Published : 28 Apr 2016 03:58 PM
Last Updated : 28 Apr 2016 03:58 PM

அறிவுசார் காப்புரிமையை விட்டுக்கொடுத்து ‘மேக் இன் இந்தியா’வுக்கு ஒத்துழைப்பா? - அமெரிக்கா கேள்வி

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உற்பத்தி அல்லது வர்த்தகம் செய்வதென்பது தங்களது கண்டுபிடிப்புகளுக்கான அறிவுசார் காப்புரிமையை விட்டுக் கொடுத்துதான் செய்ய வேண்டுமென்றால் அது மிகக் கடினம் என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதித்துவ சிறப்பு ஆண்டறிக்கையில் பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது.

அறிவுசார் சொத்துரிமை தொடர்பாக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் பலவற்றை ஊக்கமளிப்பதாகக் கூறியுள்ள இந்த அறிக்கை, சில கவலைகளையும் எழுப்பியுள்ளது, குறிப்பாக உள்நாட்டு உற்பத்தியை இந்தியா வளர்ப்பதற்காக அறிவுசார் காப்புரிமைத் தரநிலையை பராமரிக்காமல் போகும் என்று கவலை எழுப்பியுள்ளது.

இந்தியா உள்நாட்டு உற்பத்தியை வளர்த்தெடுக்க முயற்சி செய்து வரும் சூழலில் இருநாடுகளுக்கு இடையேயும் வர்த்தக விவகாரங்களில் ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் போது இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

“உள்நாட்டு உற்பத்திக்குச் சாதகமாகவோ அல்லது இந்திய அறிவுசார் காப்புரிமையை பாதுகாப்பதாகவும் இந்திய அரசின் கொள்கைகள் இருப்பது அமெரிக்காவுக்கு கவலை ஏற்படுத்தியுள்ளது” என்று இந்த அறிக்கை கூறுகிறது.

இது குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி மைக்கேல் ஃப்ரொமேன் கூறும்போது, “திரைப்படங்கள், இசை முதல் பசுமை தொழில்நுட்பம் மற்றும் மருந்து உற்பத்தி ஆகிய துறைகளில் அமெரிக்க படைப்பாளிகள் மற்றும் புதிதைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அறிவுசார் காப்புரிமை விவகாரத்தில் ஒரு சாதக சூழ்நிலை உள்ளது. ஆகவே முன்னுரிமை கண்காணிப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள (இந்தியா) நாடுகள் அறிவுசார் காப்புரிமை விவகாரத்தில் விதிமுறைகளை எழுத நாங்கள் அனுமதிக்க முடியாது. இந்த விதிகள் பாரபட்சமாக உள்ளது அல்லது படைப்பூக்கத்துக்கும் புதியன புகுதலுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளது” என்றார்.

ஆனால், அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளின் இந்த முடிவை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை. இது நாட்டின் இறையாண்மையில் தலையிடுவதாக இந்தியா பார்க்கிறது.

அதாவது அறிக்கையில் கூறப்பட்டுள்ள வகைப்படுத்தல்களை ஏற்க முடியாது, காரணம், இது ஒரு நாட்டுக்கு எதிரான அரசியல் முடிவே என்று இந்திய அதிகாரபூர்வ வட்டாரங்கள் அமெரிக்காவுக்கு சுட்டிக் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அறிக்கை மேலும் கூறும்போது, “அறிவுசார் காப்புரிமை விவகாரத்தில் இந்திய அரசு உடன்பாடான பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்திய நீதிமன்றங்களும் அயல்நாடு, உள்நாடு மனுதாரர்கள் என்ற பாகுபாடின்றிதான் வழக்குகளை நடத்துகிறது. ஆனாலும் அறிவுசார் காப்புரிமை விவகாரத்தில் நீண்டநாட்களாக உள்ள உள்ளார்ந்த குறைபாடுகளை இந்தியா சரிவர கவனிக்கவில்லை. ஆனால் பிரச்சினைக்குரிய கொள்கைகளுக்கு ஒப்புக் கொண்டு வருகிறது. முதலீட்டை பெருக்கி புதுமைகளை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டம் நிச்சயம் நிறைவேற வேண்டும், ஆனால் அறிவுசார் காப்புரிமை என்ற மிகப்பெரிய விலையை அதற்காக நாங்கள் கொடுக்க முடியாது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அறிவுசார் காப்புரிமை சட்டத் திட்டங்கள் கறாராக கடைபிடிக்கப் படாததால் திருட்டு விசிடி மூலம் ஆண்டொன்றுக்கு ரூ.4 பில்லியன் டாலர்களும், உரிமம் பெறாத மென்பொருள் பிரிவில் வர்த்தக மதிப்பில் 3 பில்லியன் டாலர்களும் இழப்பீடு ஏற்படுகிறது என்று இந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.

எனவே இத்தகைய திருட்டு நடவடிக்கைகளினால் பாதிக்கப்படுவது அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமல்ல இந்திய நிறுவனங்களும்தான் என்று இந்த அறிக்கை எச்சரித்துள்ளதோடு, “அமெரிக்காவுக்கு வந்து சேரும் பல அனுமதி பெறாத கள்ளப்பொருட்கள் மற்றும் போலிப் பொருட்களில் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து வருவதே, எனவே இந்திய அரசு தங்களது கட்டாய உரிமம் வழங்கும் முடிவு குறித்த நடைமுறைகளை தெளிவுபடுத்த அமெரிக்கா கோருகிறது” என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x