

பங்குச்சந்தை பற்றிய தகவல்கள் பற்றி தெரியும் பலருக்கும் அதில் முதலீடு செய்ய ஆசை ஏற்படும். ஆனால் பங்குச்சந்தை என்பது ஆபத்து என்பதும், முதலீட்டுத் தொகை நஷ்டமடைய கூடிய ஆபத்து உள்ளது என்பதால் அதில் முதலீடு செய்ய பலருக்கும் தயக்கம் பிறக்கும்.
இதுமட்டுமல்லாமல் பங்குச்சந்தையை புரிந்து கொள்வது மிகவும் கடினம். அதனை கற்று, புரிந்து கொண்டு முதலீடு செய்வதில் சிக்கல் இருப்பதால் தனக்கு பதில் யாராவது இதனை செய்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் பலருக்கும் தோன்றும். அதற்க ஒரு எளிய வழி மியூச்சுவல் பண்ட்.
பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் இரண்டுமே ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்பது என்றாலும் இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. பங்குச்சந்தை என்பது ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் தாங்கள் விரும்பும் நிறுவனத்தின் பங்குகளை நேரடியாக வாங்கி விற்பனை செய்வது. அதில் வரும் லாபமும், நஷ்டமும் அவர்களைச் சார்ந்தது. ஆனால் மியூச்சுவல் பண்ட் என்பது அந்த நிறுவனத்தின் தேர்வாக அமையும்.
மியூச்சுவல் பண்ட் குறித்து தெரிந்துகொள்வதற்கு முன்பு மியூச்சுவல் பண்ட் மற்றும் பங்குச் சந்தைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக மியூச்சுவல் பண்டில் ரிஸ்க் இல்லை என்ற எண்ணம் வேண்டாம். அதிலும் பணத்தை இழக்கும் ஆபத்து உண்டு.ஆனால் பண்ட் மேலாளர் என்பவர் இதனை கவனிப்பவர் இருக்கிறார்.
மியூச்சுவல் பண்ட் எப்படி இயங்குகிறது?
இதில் இருப்பவர்கள் முழுநேர பங்குச்சந்தை நிலவரத்தையும், அவற்றின் முதலீடு குறித்தும், சந்தையின் ஏற்ற இறக்க நிலவரம் குறித்தும் அறிந்தவர்களாக இருப்பார்கள். முதலீட்டில் விருப்பம் இருந்தாலும் வேலை மற்றும் தொழில் காரணமாக முழுநேர பங்குச் சந்தையில் ஈடுபட முடியாதவர்கள், சந்தை நிலவரம் தெரியாதவர்கள் உள்ளிட்டோர் முதலீடு செய்வதற்காக உருவானது மியூச்சுவல் பண்ட்.
சுருக்கமாக கூறினால் பலரும் சேர்ந்து பணத்தை ஒரு குழுவாக ஒரே நிதி அமைப்பின் கீழ் வரும் பங்குகளில் முதலீடு செய்து அதில் கிடைக்கும் லாபத்தை பிரித்து கொடுப்பது, இதுவே மியூச்சுவல் பண்ட். இதில் பண்ட் மேலாளருக்கு ஊதியம், போனஸ் கிடைக்கும். முதலீட்டில் வரும் லாபத்தில் நிறுவனத்துக்கு கமிஷன்போக எஞ்சிய பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். இதிலும் லாப நஷ்ட அபாயங்கள் உண்டு.
.
இதுமட்டுமல்லாமல் முழுக்க முழுக்க பங்குச்சந்தையை மட்டுமே சாராமல் பாண்ட் பண்டுகளிலும் முதலீடு செய்யும் வாய்ப்பு உண்டு என்பதால் நாம் எடுக்கும் ரிஸ்க்கின் அளவு பங்குச்சந்தையை விடவும் குறைவு தான்.
எப்படி தேர்வு செய்யலாம்?
முதலீட்டாளர் தனது வசதிக்கேற்ப முதலீட்டு விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் மொத்தமாகவும் முதலீடு செய்யலாம் அல்லது முறையான முதலீட்டுத் திட்டம் (எஸ்ஐபி) மூலம் மாதந்தோறும் முதலீடு செய்யலாம். எஸ்ஐபியில் மாதம் வெறும் ரூ.100 மட்டுமே கூட முதலீடு செய்யலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அதில் உங்கள் முதலீட்டை அதிகரிக்கலாம்.
