Published : 24 Feb 2016 09:36 AM
Last Updated : 24 Feb 2016 09:36 AM

என்டிபிசி பங்கு விலக்கல்: ரூ.5,000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டம் - நிறுவன முதலீட்டாளர்கள் ஆர்வம்

பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி-யில் ஐந்து சதவீத பங்கு களை விலக்கிகொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதன் மூலம் 5,000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

பங்கு விலக்கலுக்கு புதிய விதிமுறைகளை செபி கொண்டு வந்த பிறகு நடக்கும் முதல் பங்கு விலக்கல் இதுவாகும். புதிய விதிகளின் படி முதல் நாளில் நிறுவன முதலீட்டாளர்களும், இரண்டாம் நாளில் சிறு முதலீட்டாளர்களும் கலந்துகொண்டு பங்குகளை வாங்க லாம். முதல் நாளான நேற்று நிறுவன முதலீட்டாளர், தங்களுக்கு ஒதுக் கப்பட்ட பங்குகளை விட 2 மடங் குக்கு மேல் பரிந்துரை செய்தனர். இன்று சிறு முதலீட்டாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 சதவீத பங்குகளுக்கு விண்ணப்பிப்பார்கள்.

இந்த பங்கு விலக்கல் மூலம் மத்திய அரசு 5,029 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டிருக்கிறது. மத்திய அரசு வசம் உள்ள பங்குகளில் 41.22 கோடி பங்குகளை விலக்கிகொள்ள திட்டமிடப்பட்டிருக்கிறது. திங்கள் கிழமை பங்கு வர்த்தகத்தில் என்டிபிசி பங்கின் விலை 126.85 ரூபாயாக முடிந்தது. அதில் இருந்து 3.8 சதவீதம் தள்ளுபடி கொடுத்து 122 ரூபாயை பங்கு விலக்கல் விலையாக மத்திய அரசு நிர்ணயம் செய்தது. இந்த விலையில் இருந்து சிறு முதலீட்டாளர்களுக்கு 5 சதவீத தள்ளுபடியில் பங்குகள் கிடைக்கும். (2 லட்ச ரூபாய்க்கு கீழ் முதலீடு செய்பவர்கள் சிறு முதலீட்டாளர்கள் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது).

டிசம்பர் 31-ல் முடிவடைந்த காலாண்டில் என்டிபிசி நிறுவனத் தில் மத்திய அரசு வசம் 74.96 சதவீத பங்குகள் உள்ளது. 5 சதவீத பங்குகள் விலக்கிக்கொள்ளும் பட்சத்தில் 69.96 சதவீத பங்குகள் மத்திய அரசு வசம் இருக்கும். நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு 2.5 சதவீதம் சரிந்து 123.80 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.

நடப்பு நிதி ஆண்டில் நடக்கும் ஆறாவது பங்கு விலக்கல் இது வாகும். பங்கு விலக்கல் மூலம் 69,500 கோடி ரூபாய் திரட்ட திட்ட மிடப்பட்டிருந்தாலும், இதுவரை 13,300 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டிருக்கிறது.

தரக்குறியீட்டில் மாற்றம் இல்லை

என்டிபிசி நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை விலக்கிகொண்டால் இந்த நிறுவனத்தின் மீதான தரக்குறியீட்டில் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்று மூடி’ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தற்போது இந்த நிறுவனத்துக்கான தரக்குறியீடு பிஏஏ3 ஆக உள்ளது.

5 சதவீத பங்கு விலக்கலுக்கு பிறகும் மத்திய அரசு வசம் பெரும்பான்மையான பங்குகள் இருப்பதால் எங்களது தரக்குறி யீட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று மூடி’ஸ் நிறுவனத் தின் வல்லுநர் அபிஷேக் தியாகி கூறினார். ஒரு வேளை 50 சதவீதத் துக்கும் கீழ் மத்திய அரசு பங்கு கள் குறையும் பட்சத்தில் தரக்குறி யீட்டில் மாற்றம் இருக்கலாம். இப்போதைக்கு தரக்குறியீடு குறைக்கப்பட்டால் அது இந்த துறையில் நிலவும் சாதகமற்ற தன்மையே காரணமாக இருக்கும் என்று அபிஷேக் கூறினார்.

பங்குச் சந்தைகள் சரிவு

நான்கு நாள் தொடர் ஏற்றத் துக்கு பிறகு இந்திய பங்குச் சந்தைகள் நேற்று சரிந்தன. சென் செக்ஸ் 379 புள்ளிகள் சரிந்து 23410 புள்ளியிலும், நிப்டி 125 புள்ளிகள் சரிந்து 7109 புள்ளியிலும் முடி வடைந்தன. நிப்டி பட்டியலில் உள்ள 50 பங்குகளில் ஏசியன் பெயின்ட்ஸ் பங்கு மட்டுமே சிறிதளவு உயர்ந்தது. மற்ற அனைத்து 49 பங்குகளும் சரிந்து முடிவடைந்தன. குறிப்பாக பேங்க் ஆப் பரோடா அதிகபட்சமாக 4.81 சதவீதம் சரிந்து முடிந்தது. துறை வாரியாக பார்க்கும் போது வங்கி, ரியால்டி உள்ளிட்ட குறியீடுகள் சரிந்து முடிவடைந்தன.

இதுவரை நடந்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடந்த நாட்களில் சென்செக்ஸ் 17 முறை சரிந்திருக்கிறது. மாறாக மூன்று முறை மட்டுமே சென்செக்ஸ் உயர்ந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x