Published : 22 Dec 2015 09:31 AM
Last Updated : 22 Dec 2015 09:31 AM

தொழில் கலாச்சாரம்: நாகரீகம் வளர்த்த நாட்டில் தொழில் வாய்ப்புகள்

மெக்ஸிகோ

நாம் எல்லோரும் கேட்டிருக்கும் நாட்டின் பெயர். என் நண்பர்கள் பலரிடம் கேட்டேன். பெயரைத் தாண்டி, வேறு எந்த விவரமும் அவர்களுக்குத் தெரியவில்லை. நீங்கள் எப்படி?

நாட்டின் அதிகாரபூர்வமான பெயர், ஐக்கிய மெக்ஸிகன் மாநிலங்கள்.

நிலப்பரப்பின்படி, உலகின் பதினான்காவது பெரிய தேசம்.

மக்கள் தொகையின்படி, உலகின் பதினொன்றாவது பெரிய நாடு.

இந்தியா போலவே, மெக்ஸிகோவிலும், பாம்புகளை வணங்கும் பழக்கம் உண்டு.

சாக்லெட், சோளம், மிளகாய் ஆகியவற்றின் தாயகம் மெக்ஸிகோ. இங்கிருந்துதான், பிற நாடுகளுக்குப் பரவின.

பூகோள அமைப்பு

மெக்ஸிகோ, வட அமெரிக்காவின் தென் பகுதியில் இருக்கிறது. தென்கிழக்கில் பெலீஸ், குவாட்டமாலா ஆகிய நாடுகள், கரீபியன் கடல்; மேற்கிலும், தெற்கிலும் பசிபிக் பெருங்கடல்; கிழக்கில் மெக்ஸிகோ வளைகுடா. அமெரிக்காவின் கலிபோர்னியா, அரிசோனா, நியூ மெக்ஸிகோ, டெக்ஸாஸ் ஆகிய மாநிலங்கள் அருகில் இருக்கின்றன.

நிலப்பரப்பு 19,64,375 சதுரக் கிலோமீட்டர்கள். மூன்றுவித நில அமைப்புகளும், பருவநிலைகளும் கொண்டது. வடக்குப் பகுதி பாலைவனம்; மத்திய பகுதி மலைகள், எரிமலைகள் நிறைந்தது: தெற்கில் காடுகள், கடற்கரைகள்.

பெட்ரோலியம், தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம், டங்ஸ்டன், மாலிப்டினம், பிஸ்மத், பாதரசம், ஜிப்ஸம், கந்தகம், பாஸ்பேட் போன்ற ஏராளமான இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் நாடு. இவற்றுள், 1976 இல் கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோலியம், மெக்ஸிகோவின் பொருளாதார வரலாற்றில் மைல்கல்.

தலைநகரத்தின் பெயரும், நாட்டின் பெயர்தான் மெக்ஸிகோ.

சுருக்க வரலாறு

சுமார் 13,000 ஆண்டுகளுக்கு முன்னால், மனிதக் குடியேற்றம் தொடங்கியிருக்கும் என்று ஆதாரங்கள் சொல்கின்றன. கி.மு. 2600 முதல், கி.பி. 900 வரை நீடித்த மாயன் நாகரிகம், மாபெரும் வளர்ச்சி கண்டிருந்த பழம் பெரும் நாகரிகம்.

இதே காலகட்டத்தில் கி.மு. 1400 முதல் கி.மு. 400 வரை, ஆயிரம் ஆண்டுகள் ஓல்மெக் என்னும் பண்டைய நாகரிகமும் செழித்தோங்கியிருந்தது. கி.பி. 1325 முதல், 1521 வரை, அஸ்டெக் சாம்ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது. சுமார் 2 லட்சம் சதுரக் கிலோமீட்டர்கள் பரப்பு, 60 லட்சம் மக்கள் தொகை எனப் பிரம்மாண்ட சாம்ராஜ்ஜியம். ஆனால், பேரரசர்கள் கொடுங்கோலர்கள்.

