Published : 10 Feb 2016 10:44 AM
Last Updated : 10 Feb 2016 10:44 AM

‘தொழில் தொடங்குவதற்கு நிபுணத்துவம் வேண்டும்’ - கோகோ கோலா நிறுவனத்தின் தலைவர் பேச்சு

ஒரு நிறுவனத்தையோ அல்லது தொழிலையோ தொடங்குவதற்கு முன்பு அதில் நாம் நிபுணத்துவம் பெற வேண்டும்’’ என கோகோ கோலா நிறுவனத்தின் தலைவர் கூறினார்.

சென்னை லயோலா கல்லூரி யில் நேற்று ‘ஸ்டார்ட் டு மேக் ய ஸ்டார்ட்’ (Start to Make a Start) என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பத்து கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இதில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கோகோ கோலா நிறுவனத்தின் தென்மேற்கு ஆசிய பிராந்தியத்தின் வியாபார பிரிவின் தலைவர் வெங்கடேஷ் கினி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

தொழில்முனைவோராக ஆக வேண்டும் எனில் நம்மிடம் திறமைகள், யோசனைகள் இருக்க வேண்டும். மேலும், நாம் தயாரிக்கும் பொருட்கள் சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் வருமானம் அதிகரிக்கும். இதன் மூலம் சமூகம் பயனடையும். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வெற்றிகரமாகச் செயல்படவில்லை. ஆனால் தற்போது இந்நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. நமக்கான தொழிலைத் தேர்வு செய்வதற்கான சுதந்திரம் இருப்பதே இதற்குக் காரணம்.

நமது சிந்தனைகள், தயாரிக்கும் பொருட்கள் உள்ளிட்டவை மற்றவற்றைக் காட்டிலும் 10 மடங்கு சிறந்ததாக இருக்க வேண்டும்.

முன்பு பாடல்களை பதிவு செய்ய எம்பி3 என்ற சி.டி.க்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பாடல்களைப் பதிவு செய்வதற்காக 10 மடங்கு சிந்தித்ததன் விளைவாக அவரால் உருவாக்கப்பட்டதுதான் ஐ-பாட். மேலும், ஒரு நிறுவனத்தையோ அல்லது தொழிலையோ தொடங்குவதற்கு முன்பு அதில் நாம் நிபுணத்துவம் பெற வேண்டும். அதற்கு பொறுமை அவசியம். அதேபோல், ஒரே நேரத்தில் இரண்டு தொழில்களைத் தொடங்க நினைப்பதும் தவறு.

இவ்வாறு வெங்கடேஷ் கினி கூறினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x