Last Updated : 03 Apr, 2016 08:24 AM

 

Published : 03 Apr 2016 08:24 AM
Last Updated : 03 Apr 2016 08:24 AM

தமிழகத்தின் கடன் எவ்வளவு? எப்படி சமாளிக்கப் போகிறோம்?

கடந்த பிப்ரவரி 16-ம் தேதி 2016-17-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதி அமைச்சர், 2017 மார்ச் மாத முடிவில் தமிழக அரசின் மொத்த கடன் நிலுவை ரூ 2,47,031 கோடியாக இருக்கும் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சிகள் இது மிக அதிகமான கடன் அளவு என்ற சர்ச்சையை கிளப்பின. ஆனால், அரசின் கடன் அளவு கட்டுபாட்டிற்குள் இருப்பதாக அரசு தரப்பில் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டது.

அரசின் கடன் வரம்புக்குள் உள்ளதா?

“தமிழக நிதி நிலை பொறுப்பு சட்டம், 2003” என்ற ஒன்று உள்ளது. இச்சட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் அரசின் மொத்த கடன், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 25% மிகாமல் இருக்கவேண்டும் என்ற வரையறை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசின் மொத்த கடன் சுமை இந்த வரையறையை மீறவில்லை என்று அரசு கூறுவது உண்மை. மேலும், இங்கு கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்க்கும் போது தமிழக அரசின் கடன் மாநில மொத்த உற்பத்தி அளவில் 20% தான் இருப்பதால், மேலும் கூடுதலாக கடன் வாங்க வைப்பு உள்ளது என்பதையும் குறிப்பிடவேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலையில் பற்றாக்குறை இருக்கத்தான் செய்யும். இந்த நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உற்பத்தியில் 3% மிகாமல் இருக்கவேண்டும் என்று “தமிழ்நாடு நிதி நிலை பொறுப்புச் சட்டம், 2௦௦3” கூறுவதால், தமிழக அரசு இதனையும் கட்டுக்குள் வைக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வாங்கும் புதிய கடன் அளவு வரம்புக்குள் இருந்தாலும், அது தமிழக அரசின் மொத்த கடன் தொகையை உயர்த்திக்கொண்டே போகிறது. எனவேதான் அட்டவணையில் உள்ளது போல நிலுவையில் உள்ள மொத்த கடன் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

தமிழக அரசின் கடன் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், அரசு நிறுவனங்களின் கடன் அளவும், நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளின் கடன் அளவும் அதிகரித்து வருவது இப்போது தெரிகிறது.

நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளின் கடன்

நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலை மத்திய, மாநில அரசுகளை நம்பியே உள்ளது. நகர உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த செலவில் 5௦% மேலாக தங்கள் சொந்த வரி வருவாயில் ஈடுசெய்கிறார்கள். ஆனால் மீதம் உள்ள செலவு தொகைக்கு மத்திய மாநில அரசுகளை சார்ந்திருக்கவேண்டி உள்ளது. இந்த இரு அரசுகளும் கொடுக்கும் வரி வருவாயில் பங்கு, கொடை, சில குறிப்பிட்ட திட்ட செலவுகளுக்கான கொடை என்று பல இருக்க, அவை அனைத்தும் போதாமல் இந்த நகராட்சிகள் கடன் வாங்க துவங்கியுள்ளன. அட்டவணையில் குறிப்பிட்டுள்ளது போல 2010-11, 2013-14 ஆகிய இரு ஆண்டுகளில் நகராட்சிகள் வாங்கிய மொத்த கடன் முறையே ரூ.626 கோடி, ரூ.903 கோடியாக இருக்க இது புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. திடீரென நகராட்சிகளின் கடன் சுமை அதிகரிப்பது, எதிர்காலத்தில் அந்த அமைப்புகளின் வட்டி சுமையை அதிகரித்து, மற்ற செலவுகளுக்கான வாய்ப்பை குறைத்துவிடும்.

உதாரணமாக, தமிழக அரசின் ஆலோசனைப்படி “அம்மா உணவகம்” நடத்திய வேலூர் மாநகராட்சி 2013-14 ஆண்டில் இந்த திட்டத்தில் மட்டுமே ரூ.1.72 கோடி பற்றாக்குறையை சந்தித்தது என்று கணக்கு தணிக்கை அதிகாரி (Comptroller Auditor General) கூறுகிறார்.

தமிழக அரசு தனது கடன் சுமையை குறைத்து, நகராட்சிகளுக்கு கூடுதல் நிதி கொடையை தரவில்லை என்றால் அவை கடன் வாங்குவதை தவிர வேறுவழி இல்லை. நகராட்சிகளின் கடனுக்கு அந்தந்த நகராட்சிகளே காரணம் என்றாலும், நகராட்சிகளை அரசியல், நிதியியல், நிர்வாக ரீதியாக கட்டுபடுத்துகிற மாநில அரசுக்கு, நகராட்சிகளின் நிதி நிலையை உயர்த்தி கடன் அளவை குறைக்கும் பொறுப்பு உள்ளது.

