): நிதி சாத்தியம் என்பது, பொருளாதார நம்பகத்தன்மையில் இருந்து வேறுபட்டது. லாபம் சம்பந்தப்பட்டது. ஒரு திட்டத்திற்கு மிகவும் முக்கியமானது, செலவு மற்றும் அதற்கான நிதியாதாரங்கள் (Cost and Means of Finance). ஒரு திட்டத்தைச் செயல்படுத்த என்னென்ன செலவாகும். அதற்கான நிதி எவ்வாறு திரட்டப்படும் என்பதை இது குறிக்கும். உதாரணமாக, ஒரு தொழில்சாலை தொடங்க வேண்டும் என்றால் அதற்கு நிலம் வேண்டும். கட்டிடம், இயந்திரங்கள் வேண்டும்.
இவை தவிர ஒர்க்கிங் கேப்பிடல் மார்ஜின், பொதுவாக ஒரு ப்ராஜக்ட் தொடங்கப்படும் போது, கன்டிஜன்சி (Contingency) என்று ஒன்றை ஒதுக்கீடு செய்வார்கள். எதிர்காலத்தில் விலையில் மாற்றம் ஏற்பட்டால் என்ன செய்வது என்பதற்காக, மொத்தத் தொகையில் ஒரு 5 சதவீதம் கன்டிஜன்சி போடப்படும். இவை அனைத்தும் செலவுகள். இவை ஒரு பக்கத்தில் இருக்கும்.
வருவாய் ஆதாரங்கள் (Means): இந்த செலவுகளுக்கான நிதியாதாரம் எவ்வாறு பெறப்பட்டும் என்பது அதன் எதிர் பக்கத்தில் இருக்கும். ஒரு தொழிலின் தொடக்க நிதியாதாரம் தொழில் தொடங்குபவர் போடும் முதல். பொதுவாக முதல் திட்டத் தொகையில், 25 சதவீதம் இருக்க வேண்டும் என்று வங்கிகள் எதிர்பார்ப்பார்கள். அடுத்ததாக அரசாங்கம் தரும் மான்யம், மூன்றாவதாக நண்பர்கள் உறவினர்கள் மூலம் பெறப்படும் கடன்கள், இவைகள் தவிர மீதி தொகை வங்கிக் கடன்.
கடன் தரும் போது வங்கிகள் இவைகள் அனைத்தையும் தனித்தனியாக சரிபார்க்கும். நிலம் வாங்கப்பட்டு விட்டதா, சொந்த கட்டடமா, வாடகை கட்டடமா, கன்டிஜன்சி எவ்வளவு போன்றவைகளையும், முதல் கிடைத்து விட்டாதா, நண்பர்கள் கடன் தருவார்களா, அரசு விதிகளின் படி அந்த தொழிலுக்கு மானியம் கிடைக்குமா போன்ற விஷயங்களையும் வங்கிகள் சரிபார்க்கும்.
தொழில் தொடங்குவதற்கு என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை வாய்மொழியாக சொல்லாமல், எழுத்து வடிவில் கொடுத்து, அதைச் சரி பார்த்துக் கொள்வதே திட்ட மதிப்பீட்டு அறிக்கை. இதனைத் தயார் செய்வதற்கு தனியாக ஆட்கள் இருக்கிறார்கள்.
இதனுடன், "ப்ரொஜக்டட் ஃபைனான்சியல் ஸ்டேட்மெண்ட்ஸ்"(Projected Financial Statements) என்ற ஒன்று கேட்பார்கள். அதாவது, முதல் வருடம் எவ்வளவுக்கு விற்பனையாகும், அந்த உற்பத்திக்கு எவ்வளவு செலவாகும், அதற்கு நிகர லாபம் எவ்வளவு வரும், அதில் கழிவுகள் வரிகள் கழித்தப் பின்னர், வங்கியில் கட்டுவதற்கு எவ்வளவு பணம் கையில் இருக்கும் என்பதே ப்ரொஜக்டட் ஃபைனான்சியல் ஸ்டேட்மெண்ட்ஸ். அதாவது வரும் காலத்தின் இருப்புநிலை குறிப்பு, லாப நஷ்ட கணக்கையும், எவ்வளவு லாபம் வந்து வங்கிக் கடன் திருப்பி கட்டப்படும் என்பதை எல்லாம் தயார் செய்து தெரிவிக்க வேண்டும். இதை கடன் பெறுபவரோ அல்லது அவர் சொல்லி அவரது ஆடிட்டர் தயார் செய்ய வேண்டும்.