Published : 01 Mar 2016 08:36 AM
Last Updated : 01 Mar 2016 08:36 AM

பட்ஜெட்டில் வரி சார்ந்த 10 முக்கிய அம்சங்கள்

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த 2016-17-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வரி சார்ந்த 10 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஜேட்லி தனது 3-வது பட்ஜெட்டில் சில வரிச் சலுகைகள் இருந்தாலும் பன்முக புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இது சாதாரண மக்களையும் மறைமுகமாக பாதிக்கும். 2016 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரி விதிப்பு அம்சங்கள்

நேரடி வரி

* வருமான வரி விதி 87ஏ பிரிவின்கீழ் அளிக்கப்படும் ஆண்டுச் சலுகை ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 கோடி வரி செலுத்துவோர் அதிகம் சேமிக்க முடியும்.

* வாடகை வீட்டில் குடியிருக்கும் வரி செலுத்துவோர் வீட்டு வாடகை அலவன்ஸ் (ஹெச்ஆர்ஏ) பெறாவிடில் அவர்களது வரித் தொகையில் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் வரை விலக்கு பெறலாம். இது தற்போது ரூ.24 ஆயிரமாக உள்ளது.

* முதல் முறையாக வீடு வாங்குவோர் கூடுதலாக ரூ.50 ஆயிரம் வரை வட்டி சலுகை பெறலாம். இந்த சலுகை ரூ.35 லட்சம் வரை பெற முடியும். வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு மிகாமலிருக்க வேண்டும்.

* பெரும் பணக்காரர்கள் அல்லது ரூ.1 கோடிக்கும் அதிகமான வருமானம் பெறுவோர் கூடுதலாக சர்சார்ஜ் செலுத்த வேண்டும். இந்த வரம்பு 12 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் டிவிடெண்ட் (ஈவுத் தொகை) பெறுவோர் இனி மொத்த ஈவுத் தொகையில் 10 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும்.

மறைமுக வரி

* உணவு விடுதிகளில் உண்பது, சொத்து வாங்குவது, காப்பீடு எடுப்பது, செல்போனில் பேசுவதற்கும் அதிக தொகை செலவிட வேண்டியிருக்கும். ஜூன் 1, 2016-முதல் ``கிரிஷி கல்யாண்’’ வரி என அனைத்துக்கும் 0.5 சதவீத வரி விதிக்கப்படும்.

* பிராண்டட் ஜவுளித் துணிகளுக்கான உற்பத்தி வரி 6 சதவீதம் விதிக்கப்படுகிறது. ரூ.1,000-க்கு மேற்பட்ட துணிகளுக்கு இந்த வரி விதிப்புக்குள்ளாகும். அதேபோல செயற்கை நகைகளுக்கான சுங்க வரி 10 சதவீதம் முதல் 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* சிகரெட் விலை வரும் நிதி ஆண்டில் அதிகரிக்கும். புகையிலை சார்ந்த பொருள்களுக்கு (பீடி தவிர்த்து) உற்பத்தி வரி 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* ஒரு முறை செலுத்தும் காப்பீட்டு பிரீமியங்களுக்கான சேவை வரி 3.5 சதவீதத்திலிருந்து 1.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய காப்பீடுக்கான பிரீமியம் இனி குறையும்.

* ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான காருக்கு 1 சதவீத வரி கூடுதலாக செலுத்த வேண்டும். ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான சரக்கு மற்றும் சேவை வசதி பெறுவோர் 1 சதவீத வரியை செலுத்த வேண்டும். கட்டமைப்பு வரியாக சிறிய ரக பெட்ரோல், எல்பிஜி, சிஎன்ஜி கார்களுக்கு 1 சதவீத வரியும், டீசல் கார்களுக்கு 2.5 சதவீத வரியும் எஸ்யுவிக்களுக்கு 4 சதவீத வரியும் செலுத்த வேண்டும். இதனால் அனைத்து ரக கார்களின் விலையும் அதிகரிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x