மாநில நிறுவனங்களின் கடன் எவ்வளவு?

தமிழக அரசு, அதனை சார்ந்திருக்கும் நிறுவனங்கள் கடன் வாங்கும் போது அதற்கு உத்திரவாதம் (Guarantee) அளிக்கும். “தமிழக நிதி நிலை பொறுப்பு சட்டம், 2003” படி மாநில அரசு உத்திரவாதம் அளிக்கப்பட்ட கடன் தொகையின் அளவு எப்போதும் மாநில அரசின் மொத்த நிதி வருவாயை மீறக்கூடாது என்ற வரையறை உள்ளது. அவ்வாறு 2014-15 ஆண்டு உறுதியளிக்கப்பட்ட மொத்த கடன் தொகை 2013-14 ஆண்டின் மொத்த நிதி வருவாயில் 49.70%தான் என்று இடைக்கால நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டது. 2013-14-ல் ரூ.1,08,036 கோடி மொத்த வருவாயாக இருக்க அதில் 49.07% உறுதி அளிக்கப்பட கடன் அளவு என்றால் 2014-15-ல் அரசு நிறுவனங்களின் நிலுவையில் உள்ள கடன் அளவு ரூ.53,694 கோடியாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால், அரசு நிறுவனங்களின் மொத்த கடன் நிலுவை 2012-13 ஆண்டே ரூ.62,044.08 கோடியாக உள்ளதை அட்டவணையில் காணலாம். இந்த கடன் நிலுவையும் 2013-14ல் ரூ.77,285.51 கோடியாக மேலும் உயர்ந்துள்ளதை காணலாம். எனவே அரசு உறுதி அளிக்காத கடனையும் அரசு நிறுவனங்கள் பெற்றிருப்பதாக தெரிகிறது. குறிப்பாக அரசு நிறுவனங்களின் கடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் வேகமாக அதிகரித்திருப்பதை அட்டவணையில் காணலாம்.

தமிழக அரசின் மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்வு தொடர்பான TANTRANSCO, TANGEDCO ஆகிய இரண்டு நிறுவனங்களின் கடன் நிலுவை 2013-14ல் ரூ.73,541.33 கோடியாக இருந்தது. இதற்கு முந்தைய நிதி ஆண்டான 2012-13ல் இந்த இரண்டு நிறுவனங்களின் கடன் நிலுவை ரூ.58,883.06 கோடியாக இருந்தது, அதாவது 2013-14-ம் ஆண்டு நிகர கடன் ரூ. 14,631.27 கோடி உயர்ந்துள்ளது.

ஒரு நிறுவனம் அல்லது அரசின் கடன் சுமை அதிகரித்தால் அந்நிறுவனம் அல்லது அரசின் கடன் பெரும் தகுதி குறைந்து கொண்டே போகும். தமிழக மின்சார நிறுவனத்தின் கடன் பத்திரத்தின் தகுதியை அளவிடும் CARE என்ற அமைப்பு இந்த கடன் பத்திரத்தின் தகுதியை CARE A-(SO) என்ற நிலையில் வைத்துள்ளது. ஒரு கடன் பத்திரத்தின் அதிகபட்ச தகுதி AAA ஆகும், அதற்கு அடுத்து AA, A என்று குறைந்து A- என்ற நான்காம் இடத்தில் இந்த கடன் பத்திரம் இருப்பதாக தெரிகிறது. கடன் அளவு அதிகரிக்கும் போது கடன் பெரும் தகுதி குறைந்து, அதிக வட்டி கட்டவேண்டிய சூழல் உருவாகும் என்பதை நினைவில் வைக்கவேண்டும்.

எனவே, நகராட்சி, உள்ளாட்சிகளின் கடன், அரசு நிறுவனங்களின் கடன் என்று எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தமிழக அரசின் கடனாக நாம் எடுத்துக்கொண்டால், அரசின் மொத்த கடன் நிலுவை 2015-16-ல் ரூ 3 லட்சம் கோடியை தாண்டும்.

அரசு கடனுக்கு என்ன காரணம், அதனை எப்படி குறைப்பது, நகர உள்ளாட்சிகளின் கடனை எவ்வாறு சீரமைப்பது, அரசு நிறுவனங்கள் குறிப்பாக மின்சார நிறுவனங்களின் கடனை எவ்வாறு குறைப்பது என்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் ஆக்கபூர்வமான யோசனைகளை தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறவேண்டும்.

seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x