மியூச்சுவல் பண்ட் நிதிகள் பங்குச்சந்தை, தங்கம், கடன் பத்திரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்யப்படுகின்றன. ஈக்விட்டி அல்லது குரோத் பண்டுகள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்பவை `டெப்ட் பண்டுகள்’ (Debt Funds). டெப்ட் பண்டுகளை, 'இன்கம் பண்டுகள்' என்றும் அழைப்பதுண்டு. பங்குகள் மற்றும் கடன்பத்திரங்கள் ஆகிய இரண்டு வகைகளிலும் முதலீடு செய்வது ஹைபிரிட் பண்டுகள் என மூன்று வகையான முதலீடுகள் இருக்கின்றன.
ஈக்விட்டி பண்டுகள் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றவை. அதிக லாபம் கிடைக்கும். எனினும் அதே அளவு ரிஸ்கும் இந்த பண்டுகளில் உள்ளது. இந்த பண்டுகளில் கிடைக்கும் லாபம் மற்ற பண்ட் முதலீடுகளை விடவும் அதிகம்.
ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் என 15 வருடத்திற்கு 15,00,000 லட்சம் ரூபாய் முதலீட்டினை செய்வதாக வைத்துக் கொண்டால் மியூச்சுவல் பண்ட் வருமானம் வருடத்திற்கு சராசரியாக 15 சதவீதமாக இருக்கும். அதாவது 15 ஆண்டுகளுக்கு பின்பு மொத்தம் சுமார் 42 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்புண்டு.
இதில் ஸ்மால், மிட் மற்றும் மல்டி கேப் பண்டுகள், திமேடிக் பண்டுகள், டேக்ஸ் சேவிங்ஸ் பண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறது. அதவாது பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் நிறுவனத்தின் தன்மையை பொறுத்து இது பிரிக்கப்படுகிறது. .
டெப்ட் பண்டுகள் எனப்படும் கடன் பத்திரங்கள் முதலீடு செய்வது. இந்த வகை பண்டுகள் பாதுகாப்பானதாகவும், வருவாய்க்கு ஏற்றதாகவும் கருதப்படுகிறது. அரசு பத்திரங்கள் அல்லது பாண்டுகள், கடன் பத்திரங்கள், வங்கி டெபாசிட்களின் சான்றிதழ்கள் மற்றும் டிரஷரி பில்கள் போன்றவற்றில் இந்த முதலீடு செய்யப்படுகிறது.
அடுத்தது ஹைபிரிட் பண்டுகள். இது ஓரளவு ரிஸ்க் மற்றும் நிலையான வருவாய் வரக்கூடிய முதலீடு. அக்ரசிவ் பேலன்ஸ்டு பண்ட்கள், கன்சர்வேட்டிவ் பேலன்ஸ்டு பண்ட்கள், பென்ஷன் திட்டங்கள், குழந்தை திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருவாய் திட்டங்களில் இந்த பண்ட் முதலீடு செய்கிறது.
நீண்ட காலம், குறுகிய காலம் என அவரவர் தேவைக்கு ஏற்ப சாதகமான பல அம்சங்களுடைய திட்டங்கள் மியூச்சுவல் பண்டில் இருக்கிறன. இதில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வயது கிடையாது.
கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன், முதலீட்டு இலக்கை நிர்ணயிக்க வேண்டும். கார் வாங்குவது, குழந்தைகளின் படிப்பு, திருமணம் போன்ற எந்த இலக்கை அடைய முதலீடு செய்ய விரும்புகிறோம் என்பதை தீர்மானிக்க வேண்டும். இதில் மதிப்பிடப்பட்ட வருமானம், காலம், ஆபத்து, பிற அம்சங்களை புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்துகொண்டால் இலக்குக்கு ஏற்ப திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதை எளிதாக்கும்.
நீண்ட காலத்துக்கு முதலீடு செய்திடுங்கள் என்பது பல மியூட்சுவல் பண்ட் விநியோகஸ்தர்களும், முதலீட்டு ஆலோசகர்களும் வழக்கமாக கூறும் ஆலோசனை. முக்கியமாக ஈக்விட்டி மற்றும் பேலன்ஸ்ட் பண்ட்களில் முதலீடு செய்பவர்கள் இந்த ஆலோசனையை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.
