Published : 11 May 2022 07:05 AM
Last Updated : 11 May 2022 07:05 AM

'கிரிப்டோ' பரிவர்த்தனைக்கு 28% வரி விதிக்க பரிந்துரை: ஜிஎஸ்டி கவுன்சிலில் இறுதி முடிவு

புதுடெல்லி: கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை தொடர்பாக ஆய்வு செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு குழுவை நியமித்தது. அக்குழு அளித்த பரிந்துரையின் பேரில் வர்த்தகம் செய்வது மற்றும் கரன்சி வைத்திருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு 28 சதவீத வரி விதிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் இக்குழுவின் பரிந்துரை குறித்து ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கிரிப்டோ பரிவர்த்தனைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஆனால் சூதாட்டம், லாட்டரி, பந்தயம், குதிரை பந்தயம் ஆகியவற்றைப்போல கிரிப்டோ பரிவர்த்தனையையும் கருதி அதற்கு 28 சதவீத வரி விதிக்க கவுன்சில் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பந்தயம், காசினோவில் நடைபெறும் சூதாட்டம் உள்ளிட்டவற்றுக்கு இணையான வரியை கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைக்கும் விதிக்கலாம் எனஒருமனதாக முடிவு செய்யப் பட்டது. இதேபோல ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் 18% ஆக உள்ள வரியை 28 சதவீதமாக உயர்த்துவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விதம் வரி உயர்த்தப்பட்டால் அது கிரிப்டோ வர்த்தகத்துக்கு மிகப்பெரும் பின்னடைவாக இருக்கும் என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே பட்ஜெட்டில் கிரிப்டோ பரிவர்த்தனைக்கென புதிய வரி விதிப்பு கொள்கையை மத்திய அரசு அறிவித்தது.

கிரிப்டோ வர்த்தகம் மூலமாக பெறப்படும் மூலதன ஆதாயத்துக்கு 30 சதவீத வரியும், பரிவர்த்தனைக்கு ஒரு சதவீத வரியும் (டிடிஎஸ்) விதிக்கப்படும் எனதெரிவிக்கப்பட்டது. அப்போதிருந்தே கிரிப்டோ வர்த்தகம் பெருமளவில் பாதிப்புக்குள்ளானது.

இப்போது 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டால், ஏற்கெனவே விதிக்கப்படும் 30 சதவீத மூலதன ஆதாய வரி மற்றும் ஒரு சதவீத பரிவர்த்தனை வரி (டிடிஎஸ்) ஆகியவற்றையும் செலுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x