Published : 19 May 2021 01:33 PM
Last Updated : 19 May 2021 01:33 PM

பருப்பு, எண்ணெய் விலை திடீர் உயர்வு; பதுக்கல் காரணமா?- நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

பருப்புகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள் உட்பட 22 அத்தியாவசியப் பொருட்களின் வழக்கத்துக்கு மாறான விலை உயர்வை கண்காணிக்கும்படி மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

பருப்பு ஆலைகள், இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோர் பருப்பு இருப்புகளின் நிலவரத்தை தெரிவிக்க மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் எடுத்துள்ள நடவடிக்கையை நுகர்வோர் விவகாரத்துறை அண்மையில் ஆய்வு செய்தது.

நாடு முழுவதும் பருப்புகள் சந்தையில் கிடைப்பது மற்றும் அவற்றின் விலை நிலவரம் குறித்து நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் லீனா நந்தன் ஆய்வு செய்தார். மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் வேளாண் துறை செயலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதில், அத்தியாவசியப் பொருட்கள், சாதாரண மக்களுக்கு நியாய விலையில் போதிய அளவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் நோக்கம் என வலியுறுத்தப்பட்டது. வியாபாரிகள், பருப்புகளை பதுக்கியதுதான், திடீர் விலை ஏற்றத்துக்கு காரணம் என இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு நுகர்வோர் விவகாரத்துறை கடந்த 14ம் தேதி எழுதிய கடிதத்தில், அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-ன் பிரிவுகளின் கீழ் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, பருப்பு ஆலைகள், வியாபாரிகள், இறக்குமதியாளர்கள் ஆகியோர் தாங்கள் வைத்திருக்கும் பருப்புகளின் இருப்பு நிலவரத்தை தெரிவிக்கும்படி உத்தரவிட வேண்டும் எனவும், அதை சரிபார்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.

பருப்புகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள் மற்றும் பால் ஆகியவை உட்பட 22 அத்தியாவசியப் பொருட்களின் வழக்கத்துக்கு மாறான விலை உயர்வை கண்காணிக்கும்படியும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. இந்த விஷயத்தில் சரியான நேரத்தில் தலையிட்டு , உணவுப் பொருட்கள் நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x