Published : 15 Jun 2022 08:00 AM
Last Updated : 15 Jun 2022 08:00 AM

2 ஆண்டுகளுக்குப் பிறகு குறையத் தொடங்கிய மூலப் பொருட்கள் விலை: எதிர்பார்த்த பலன் அளிக்குமா என தொழில்துறையினர் சந்தேகம்

பி.ஸ்ரீனிவாசன்

கோவை: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகுஸ்டீல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு பலன் இருக்குமா என்ற சந்தேகம் தொழில் துறையினர் மத்தியில் நீடிக்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பின்புலமாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை, உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதம், ஏற்றுமதியில் 48 சதவீதம் பங்களிப்பு அளிப்பதோடு, 12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாகவும், 40 கோடி பேர் சார்ந்திருக்கும் துறையாகவும் உள்ளது.

இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் தொடங்கி 2 ஆண்டுகளாகவே ஸ்டீல், அலுமினியம், தாமிரம், பேக்கிங் காகிதம், பிளாஸ்டிக் என அனைத்து மூலப்பொருட்களும் சமாளிக்க முடியாத அளவு பல மடங்கு விலை ஏற்றம் கண்டு வந்தன.

இதனால் நாடு முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. கோவை உள்ளிட்ட பெரும் தொழில் நகரங்களில் பல சிறு, குறு நிறுவனங்கள் தொழிலைத் தொடர இயலாமல் போனதுடன், தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலையும் ஏற்பட்டது.

கோவையில் பல இடங்களில் மூன்று ‘ஷிப்ட்'கள் இயங்கிய தொழில் நிறுவனங்களில் ஒரு ‘ஷிப்ட்' முறையும் கொண்டு வரப்பட்டது. மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.

அதேபோல, கடந்த டிசம்பர் 20-ம் தேதி நாடு முழுவதும் தொழில் நிறுவனங்கள் இணைந்து உற்பத்தி நிறுத்தமும் மேற்கொண்டன. தொழில்துறையினரின் தொடர் கோரிக்கைக்கு பிறகு, இரு வாரங்களுக்கு முன் மத்திய அரசு ஸ்டீல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கான வரியை அதிகரித்தும், இறக்குமதிக்கான வரியை ரத்து செய்தும் உத்தரவிட்டது. இதையடுத்து ஸ்டீல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையானது 2 ஆண்டுகளுக்கு பிறகு குறையத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு கூறும்போது, “கொடிசியா சார்பில் மூலப்பொருட்கள் விலை உயர்வு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்தோம். சீனா இந்திய நிறுவனங்களிடமிருந்து ஸ்டீல் உள்ளிட்ட மூலப்பொருட்களை அதிகளவில் வாங்கி, அதனை உலக சந்தைக்கு கொண்டு செல்வது குறித்தும் தெரிவித்தோம்.

அதைத் தொடர்ந்து ஏற்றுமதிக்கு கூடுதல் வரியும், இறக்குமதிக்கு வரி ரத்தும் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டீல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை குறையத் தொடங்கியுள்ளது.

கடந்த 15 நாட்களுக்கு மேலாகவேஇந்த விலை குறைந்து வருகிறது. இதுவரை கிலோ ரூ.90-க்கு விற்ற ஸ்டீல் ரூ.75 ஆக குறைந்துள்ளது. பிற மூலப்பொருட்களின் விலையும் சற்றே குறைந்துள்ளது. இது தொடரவேண்டும்” என்றார். டாக்ட் சங்க மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் கூறும்போது, “ஸ்டீல் விலை டன்னுக்கு ரூ.10 ஆயிரம் வரை குறைந்துள்ளது. அலுமினியம், கன் மெட்டல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையும் குறைந்துவருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த விலை உயர்வு தற்போது குறைகிறது.

அப்போது கிலோ ரூ.65-க்கு விற்பனையான எண்:410 ரக ஸ்டீல் கிலோ ரூ.138 வரை உயர்ந்து தற்போது ரூ.128-க்கு வந்துள்ளது. மூலப்பொருட்கள் விலை குறைவது வரவேற்புக்குரியதே.

ஆனாலும் திடீர் விலையேற்றமும், இறக்கமும் தொழிலுக்கு உகந்தது இல்லை. விலை சற்றேகுறைந்துள்ள நிலையில், நாட்டின்மிகப்பெரும் ஸ்டீல் உற்பத்தியாளர்கள் மத்திய நிதியமைச்சரை தற்போது சென்று சந்தித்துள்ளனர். இதனால் இந்த விலை குறைவு தொடருமா, இதனை நம்பி ஆர்டர்களை எடுக்கலாமா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது” என்றார்.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் கே.வி.கார்த்திக் கூறும்போது, “விலை சற்றே குறைந்திருந்தாலும், அதற்கான முழு பலனை பல வர்த்தக நிறுவனங்கள் எங்களுக்கு இன்னும் அளிக்காமல் உள்ளன. மத்திய அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் விலை குறையவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x