இந்தியா - கனடா இடையே யுரேனியம் விநியோகம் உட்பட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா - கனடா இடையே யுரேனியம் விநியோகம் உட்பட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
Updated on
2 min read

புதுடெல்லி: அரசு முறை பயண​மாக டெல்லி வந்​துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி நேற்று பிரதமர் நரேந்​திர மோடியை சந்தித்துப் பேசி​னார். அப்​போது யுரேனி​யம் விநி​யோகம் உட்பட இரு நாடு​கள் இடையே 8 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

கனடா பிரதமர் மார்க் கார்னி 4 நாட்​கள் அரசு முறை பயண​மாக கடந்த 27-ம் தேதி மும்பை வந்​தார். முதல் இரு நாட்​கள் மும்பையில் பல்​வேறு தொழில​திபர்​களை அவர் சந்​தித்​துப் பேசினார். இதைத் தொடர்ந்து நேற்று முன்​தினம் அவர் டெல்லி சென்​றார். அங்​குள்ள ஹைத​ரா​பாத் இல்​லத்​தில் பிரதமர் நரேந்​திர மோடியை அவர் நேற்று சந்​தித்​துப் பேசி​னார்.

அப்​போது பாது​காப்​பு, வர்த்​தகம், எரிசக்​தி, அரிய வகை கனிமங்கள், செயற்கை நுண்​ணறிவு உள்​ளிட்ட பல்​வேறு துறைகளில் இரு நாடு​களும் இணைந்து பணி​யாற்​று​வது குறித்து இரு தலை​வர்​களும் விரி​வான ஆலோ​சனை நடத்​தினர். அப்​போது இந்​தி​யா, கனடா இடையே 8 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

குறிப்​பாக இரு நாடு​கள் இடையே ரூ.24,000 கோடி மதிப்​பில் யுரேனி​யம் விநி​யோக ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி வரும் 2027ம் ஆண்டு முதல் 2035ம் ஆண்டு வரை 11,000 டன் யுரேனி​யத்தை இந்​தி​யா​வுக்கு கனடா விநி​யோகம் செய்​யும்.

அரிய​ வகை கனிமங்​கள், எரிசக்தி தொடர்​பாக இந்​தி​யா, கனடா இடையே 2 முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. நீண்​ட​ கால அடிப்​படை​யில் இந்​தி​யா​வுக்கு எல்​பிஜி எரி​வா​யுவை விநி​யோகம் செய்ய கனடா சம்​மதம் தெரி​வித்​திருக்​கிறது.

திருப்​பதி ஐஐடி, திருப்​ப​தி​யில் செயல்​படும் இந்​திய அறி​வியல் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தில் கனடா பல்​கலைக் ​கழகங்களின் கிளை​களை அமைக்க ஒப்​பந்​தங்​கள் மேற்கொள்ளப்​பட்​டன. மேலும் இரு நாடு​கள் இணைந்து மேற்கொள்​ளும் புதிய திட்​டங்​கள் தொடர்​பான 9 அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​பட்​டன. ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தான பிறகு இரு தலை​வர்​களும் கூட்​டாக நிருபர்​களுக்கு பேட்​டியளித்​தனர்.

அப்​போது பிரதமர் மோடி கூறும்போது, "இந்​தி​யா​வும் கனடா​வும் ஜனநாயக நாடு​கள். இரு நாடு​களும் வேற்​றுமை​யில் ஒற்றுமையை கொண்​டாடி வரு​கின்​றன. இரு நாடு​கள் இடையிலான உறவை அடுத்த கட்​டத்​துக்கு கொண்டு செல்ல ஆலோ​சனை நடத்​தினோம். வரும் 2030-ம் ஆண்​டில் இருதரப்பு வர்த்​தகம் 50 பில்​லியன் டாலரை எட்​டும். இதுதொடர்​பாக இரு நாடு​கள் இடையே வர்த்தக ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்த முடிவு செய்யப்​பட்டு உள்​ளது" என்றார்.

கனடா பிரதமர் மார்க் கார்னி கூறும்போது, "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்​காலம் என்ற இந்​தி​யா​வின் கொள்​கையை நான் முழு​மனதோடு வரவேற்​கிறேன். இன்​றைய சூழலில் உலகம் முழு​வதும் பல்​வேறு சவால்​களை சந்​தித்து வரு​கிறோம். இந்த பிரச்​சினை​களுக்கு தீர்வு காண ஒத்த கருத்​துடைய நாடு​கள் ஒருமித்து செயல்பட வேண்​டும். காற்​றாலை, சூரிய மின் உற்​பத்​தி, ஹைட்​ரஜன் உள்​ளிட்ட எரிசக்தி சார்ந்த திட்​டங்​களில் இரு நாடுகளும் இணைந்து செயல்​படும். வரும் 2050ம் ஆண்​டில் இரு நாடு​களி​லும் மின் உற்​பத்​தியை இரு​ மடங்​காக அதி​கரிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு உள்​ளது.

இந்த நேரத்​தில் சுவாமி விவே​கானந்​தரின் பொன்​மொழிகளை நினை​வு​கூர்​கிறேன். எழுந்​திரு, விழித்​திரு, லட்​சி​யத்தை அடை​யும் வரை உழைத்​திரு என்ற அவரது போதனை​களை அனை​வரும் பின்​பற்ற வேண்​டும். வரும் 2047ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு இருக்​கிறது. இதே​போல வலு​வான கனடாவை உரு​வாக்க நாங்​கள் இலக்கு நிர்ண​யித்து இருக்​கிறோம். இரு நாடு​களின் கனவும் நிறைவேறும்" என்றார்.

இந்தியா - கனடா இடையே யுரேனியம் விநியோகம் உட்பட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
ஈரானில் உயிரிழப்பு 500+ ஆக அதிகரிப்பு: மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைகிறது போர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in