Last Updated : 15 Feb, 2016 09:46 AM

 

Published : 15 Feb 2016 09:46 AM
Last Updated : 15 Feb 2016 09:46 AM

மத்திய பட்ஜெட்- 3. கொஞ்சம் கவனிங்க பாஸ்!

“அவசரத்தில் இருந்து முக்கியமானதைப் பிரித்துப் பார்க்க வேண்டியது அவசியம் என்கிற கருத்தை இதயத்தில் கொண்டிருக்கிறது இவ்வறிக்கை”. - முகப்புரையில் அரவிந்த் சுப்ரமணியன். முதன்மை பொருளாதார ஆலோசகர், நிதி அமைச்சகம்.

நம் தேவைகள் மிகப் பல. சில முக்கியமானவை; சிலவோ அவசரமானவை. இரண்டுக்கும் என்ன வேறுபாடு...?

நல்ல கோடைக் காலம். நாள் முழுவதும், வெளியே ஊர் சுற்றுகிற வேலை.

விற்பனைப் பிரதிநிதி என்று வைத்துக் கொள்வோமே.. அப்படி ஒருவர் இருக்கிறார்.

இவருக்கு, காலணிகள் வேண்டும்; குளிர்க் கண்ணாடியும் (கூலிங் கிளாஸ்) வேண்டும்.

இரண்டுமே தேவைதான். ஆனால், நமக்கு நன்றாகப் புரிகிறது. காலணிகள் அவசரம்; கண்ணாடி - முக்கியம்.

அவசரத்தில் முக்கியம் இருக்கிறது; ஆனால், முக்கியத்தில் அவசரம் இல்லை.

எதற்காக இந்தக் குழப்பமான விளக்கம்..?

காலம் காலமாக நாம் பார்த்து படித்து அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மை - விவசாயம்தான் நமது நாட்டின் உயிர் நாடி. விவசாய மேம்பாட்டுக்கு, பொருளாதார ஆய்வறிக்கை என்ன வழி காட்டுகிறது...?

நிதி ஆண்டு 2014-15-ல், உணவுப் பொருள் உற்பத்தி 25.70 கோடி டன்.

எத்தகைய சூழலில்...? பருவ மழை, சராசரிக்கு 12% குறைவு. உற்பத்தியோ முந்தைய ஆண்டை விட, 3% மட்டுமே குறைந்தது. ஆக, இந்த ஆண்டைப் பொறுத்தவரையில், இயற்கை கை விட்ட போதும், விவசாயிகள் நம்மைக் கை விடவில்லை. ஆனால்....?

விவசாய ஆராய்ச்சி, விவசாயக் கல்வி, விவசாயத்தில் நவீன தொழில் நுட்பத்தைப் புகுத்துதல், மரபணு மாற்றப் பயிர்கள், யூரியா உரத் தயாரிப்பில் முதலீடு... என்று பல விஷயங்கள் பேசப்பட்டாலும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில், ஆய்வறிக்கை குழப்பமான தெளிவற்ற போக்கையே படம் பிடித்துக் காட்டுகிறது.

“விளை நிலங்களின் அளவை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பே இல்லை” என்கிறது அறிக்கை.

(“the room for increasing production through raising cropped area is virtually non-existent”) (பாகம் 2 அத்தி 05; பத்தி 5:18)

‘களர் நிலங்களை விளை நிலங்களாக மாற்ற போர்க்கால நடவடிக்கை வேண்டும்' எனக் குரல் கொடுக்கலாம் என்று பார்த்தால், அதற்கான சாத்தியமே இல்லை’ என்று அடித்து சொல்வது, உண்மையில் பேரதிர்ச்சி.

“மரபணு மாற்றப் பயிர்களால் எதிர்மறை விளைவுகள் உண்டாகும் என்பதற்கான ஆதாரம் இல்லை” (அத்தி 5; பத்தி:5:30). மரபணு மாற்றத்துக்கு ஆதரவாகக் குரல் தரும் அறிக்கை, இயற்கை வேளாண்மையை கணக்கில் கொள்ளவே இல்லை. மாறாக, “நைட்ரஜன், பாஸ்பேட் உர உற்பத்தி, ‘இலக்கை' விடவும், பல லட்சம் டன் குறைவாக உள்ளது” என்று கவலை கொள்கிறது.

“நீர் மிகைப் பகுதிகளில் இருந்து, பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு தண்ணீரை மாற்றுவதற்கு வழிகோலும், ‘தேசிய நீர் நிலையம்' (National Water Grid) குறித்த ஆலோசனைகள் அவ்வப்போது எழுப்பப்படுகின்றன” என்று குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறது இந்த அறிக்கை.

‘நாடு முழுவதும் வங்கிகளில் உள்ள பயிர்க் கடன் கணக்குகள் 5.72 கோடி உள்ளன; ஆனால் கடன் தொகை உரியவர்களைச் சென்று சேர்வதை உறுதிப்படுத்துவதற்கான எந்தவித நடைமுறையும் வங்கிகளில் இல்லை' என்கிறது. இது விஷயத்தில், ‘ஜன் தன் யோஜனா', வங்கிக் கணக்குகள் மூலம் நேரடி பணப் பரிவர்த்தனை ஆகியன வரவேற்கத் தகுந்த மிகச் சரியான நடவடிக்கைகள்.

