Published : 24 Jan 2022 07:20 AM
Last Updated : 24 Jan 2022 07:20 AM

வரும் நிதி ஆண்டில் 9% பொருளாதார வளர்ச்சி: மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆய்வறிக்கையில் எதிர்பார்ப்பு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட உள்ள பொருளாதார ஆய்வறிக்கை இம்முறை ஒரே ஒரு தொகுதி (வால்யூம்) கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. வரும் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9% அளவுக்கு இருக்கும் என்று ஆய்வறிக்கையில் குறிப் பிடப்படலாம் என தெரிகிறது.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பு நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இதை தயார் செய்யும் பணியில் முதன்மை பொருளாதார ஆலோசகர் ஈடுபட்டுள்ளார். வழக்கமாக தலைமைப் பொருளாதார ஆலோசகர்தான் (சிஇஏ) நிதி அமைச்சக அதிகாரிகளுடன் இணைந்து பொருளாதார ஆய்வறிக்கை தயாரிப்பில் ஈடுபடுவார். அப்பதவி காலியாக உள்ளதால் முதன்மை பொருளாதார ஆலோசகர் இப்பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

2014-ல் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு முதலாவது பொருளாதார ஆய்வறிக்கை அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜேட்லியால் தாக்கல் செய்ப்பட்டது. அதை மூத்த பொருளாதார ஆலோசகர் இலா பட்நாயக் தயார் செய்திருந்தார்.

அந்த சமயத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவிக்கு நியமிக்கப்பட்டதால் அப்பணியிடம் காலியானது. 2014 அக்டோபரில் அப்பதவிக்கு அர்விந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார்.

இவரைத் தொடர்ந்து தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்ட கேவி சுப்ரமணியத்தின் 3 ஆண்டு பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து அப்பதவிக்கு உரிய நபரைத் தேர்வு செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் முன்கூட்டிய மதிப்பீட்டின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி 9.2% அளவுக்கு இருக்கும் என தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி 9.5% அளவுக்கு இருக்கும் என கணித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு காரணமாக 2020-21-ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.3% ஆக சரிந்தது. நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் பெருமளவு பாதிக்கப்படவில்லை. இதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது வரும் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9% அளவுக்கு இருக்கும் என்று ஆய்வறிக்கை எதிர்பார்க்கிறது.

இந்தியாவில் 8.7% வளர்ச்சி இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வரும் நிதி ஆண்டில் 7.6 சதவீத அளவுக்கு இருக்கும் என இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x