1521 இல், ஸ்பெயின் படையெடுத்து வந்து மெக்ஸிகோவைக் கைப்பற்றினார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் சுதந்திரப் போராட்டங்கள் ஆரம்பித்தன. 1823 - ல், மெக்ஸிகோ தன்னைச் சுதந்திர தேசமாக அறிவித்துக்கொண்டது. 1845 ல், அமெரிக்கா, மெக்ஸிகோ நாட்டுப் பகுதியாக இருந்த டெக்ஸாஸ் மீது உரிமை கோரியது. இரு நாடுகளுக்குமிடையே போர். மெக்ஸிகோ, தன் நிலப்பகுதிகளை இழந்தது. பல உள்நாட்டுப் போர்கள் வந்தன. 1920 இல் வந்த மக்கள் புரட்சி, எதேச்சாதிகாரத்தைத் தூக்கி எறிந்தது.

போதைப் பொருட்களின் மையங்களுள் ஒன்றாகத் திகழும் மெக்ஸிகோவின் மாஃபியாக்கள் அரசியலை இயக்கும் பின்புலச் சக்திகளாகவும் இருக்கிறார்கள். அண்மைக் காலங்களில், அமெரிக் காவின் உதவியும், நட்பும், நிலையான ஆட்சிக்கும், வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவி வருகின்றன.

மக்கள் தொகை

12 கோடி 17 லட்சம். இதில், 83 சதவீதம் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள்: பிற கிறிஸ்தவர்கள் 10 சதவீதம்: பிறர் 7 சதவீதம்.

கல்வியறிவு 94 சதவீதம். ஆண்கள் சுமார் 96 சதவீதம். பெண்கள் 93 சதவீதம். ஆங்கில அறிவு குறைவு.

ஆட்சிமுறை

31 மாநிலங்கள் கொண்ட குடியரசு. பார்லிமெண்ட் முறை மக்களாட்சி. 18 வயது நிறைந்த குடிமக்கள் அனைவரும் கட்டாயமாக வாக்களிக்கவேண்டும். நாட்டின் தலைவர் அதிபர் என்றழைக் கப்படுகிறார் . ஆறு வருடங்களுக்கு ஒரு முறை மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அமைச் சரவையின் துணையோடு நாட்டை ஆள்கிறார். செனட் என்னும் மேல்சபை. சேம்பர் ஆப் டெபுடீஸ் ( Chamber of Deputies) என்னும் கீழ்சபை. செனட்டர்கள் ஆறு வருடங்களுக்கு ஒரு முறையும், சேம்பர் உறுப்பினர்கள் மூன்று வருடங்களுக்கு ஒரு முறையும், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

பொருளாதாரம்

பொருளாதாரத்தில் சேவைத் துறையின் பங்கு 63 சதவீதம். சுற்றுலா, பணப் பரிவர்த்தனை, சர்வதேச வங்கிகள், ஆகியவை இதில் முக்கியமானவை. தொழில் துறையின் பங்கு 34 சதவீதம். முக்கிய தொழில் கார் தயாரிப்பு. ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்ட், நிஸான், டொயோட்டோ, பென்ஸ், ஃபோக்ஸ்வேகன் என்னும் உலகின் பெரும் தயாரிப்பாளர்களின் உற்பத்தித் தளமாக மெக்ஸிகோ இயங்குகிறது. பெட்ரோலியம் சுத்திகரிப்பு, விமானங்கள், எலெக்ட்ரானிக் கருவி கள், கம்ப்யூட்டர்கள் தயாரிப்பு ஆகிய வை முக்கிய தொழில்கள். விவசாயம் பொருளாதாரத்தில் 3 சதவீதப் பங்கு மட்டுமே வகிக்கிறது. சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் மிக அதிகம்.

நாணயம்

பெஸோ (Peso). சுமார் 4 ரூபாய்க்கு சமம்.

இந்தியாவோடு வியாபாரம்

மெக்ஸிகோவுக்கு நம் ஏற்றுமதி 17,527 கோடிகள். இவற்றுள் முக்கிய மானவை போக்குவரத்து வாகனங்கள், அலுமினியம், செம்பு, இரும்பு உருக்குப் பொருட்கள், இயந்திரங்கள், ஆயத்த ஆடைகள். நம் இறக்குமதி 20,717 கோடிகள். பெட்ரோலியம், எலெக்ட்ரானிக் கருவிகள், ரசாயனம், பிளாஸ்டிக்ஸ், தாதுப் பொருட்கள் போன்றவை இந்தப் பட்டியலில் இடம் பிடிக்கின்றன.

