

உண்மையான வட்டி விகிதம் உயர்வது மற்றும் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது ஆகிய காரணங்களால் தனியார் நுகர்வு உயரும் என்று அமெரிக்காவை சேர்ந்த புரோக்கரேஜ் நிறுவன மான மார்கன் ஸ்டான்லி தெரிவித்திருக்கிறது.
இந்த அறிக்கையை மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் சேத்தன் அயா தயாரித்திருக்கிறார். இந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது.
1998-ம் முதல் 2002-ம் ஆண்டு வரை நுகர்வில் ஒரு பெரிய ஏற்றம் இருந்தது அந்த அளவுக்கான ஏற்றம் இப்போதும் இருக்கும். அதே சமயத்தில் 2004-2007ம் ஆண்டு நடந்த ஏற்றத்தை விட குறைவாக இருக்கும்.
1998-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை மத்திய, மாநில அரசுகள் செலவு செய்ய வில்லை. ஆனால் இப்போது விரிவாக்க நடவடிக்கை யில் இருக்கின்றன. தவிர உள்நாட்டு தேவையிலும் ஏற்றம் உருவாகி இருக்கிறது.
மேலும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின் றன. அதே சமயத்தில் ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் செலவுகளால் தனி நபர் நுகர்வு உயரும். 1998-ம் ஆண்டு திரும்ப வும் உருவாகிற சூழ்நிலை இருக்கிறது. அப்போதைவிட இப்போது இரு விஷயங்கள் மேலும் சாதகமாக இருக்கின்றன. பொதுத்துறை முதலீடு மற்றும் அந்நிய நேரடி முதலீடு ஆகியவை உயர்ந்துள்ளன.
அந்நிய நேரடி முதலீடு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. டிசம்பர் 2015 நிலவரப்படி 5,500 கோடி டாலராக அந்நிய நேரடி முதலீடு இருக்கிறது. இது நாட்டின் ஜிடிபியில் 2.7 சதவீத மாகும். பேரியல் பொருளாதாரமும் சிறப்பாக இருக்கிறது.
நாட்டின் ஒட்டுமொத்த நிதிப்பற்றாக்குறை அடுத்த நிதி ஆண்டில் 5.8 சதவீதமாக இருக்கும். (3.5 சதவீதம் மத்திய அரசு மற்றும் 2.3 சதவீத மாநில அரசு) கடந்த 2014-ம் நிதி ஆண்டு ஒட்டு மொத்த நிதிப்பற்றாக்குறை 7 சதவீதமாக இருந்தது. அதனு டன் ஒப்பிடும்போது நிதிப் பற்றாக்குறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2009-ம் நிதி ஆண்டில் மொத்த நிதிப்பற்றாக் குறை 9.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கத்தை பொருத்தவரை தொடர்ந்து 16-வது மாதமாக குறைந்து வருகிறது. இதன் காரண மாக உண்மையான வட்டி விகிதம் உயர்ந்து வருகிறது. (உண்மையான வட்டி விகிதம் என்பது வட்டி விகிதத்துக்கும் பணவீக்கத்துக்கும் உள்ள வேறுபாடு ஆகும்)
பல சாதகமான சூழல் இருந்தாலும் சில பாதகங்களும் இந்திய பொருளாதாரத்தில் உள்ளது. தற்போது நிறுவனங்களின் கடன் அதிகமாக இருக்கிறது என்று மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.