Published : 23 Apr 2016 09:45 AM
Last Updated : 23 Apr 2016 09:45 AM

விஜய் மல்லையாவுக்கு நெருக்கடி முற்றுகிறது: வங்கிகளுக்கு ரூ.6,868 கோடி கொடுக்க ஒப்புதல்

விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கியது, ஜாமீனில் வரமுடியாத பிடி ஆணை பிறப்பித்தது உள்ளிட்ட நெருக்கடி அதிகமாகி வரும் சூழ்நிலையில், கூடுதல் தொகையை வங்கிகளுக்கு கொடுக்க அவர் முன் வந்திருக்கிறார். முன்னதாக 4,400 கோடி ரூபாயை கொடுக்க முன்வந்த அவர் இப்போது 6,868 கோடி ரூபாயை கொடுக்க முன் வந்திருக்கிறார். இந்த தகவலை உச்ச நீதிமன்றத்துக்கு அவர் தெரிவித்திருக்கிறார். கடன் தொகை மற்றும் வட்டி சேர்ந்து 9,000 கோடி ரூபாயை மல்லையா செலுத்த வேண்டி இருக்கிறது.

இந்தியாவுக்கு திரும்புவது குறித்த எந்த பதிலையும் கூறாத மல்லையா, என்னால் அதிகபட்சம் கொடுக்க முடிந்த தொகை இவ்வளவுதான். கிங்பிஷர் செயல்பட்ட சமயத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, அதிக வரி செலவுகள் என பலவற்றால் 6,107 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

தவிர, அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை சீலிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றத்துக்கு கொடுத்திருக்கிறார். என் மனைவி மற்றும் குழந்தைகள் அமெரிக்க குடி உரிமை பெற்றவர்கள் என்பதால் அவர்களை இந்த வழக்கில் இணைக்க முடியாது. முன்னதாக 1,591 கோடி ரூபாயை உச்ச நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

என்னுடைய கடன்களை பேசி தீர்க்க நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் என்னுடைய பாஸ்போர்ட் முடக்கம் செய்வது எனக்கு எதிராக பிணையில் வர முடியாத பிடி ஆணை பிறப்பிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் இருக்கும் சூழ்நிலையில் பேச முடியாது. கிங்பிஷர் தொடங்கப்பட்டதில் இருந்தே யூபி குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தன. இப்போது அனைத்தும் நஷ்டமடைந்துவிட்டன என்று மல்லையா உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவித்திருக்கிறார்.

எம்பி சலுகைகள்

விஜய் மல்லையாவுக்கு பல சிக்கல்கள் இருந்தாலும் மாநிலங் களவை உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை பெற்றிருக்கிறார் என்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்திருக்கிறது.

சமூக செயல்பாட்டாளர் முகமது காலித் ஜிலானி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இதனை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ரூ.50,000 மற்றும் 20,000 ரூபாய் சலுகைகள் பெற்றிருக்கிறார். ஜூலை 1, 2010 முதல் செப்டம்பர் 30,2010 வரை இந்த சலுகைகளை பெற்றிருக்கிறார். டெலிபோன் கட்டணமாக 1.73 லட்ச ரூபாய் பெற்றிருக்கிறார். அதே சமயத்தில் தண்ணீர், மின்சாரம் மற்றும் மருத்துவ செலவுகளுக்கு எந்த தொகையும் வாங்கவில்லை.

2002-ம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவுடன் மாநிலங்களவைக்கு மல்லையா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு 2010-ம் ஆண்டு பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவுடன் இரண்டாம் முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.

இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை

விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

ரூ. 9,000 கோடி கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வந்து சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வைக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்காக பல்வேறு அமைப்புகளோடு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் அமலாக்கத்துறை கடிதம் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு சட்ட நிபுணர்களோடு ஆலோசித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x