விசிட்

வடக்குப் பகுதியில் பாலைவனம், மத்திய பகுதியில் மலைகள், எரிமலைகள், தெற்கில் காடுகள், கடற்கரைகள் இருப்பதால், பருவநிலை இடத்துக்கு இடம் பெரிதும் மாறுபடும். எந்தப் பகுதிக்குப் போகிறீர்களோ, அதற்கு ஏற்றபடி, விசிட் காலங்களை முடிவு செய்யுங்கள்.

பிசினஸ் டிப்ஸ்

நம்மிடம் நேரம் தவறாமையை எதிர்பார்ப்பார்கள். அதே சமயம், அவர்கள் தாமதமாக வருவதுண்டு. பார்ட்டிகளுக்கு நேரத்துக்குப் போனால், யாருமே இருக்கமாட்டார்கள். ஒரு மணி நேரம் தாமதமாகப் போவது நல்லது. சிலர் இரண்டு, மூன்று மணி நேரம் தாமதமாகக்கூட வருவார்கள். சந்திப்பு நேரங்களை இரண்டு வாரங்கள் முன்னதாகவே உறுதி செய்துகொள்ளுங்கள். ஒரு வாரத்துக்கு முன்னால், மறுபடியும் உறுதி செய்துகொள்வது நல்லது.

கை குலுக்கல் சாதாரண ஆரம்ப வரவேற்பு முறை. நெருங்கிப் பழகியபின், கட்டித் தழுவுதல் சாதாரணம். சந்திப்பு, விடை பெறுதல், ஆகிய இரு நேரங்களிலும், கை குலுக்கவேண்டும். சிலர் கை குலுக்கியபின், அவர்கள் கட்டைவிரலால், உங்கள் கட்டை விரலை வளைத்துப் பிடிப்பார்கள். ஆச்சரியப்படாதீர்கள். இது நட்பின் அடையாளம். உடலைத் தொட்டுப் பேசுவதும் மெக்ஸிகோ பழக்கம்.

விசிட்டிங் கார்டுகள் அவசியம். பலருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆகவே, இவற்றை ஒரு பக்கம் ஆங்கிலத்திலும், மறுபக்கம் ஸ்பானிஷ் மொழியிலும் அச்சிடவேண்டும்.

நட்புரிமையோடு பழகுவார்கள், மரியாதை தருவார்கள், பண்போடு பேசுவார்கள். அவசர முடிவுகள் எடுக்கப் பிடிக்காதவர்கள். “இல்லை” என்று சொல்லத் தயங்குவார்கள். அதையும் நாசூக்காகச் சொல்லுவார்கள். உங்களிடமும், இதே அணுகுமுறையை எதிர்பார்ப்பார்கள். விலையில் பேரம் பேசுவார்கள். நீங்களும், அவர்களிடம் பொருட்கள் வாங்கினால், சொல்லும் விலைக்கு வாங்காதீர்கள். நிச்சயம் குறைந்த விலைக்குத் தருவார்கள்.

சாப்பிடும்போது, இரண்டு கைகளையும் மேசைக்கு மேல் வைத்துக்கொள்ளவேண்டும், மடியில் வைத்துக்கொள்ளக்கூடாது. பாக்கெட்டில் கைகளை வைத்துக் கொள்வது அநாகரிகம்.

உடைகள்

ஆடைகளை வைத்து உங்களை எடை போடுவார்கள். ஆகவே, கச்சிதமாக டிரெஸ் செய்யவேண்டும். பிசினஸ் மீட்டிங்குகளுக்கு சூட் அணிவது நல்லது.

பரிசுகள் தருதல்

பரிசுகள் தரவேண்டும். ஆனால், விலை உயர்ந்த பரிசுகளாக இருக்கக்கூடாது. இவை ஊழலாக கருதப்படும்.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x