ஒரு நல்ல மியூச்சுவல் பண்ட் சில காலங்களில் ஏற்ற இறக்கத்தை சந்தித்தாலும், முடிவில் நல்ல ரிட்டன்ஸைக் கொடுக்கும். நீண்டகாலம் காத்திருந்து அதே சமயம் நல்ல லாபம் ஈட்ட வேண்டும் என்ற எதிர்ப்பு உள்ளவர்கள் ஈக்விட்டி மற்றும் பேலன்ஸ்டு பண்ட்களில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இலக்கின்படி நிதியைத் தேர்ந்தெடுத்ததும், திட்டத்தின் மதிப்பீடு மற்றும் பிற அம்சங்களையும் பார்க்க வேண்டும். முதலீடு செய்ய விரும்பும் திட்டம், முந்தைய வருடங்களில் அதன் வருமானம் என்ன, போர்ட்போலியோவில் உள்ள நிறுவனங்கள் என்ன, அந்த பண்ட் எப்போது தொடங்கப்பட்டது, வெளியேறும் நேரம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.
எந்தவொரு சொத்து மேலாண்மை நிறுவனம் மற்றும் நிதி மேலாளர் மூலம் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யப் போகிறோமோ அவற்றின் கடன் தகுதி பற்றிய விவரங்களை கண்டிப்பாகப் பெற்று அறிந்து கொள்ள வேண்டும். முதலீடு செய்யும் மியூச்சுவல் பண்ட் திட்டத்தை நிர்வகிக்கும் நிறுவனத்தின் திறனை பொறுத்தே திட்டத்தின் வருவாய் அமையும் என்பதால் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
நீண்ட காலக் கண்ணோட்டத்தில் ஒருவர் மியூச்சுவல் பண்டுகளில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று பொதுவாக ஆலோசகர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து போர்ட்போலியோவைக் கண்காணிக்க வேண்டும். நிதி அல்லது போர்ட்போலியோவை அவ்வப்போது மதிப்பாய்வு செய்ய வேண்டும். இதன் மூலம் இலக்குகளுக்கு ஏற்ப போர்ட்போலியோவை மாற்றுவது எளிதாக இருக்கும்.
மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வதில் ஏதேனும் குழப்பம் இருந்தால், நிபுணர் நிதி ஆலோசகரை அணுகுவது நல்லது. இலக்கு மற்றும் ஆபத்துக்கு ஏற்ப முதலீட்டுத் தொகை, கால அளவு மற்றும் பொருத்தமான திட்டத்தைத் தேர்ந்தெடுக்க இது உதவும்.
ரிஸ்க் உண்டா?
மியூச்சுவல் பண்டுகளை பொறுத்தவரையில் நீண்டகால மூலதன ஆதாய வரி, குறுகியகால மூலதன ஆதாய வரி உண்டு. எனினும் இதில் இஎல்எஸ்எஸ் பண்டுகளில் 1.5 லட்சம் ரூபாய் வரிசலுகையுண்டு. இதில் வருமானமும் அதிகமாகும்.
முதலீட்டைப் பொறுத்தவரை எல்லா முதலீடுகளிலும் ரிஸ்க் உள்ளது. மியூச்சுவல் பண்டுக்கும் இது பொருந்தும். மியூச்சுவல் பண்ட் திட்டங்களிலும் ரிஸ்க் இருக்கிறது. ஆனால் எல்லா திட்டங்களும் ஒரே மாதிரியான ரிஸ்க் இருக்காது. நீண்ட கால முதலீட்டின்போது சிறந்த ரிட்டன்களை வழங்கக்கூடிய திறன் ஈக்விட்டி திட்டங்களுக்கு உண்டு.
லிக்விட் பண்ட் மீதான ரிஸ்க் சற்று குறைவு தான். முதலுக்கும் பாதுகாப்பு உள்ளது. முதலீட்டு ஆலோசகர், மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்களிடம் முறையாக ஆலோசனைப் பெற்று அதில் கிடைக்க கூடிய வருமானம் மற்றும் ரிஸ்க் குறித்து தெரிந்து கொண்டு அதன் பின்பு மியூசுவல் பண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.