‘நவீனத் தொழில் நுட்பத்தைக் கடைக் கோடி விவசாயி வரை கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம்; நிலத்தின், தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை வளர்க்க இது பெரிதும் உதவும்' என்கிறது.

எல்லாம் சரிதான். ஆனால், விவசாயிகளின் ‘தலை போகிற' பிரச்சினைகளே வேறு.

தாள முடியாத கடன் சுமை, இயற்கைப் பேரிடர்கள், தண்ணீர், மின் தட்டுப்பாடு.

தன் உயிரினும் மேலான ‘மண்', தன்னை விட்டுப் போகாது என்பதற்கான பாதுகாப்பு உத்தரவாதம் இன்மை.

போதாததற்கு, விளை பொருளுக்கு, ‘கட்டுபடி ஆகிற' விலை கிட்டாமை.

என்ன செய்வது..? விளைவிக்கிறவன் ஒருவன்; அதற்கு விலை வைக்கிறவன் வேறொருவன். இப்படியும் சொல்லலாம்: விளைவிக்கிறவன் ஒருவன்; அதை விற்கிறவன் வேறொருவன். இவை குறித்தெல்லாம் அறிக்கை, அசகாய மவுனம் சாதிக்கிறது.

விவசாயப் பெரு மக்களின், அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக்கூட அல்ல; அவற்றை அடையாளம் காண்பதிலே கூட, அறிக்கை திசை தவறிப் பயணித்து இருக்கிறதோ என்று தோன்றுகின்றது.

'நோக்கம்' தவறு என்று சொல்வதற்கு இல்லை. ஆனால் ‘கள நிலைமை' அறியாத ‘கல்வியாளர்'களால் அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது என்கிற வலுவான எண்ணம் ஏற்படத்தான் செய்கிறது.

பிரச்சினையைத் ‘தெரிந்து கொண்டவர்கள்' தரும் தீர்வு, நிறைவைத் தரவே தராது.

பிரச்சினையை உணர்ந்தவர்கள் தருவதுதான் அதைச் சாதிக்கும். இது இயற்கை விதி. ஆய்வறிக்கையில் இக் குறைபாடு ‘பளிச்' சென்று தெரிகிறது. அறிக்கை தயாரிப்பில் ஏற்பட்ட குறையாக இருக்கலாம்.

விவசாயம் சார்ந்த பொருளாதார முடிவுகளை எடுப்பதற்கு, விவசாயப் பிரதிநிதிகளை ஈடுபடுத்துவதே அறிவுடைமை. ஒவ்வொரு துறைக்குமே இது பொருந்தும்.

ஆனாலும், மைய அரசு சமீபத்தில் கொண்டு வந்திருக்கும் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், விவசாயப் பெரு மக்களுக்கு மிகச் சிறந்த பயனை விளைவிக்கக் கூடியது. ஐயமில்லை.

‘வேளாண் பொருட்களுக்கான தேசிய சந்தை' (National Market for Agricultural commodities) யோசனையும் நன்மை பயக்கக் கூடியதுதான். இருந்தாலும், ஆய்வறிக்கை விவசாயிகளின் வாழ் நிலையைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை என்பதுதான் உண்மை.

பிற தொழில்களைப் போன்றது அல்ல விவசாயமும் நெசவும் மீன் பிடித்தலும். (மனித குலத்தின் ஆதித் தொழில்கள்!) இவற்றில் தொழிலையும் தொழிலாளியையும் பிரிக்கவே முடியாது.

ஓர் உயர் அதிகாரியின் பிரச்சினை, அந்தப் பதவியுடன் இணைந்தது. ‘மாறிப் போய்க் கொண்டே' இருக்கலாம்.

ஆசிரியர், ஓட்டுநர், ‘கான்ஸ்டபிள்', மருத்துவர், வழக்கறிஞர், மாத சம்பளம் ஈட்டும் பிற ஊழியர், தினக் கூலி பெறும் தொழிலாளி.... இவர்களைப் போன்று அல்லர் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள்.

விவசாயியிடம் இருந்து விவசாயத்தையும் நெசவாளரிடம் இருந்து நெசவையும்

மீனவரிடம் இருந்து மீன் பிடித்தலையும் தனித்துப் பார்க்கவே முடியாது; கூடாது.

இவர்களின் ‘வாழ்வும் சாவும்' தொழில்தான்.

ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது... ? ‘விவசாய உற்பத்தியில் குறைவில்லை; ஆகவே விவசாயி நன்றாகவே இருக்கிறார்' என்று ‘குருட்டாம் போக்கில்' தள்ளிவிட்டுப் போகிறோம். அறிக்கையில், விவசாயிகளுக்கு, அதுதான் நடந்து இருக்கிறது.

மீனவர்கள், நெசவாளர்களைப் பற்றியோ... அறிக்கையில் பேச்சு மூச்சையே காணோம். ஒரு வேளை இந்த ஆண்டுக்கான அறிக்கையில், சிறப்பாக சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதால் விடுபட்டு இருக்கலாம்.

சரி...., அடுத்ததற்குப் போவோம்.

நமது நாட்டின் நம்பிக்கை ரேகை, இளைய சமுதாயத்தின் வளமான எதிர்காலத்துக்கு என் னென்ன திட்டங்கள் வைத்து இருக்கிறோம்...?

- வளரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x