

இந்தியாவின் உயர் கல்வி அமைச்சகத்தின் புள்ளி விபரப்படி ஏறத்தாழ 3.85 கோடி மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். 18-23 வயதுடைய நபர்களில் 100 பேரில் 27.1 நபர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். இதில் வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2019ஆம் ஆண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
சுமார் 10.9 லட்சம் மாணவர்கள் இந்தியாவில் இருந்து உயர்கல்வி பெறுவதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்கும் ஆர்வம்
வெளிநாடுகளில் உயர்கல்வி பெற மாணவர்கள் விரும்புவதற்கு பல காரணங்கள் உள்ளன. கல்வியுடன் அனுபவங்களையும் கலாசாரங்களையும் கற்றுக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்கிற ஆவல் அதிகமாக இருக்கிறது.
வளர்ந்த நாடுகளில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பு பயிலச் செல்லும் போது அந்த நாடுகளிலேயே வேலைவாய்ப்பு பெற்று நிரந்தரமாக குடியுரிமை கிடைத்திட வாய்ப்புள்ளது. வெளிநாடுகளில் பயின்று விட்டு இந்தியா திரும்பும் போது முக்கிய தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
இந்தியாவில் உயர் கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்காத நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களில் படிக்க முயலுகின்றனர். எடுத்துகாட்டாக இந்தியாவில் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைக்காத சூழல் ஏற்படுவதால் ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வேலைவாய்ப்புக்காகவும், அறிவை மேம்படுத்திக் கொள்ளவும். சவால்களைச் சந்திப்பதற்காகவும் கூட வெளிநாடுகளில் சென்று படிக்கும் எண்ணம் மாணவர்களிடம் அதிகரித்து வருகிறது.
இதுமட்டுமின்றி பிரிட்டனில் ஓராண்டு காலத்திற்குள் முதுநிலை கல்வி பயிலவும் வாய்ப்புள்ளது. மேலும் பிஎச்டி போன்ற ஆய்வு படிப்புகளை தொழில்துறை நிறுவனங்களோடு இணைந்து கற்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.
இதுபோன்ற காரணங்களால் வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
வெளிநாடுகளில் பெருமளவு மாணவர்கள் பிரிட்டன் சென்று கற்கின்றனர். பிரிட்டனைப் போலவே அமெரிக்காவுக்குச் சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.
கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கும் இந்திய மாணவர்கள் கல்வி பெறுவதற்காகச் செல்கின்றனர். வெளிநாடுகளில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகள் என பல்வேறு நிலைகளிலும் கல்வி பெற முடியும்.
வெளிநாடுகளுக்கு சென்று பயிலும் மாணவர்களில் இந்தியாவில் ஆந்திரா, பஞ்சாப், மகாராஷ்டிரா வரிசையில் தமிழ்நாடு ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது ஏறத்தாழ 7% மாணவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பயில ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் கல்விக்கான செலவு இந்தியாவிலேயே பெரும் தொகையாக உருவெடுத்துள்ளது. நடுத்தர குடும்பங்களுக்கு கூட கல்வி செலவு என்பது மலைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. அதிலும் வெளிநாடுகளில் சென்று கல்வி கற்க வேண்டும் என்பது பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது.
அதிகமான செலவு
வளர்ந்த நாடுகளான அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மற்றும் கனடா நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் உயர்கல்விக்கான வருடாந்திர கட்டணம் என்பது 5 முதல் பத்து மடங்கு வரை குறைவாக உள்ளது.
சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் சுமார் 1.8 மில்லியன் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வியைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பயில்வதற்கு ஆகும் செலவினம் 2024ஆம் ஆண்டில் மொத்தமாக 80 பில்லியன் டாலர்களைத் தொடும் என ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளன.
வெளிநாடு சென்று படிக்க விரும்புபவர்களுக்கு பல்வேறு வகையான உதவித் தொகைகளும், கல்விக் கடன்களும் கிடைக்கின்றன. குறிப்பாக வெளிநாட்டுக் கல்விக்காக கடன் தருவதற்கு வங்கிகள் இருக்கின்றன. அதனால் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்கூட வெளிநாட்டுக் கல்வி கற்க முடியும்.
வெளிநாடு சென்று படிக்கும் 70 சதவீத மாணவர்கள் வங்கிக் கடன் பெற்று கல்வி கற்கிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், கடன் பெறும் வழிமுறைகள் பற்றியும் கிடைக்கும் உதவித் தொகைகள் மற்றும் பகுதி நேர வேலைகள் பற்றியும் தெரிந்து வைத்துக்கொள்வதன் மூலம் வெளிநாடு செல்லும் மாணவர்களின் நிதி சிக்கல் குறையும்.
வெளிநாடு சென்று கல்வி பயில்வோருக்கும் இந்தியாவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் வங்கிக்கடன் திட்டங்களே பொருந்தும். கல்வி கட்டணம் மட்டுமின்றி கல்லூரி, விடுதி, தேர்வு, நூலகம், ஆய்வுக் கூடம், வெளிநாட்டுக்கான பயணச் செலவு, காப்பீட்டுத்தொகை, உபகரணங்கள், சீருடை, கணினிக்குரிய தொகை, புராஜெக்ட், அதற்கான பயணச் செலவு, விசா செலவு ஆகியவற்றையும் சேர்த்துக் கடன் கோரலாம். வெளிநாட்டுக்கு சென்று படிப்பவர்கள் இத்தகைய வகையில் கல்வி கடன் கோரலாம்.
