Published : 26 Dec 2015 10:01 AM
Last Updated : 26 Dec 2015 10:01 AM

நிறுவனங்களின் இணைப்பு, கையகப்படுத்துதல்: 2015-ம் ஆண்டில் 2,000 கோடி டாலராக சரிவு

இந்தியாவில் நிறுவனங்களை இணைப்பது மற்றும் கையகப் படுத்துவது ஆகியவற்றின் மதிப்பு 2015-ம் ஆண்டில் 2000 கோடி டாலராக சரிந்துள்ளது. ஆனால் இது 2016-ம் ஆண்டில் மீண்டும் எழுந்துவிடும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஒப்பந்தங்களின் மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 40 சதவீத அளவிற்கு சரிந்துள்ளது. கடந்த வருடம் 3300 கோடி டாலர் மதிப்புக்கு ஒப்பந்தங்கள் நடந்தன.

2016-ம் ஆண்டில் நிறுவனங் கள் இணைப்பு மற்றும் கையகப் படுத்துவதன் மதிப்பு 3000 கோடி டாலராக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். புதிய திவால் சட்டம், நிறைய துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஒப்புதல் வேகமாக வழங்குவது போன்ற நாட்டின் ஒழுங்குமுறை கட்டமைப்பில் மாற்றங்கள் நடந்தால் இணைப்பு மற்றும் கையகப்படுத்துவதில் உத்வேகம் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

உள்நாட்டு ஒப்பந்தங்கள் குறைவு, அதிக விலையுள்ள வெளிநாட்டு முதலீடு, ரூபாய் மதிப்பு அதிகமாக சரிந்தது உள்ளிட்ட காரணங்கள்தான் இந்த ஒப்பந்த மதிப்பு குறைந்தற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

2014-ம் ஆண்டில் உள்நாட்டு ஒப்பந்தங்களின் மதிப்பு 1900 கோடி டாலர் அளவுக்கு நடந்தன. சன் பார்மா மற்றும் ரான்பாக்ஸி இணைப்பு, கோடெக் வங்கி மற்றும் ஐஎன்ஜி வைஸ்யா வங்கி இணைப்பு உள்ளிட்ட பெரும் நிறுவனங்களின் இணைப்புகள் நடந்தன. ஆனால் இந்த வருடம் உள்நாட்டு இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் 730 கோடி டாலர் மதிப்புக்கே நடந்துள்ளது.

ஒப்பந்த கணிப்பு நிறுவனமான மெர்ஜர்மார்க்கெட் நிறுவனத்தின் கருத்துப்படி, தொழில்நுட்பதுறை நிறுவனங்கள் அதிக அளவில் இணைப்பு மற்றும் கையகப் படுத்துதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றன. இந்த ஆண்டில் இந்த துறையில் 80 ஒப்பந்தங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் 2014 ஆம் ஆண்டில் 45 ஒப்பந்தங்களே நடைபெற்றிருந் தன என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப துறையை போன்று போக்குவரத்து மற்றும் ஆற்றல், கனிமவளம் மற்றும் அதன் பயன்பாடுகள் ஆகிய துறைகளும் இணைப்பு நடவடிக்கையில் அதிகமாக ஈடுப்பட்டுள்ளன.

இந்த வருடம் அமெரிக்கா, ஜெர்மன், கனடா ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள்தான் அதிக அளவில் இந்தியாவில் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கையில் ஆர்வம் காட்டின. நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும் நிலையான வளர்ச்சியில் உள்ளது. இந்த நிலையில் நிறுவனங்களின் வளர்ச்சியும் தொடர்ந்தால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய வேகமாக வளர்ச்சியுறும் சந்தையாக மாறும் என்று குளோபல் ஆராய்ச்சி ஆசிரியர் கிரிஸ்டி வில்சன் மற்றும் மெர்கர் மார்க்கெட் நிறுவனத்தை சேர்ந்த அஞ்சலி பிரேமால் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x