Published : 24 Aug 2021 07:53 PM
Last Updated : 24 Aug 2021 07:53 PM

வேளாண் கருவிகளை வாடகைக்குப் பெற வசதி: சோனாலிகா டிராக்டரின் பிரத்யேகச் செயலி தொடக்கம்

சென்னை

டிராக்டர் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சோனாலிகா நிறுவனம் புதிதாக வேளாண் வாய்ப்புகளை உருவாக்கவும், விவசாயப் பணிகளுக்குத் தேவைப்படும் கருவிகளை வாடகையில் கிடைக்கவும் வசதியாக ஒரு செயலியை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளுக்குத் தேவையான கருவிகளை வாடகைக்குப் பெற முடியும். இதுபோன்ற விவசாயக் கருவிகளை வைத்துள்ள உரிமையாளர்கள் அதை வாடகைக்கு விடுவதன் மூலம் தொடர் வருமானத்தை ஈட்டவும் முடியும். இது தவிர இத்தகைய கருவிகளை இயக்கத் தெரிந்த தொழில்நுட்ப பணியாளர்களுக்குத் தொடர் வேலை கிடைக்கவும் இதன் மூலம் வழி ஏற்பட்டுள்ளது. தற்போது “சோனாலிகா வேளாண் தீர்வுகள்” (Sonalika Agro Solutions) என்ற பெயரில், ஒரு மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மொபைல் அப்ளிகேஷன் டிராக்டர் மட்டுமின்றி, இதர உயர்வகை வேளாண் இயந்திரத் தளவாடங்களை வைத்திருக்கும் நபர்கள், அவற்றை வாடகைக்கு வழங்குவோர் என, இத்துறையில் இயங்கும் பல்வேறு நபர்களின் பட்டியலைத் தயாரித்து வருகிறது. இதனால், டிராக்டர், அறுவடை இயந்திரம், நடுவு இயந்திரம் உள்ளிட்டவற்றை வைத்திருக்கும் விவசாயிகளின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்றவை கொண்ட தகவல் தளம் ஒன்று உருவாகிறது.

இதன் மூலம் மேற்கண்ட இயந்திரங்கள் தேவையுள்ள ஒரு விவசாயி, தனக்கு மிக அருகில், அவை எங்கே கிடைக்கும். அதற்கான செலவு எவ்வளவு, எந்த நாளில் அவருக்கு அந்தச் சாதனங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிட்டும் என்பன போன்ற பல தகவல்களை இருந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ள முடியும். எனவே தொடர்புள்ள அந்த விவசாயி தனக்கு வசதியான நேரத்தில் அந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறார். இதுதவிர, இவ்வகை வேளாண் இயந்திரம் மற்றும் தளவாட வாகனங்களை இயக்கும் திறன் மற்றும் அனுபவம் கொண்டவர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு தகவல் தளமாகவும் இது செயல்படும்.

இந்த மொபைல் அப்ளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதோடு, இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்தபிறகு அதன் மூலம், ஒரு நபர் தன்னை அதில் பதிவு செய்து கொள்வதும் எளிது. இதற்கெனத் தனிக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. தன்னை, இந்த மொபைல் அப்ளிகேஷனில் பதிவு செய்துகொள்ள விரும்பும் ஒரு நபர், அதற்கு தொழில்நுட்ப ரீதியாக ஆலோசனை பெற விரும்பினால், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட, தனியாக ஒரு வாடிக்கையாளர் சேவைப் பிரிவும் செயல்படுகிறது

“இந்திய விவசாயிகளுக்குத் தேவைப்படும் பல்வேறு சேவைகளை, சிக்கன செலவில், தொழில்நுட்பப் புதுமைகளோடு அறிமுகம் செய்து வரும் எங்களது சோனாலிகா குழுமம், இயந்திர மயமாக்கப்பட்ட இந்த சேவைப் பணிகள் அவர்களுக்கு எளிதாகக் கிடைக்கவும் ஏற்பாடு செய்து வருகிறது. டிஜிட்டல் மயமான இன்றைய உலகில், மேற்கண்ட பணிக்காக நாங்கள் ஒரு புதிய மொபைல் அப்ளிகேஷனை ‘சோனாலிகா வேளாண் தீர்வுகள்’ என்ற பெயரில் தொடங்கியுள்ளதாக சோனாலிகா குழுமத்தின் செயல் இயக்குநர் ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார்.

இதில், டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு உயர்வகை வேளாண் தளவாடக் கருவிகள் இணைந்த வாகனங்கள் விவசாயிக்குத் தேவைப்படும் இடத்துக்கு மிக அருகில் எங்கே கிடைக்கிறது என்பதை உறுதி செய்துகொள்ள இயலும். இந்தச் சேவையால் பயன்பெற விரும்பும் விவசாயி தரப்பில், ஒரு ஸ்மார்ட் போன் மட்டும்தான் தேவை. மற்ற எல்லாத் தகவல்களும், அந்த ஸ்மார்ட் போன் மூலமே விவசாயியை வந்தடையும்.

டிராக்டர் வைத்திருக்கும் விவசாயி மற்றும் டிராக்டர் தேவைப்படும் விவசாயி இருவருமே இதைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்ந்து விவசாயிகளின் தேவைகளைக் கவனத்தில் கொண்டு செயல்படுவதால், இந்திய அரசு தங்களை அதன் திட்டமிடல் பிரிவான “நிதி ஆயோக்” அமைப்புக்கு ஆலோசனைகளை வழங்குமாறு தெரிவித்துள்ளதாகவும் ரமன் மிட்டல் குறிப்பிட்டார்.

இந்தச் சேவையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக - நிலமுள்ள விவசாயி…, டிராக்டர் உரிமையாளர்…., பிற சேவை வழங்கும் நபர் என யாரும் தனியாகக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. மறுபுறம், சோனாலிகா குழுமம் உயர் வேளாண் தளவாடங்களை, கருவிகளை இயக்கவும், சீர் செய்யவும் திறன் கொண்ட நபர்களின் பெயர்ப் பட்டியலையும் தயாரித்து வருகிறது. எனவே ஒரு விவசாயி, தான் இருந்த இடத்தில் இருந்தபடியே - அறுவடை இயந்திரத்தை இயக்குபவர், இயந்திர நடுவு வாகனத்தை இயக்குபவர், பண்ணைக் கழிவுகளைப் பொதிகளாக மாற்றத் தெரிந்தவர் எனப் பல்வேறு நபர்களின் சேவைகளையும் பெற இயலும். அத்தகைய நுட்பம் தெரிந்தவர்களும் தங்களுக்கான வேலைவாய்ப்பை இந்த அப்ளிகேஷன் மூலமே பெறமுடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x