வங்கிக்கடன்
கல்வி கடன் வழங்குவதில் மூன்று பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் ரூ. 4 லட்சம் வரை கடன் தொகை பெறலாம். இரண்டாவதாக, ரூ. 4- ரூ. 7.5 லட்சம் வரை கடன் கிடைக்கும். மூன்றாவது ரூ.7.5 லட்சம் முதல் எவ்வளவு கடன் தொகை தேவைப்படுகிறதோ அந்தக் கடன் தொகை கோர முடியும். இதில் வெளிநாடு செல்லும் மாணவர்கள் பெரும்பாலும் மூன்றாவது பிரிவிலேயே அதிகம் கடன் கோருகின்றனர்.
ரூ.7.5 லட்சம் முதல் அதிகபட்ச கடன் தொகை கோருபவர்களுக்கு கடன் பெற அடமானம் தேவை. அவை, இடமாகவோ கட்டிடங்களாகவோ இருக்கலாம். விவசாய நிலம், வீட்டு மனை, பிளாட், வீடு, நிலையான வைப்புநிதி சான்றிதழ், ரெக்கரிங் டெப்பாசிட், தங்க வைப்பு, பத்திரங்கள், கடன் பத்திரங்கள் மற்றும் ஈக்விட்டி பங்குகள் போன்ற சொத்துக்களை அடமானம் வைத்து கல்விக் கடன் பெறலாம். இதுபோலவே பயனாளித் தொகையும் செலுத்த வேண்டும்.
உள்நாட்டில் பயில்வதற்கு ரூ.10 லட்சம் வரையிலும், வெளிநாடுகளில் பயில்வதற்கு ரூ.20 லட்சம் வரையிலும் கடன் கிடைக்கிறது. ரூ.4 லட்சம் வரை கடன் வாங்கினால் மார்ஜின் தொகையை மாணவர்கள், பெற்றோர்கள் செலுத்தத் தேவையில்லை
ரூ.4 லட்சத்துக்கு அதிகமாகக் கடன் பெறும்போது, மார்ஜின் தொகை 5 சதவீதம் மட்டுமே. வெளிநாடுகளுக்குச் சென்று மேல்படிப்பு பயில்வதற்குக் கடன் வாங்குபவர்கள் 15 சதவீத மார்ஜின் தொகை செலுத்த வேண்டும்.
சிறப்பு திட்டம்
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா SBI Global Ed-Vantage என்ற சிறப்புத் திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் படிப்பதற்கு ரூ.1.5 கோடி வரையில் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
டிப்ளமோ, இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் கிடைக்கும். இதில் வாங்கும் கடனுக்கு 8.65 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட்டியை பொறுத்தவரை அவ்வப்போது மாறக்கூடியது. பெண்களுக்கு 0.50 சதவீத வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது. அவர்கள் 8.15 சதவீத வட்டியில் கல்விக் கடன் பெறலாம்.
வழக்கமான கல்வி கடனுக்கு வங்கிகள் நிர்ணயித்துள்ள மற்ற நிபந்தனைகள் இதற்கும் பொருந்தும். படிப்பை முடித்த ஆறு மாதங்களில் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். 15 ஆண்டுகள் கடனைத் திருப்பிச் செலுத்த அவகாசம் உள்ளது.
தகவல் பெறலாம்
வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு தேவையான தகவல்களை அளிப்பதற்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்காக பதிவு செய்து கொள்ளும் நடைமுறையை இந்திய வெளியுறவு அமைச்சகம் 2015-ம் ஆண்டு உருவாக்கியது.
வெளிநாட்டில் உள்ள இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, அவர்கள் படிக்கும் படிப்புகள் மற்றும் மிகவும் பயனுள்ள குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கும். வெளிநாடுகளில் கல்வி கற்கும் இந்திய மாணவர்கள் இந்த தளத்தில் தாமாக முன் வந்து வெளியுறவு அமைச்சகத்தின் https://www.mea.gov.in/Students-Registration-Portal.htm என்ற தளத்தில் தங்கள் தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
அவர்களுக்கு தேவையான உதவியை வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரங்களின் உதவியுடன் வெளியுறவு அமைச்சகம் வழங்கி வருகிறது. இதுமட்டுமின்றி வெளிநாடுகளில் அவசரநிலை ஏற்பட்டால் மாணவர்களைத் தொடர்பு கொள்ள உதவும்.
இப்போது அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் பெறுமாறு பெரிய வெளிநாட்டு கல்விக்கான இணையதளத்தை உருவாக்கி வருகிறது. வெளிநாட்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக Global Indian Students Portal (GISP) என்ற இணையதளம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாடு கல்வி தொடர்பான தகவல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் தருகிறது.
கல்வி அமைச்சகம், சுகாதார அமைச்சகம், இந்திய மருத்துவக் கவுன்சில், இந்தியப் பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்பு மற்றும் யுஜிசி ஆகியவற்றுடனும் ஆலோசனை மேற்கொண்டு இந்த இணையதளத்தைக் மத்திய வெளியுறவு அமைச்சகம் கட்டமைத்து வருகிறது.
வெளிநாடுகளில் கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது, விண்ணப்பிப்பது, விசா பெறுவது போன்ற நடைமுறைகளில் பல்வேறு தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் வழிகாட்டி வருகின்றன. அவற்றின் உதவியுடன் வெளிநாடுகளில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களை தேர்வு செய்யலாம்.