Published : 04 May 2021 09:18 AM
Last Updated : 04 May 2021 09:18 AM

வெளிநாட்டிலிருந்து நன்கொடையாக பெறப்படும் கோவிட்-19 நிவாரண பொருட்களுக்கு ஐஜிஎஸ்டியிலிருந்து தற்காலிக விலக்கு

புதுடெல்லி

கோவிட் -19 தொற்று பிரச்சனையால் அது தொடர்பான நிவாரண பொருட்களின் இறக்குமதிக்கு குறிப்பிட்ட காலம் வரை அடிப்படை சுங்க வரி மற்றும் சுகாதார வரி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சுங்கத்துறை கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியிட்ட திருத்தப்பட்ட அறிவிப்பு படி, ரெம்டெசிவிர் / ஏபிஐ மற்றும் பீட்டா சைக்ளோடெக்ட்ரின், பரிசோதனைக் கருவிகளுக்கு 2021 அக்டோபர் 31ம் தேதி வரையும், கடந்த மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்ட சுங்க அறிவிப்பின்படி மருத்துவ ஆக்ஸிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், கிரையோஜெனிக் டேங்கர்ஸ் போன்ற ஆக்சிஜன் சிகிச்சை தொடர்பான சாதனங்கள் மற்றும் கோவிட் 19 தடுப்பூசிகளுக்கு 2021 ஜூலை 31ம் தேதி வரையிலும் சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக இறக்குமதி செய்யப்படும் கோவிட்-19 நிவாரண பொருட்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பல அறக்கட்டளை அமைப்புகள், பெரு நிறுவனங்கள், வெளிநாடுகளில் உள்ள சங்கங்கள், மற்றும் நிறுவனங்களிடமிருந்து வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன.
அதன்படி நன்கொடையாக இறக்குமதி செய்யப்படும் கோவிட் நிவாரணப் பொருட்களுக்கு 2021 மே 3ம் தேதி முதல் ஐஜிஎஸ்டி வரியிலிருந்து தற்காலிக விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த விலக்கு 2021 ஜூன் 30ம் தேதி வரை பொருந்தும். ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டு, இன்று வரை அனுப்பப்படாமல் இருக்கும் பொருட்களுக்கும் இது பொருந்தும்.

இந்த விலக்கு கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது:

இந்த விலக்குக்கு மாநில அரசு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அந்த அதிகாரி, நிவாரணம் அளிக்கும் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு கோவிட் நிவாரண பொருட்களை இலவசமாக வழங்க அனுமதி அளிக்கலாம்.

இந்த பொருட்களை மாநில அரசோ அல்லது எந்த ஒரு நிறுவனமோ/ நிவாரண அமைப்போ இந்தியாவில் எங்கும் இலவசமாக இறக்குமதி செய்ய முடியும்.

இந்த பொருட்களை இறக்குமதி செய்பவர், சுங்கத்துறை ஒப்புதல் பெறுவதற்கு முன், மேலே கூறப்பட்ட சிறப்பு அதிகாரியிடம், இலவசமாக பெறப்படும் கோவிட் நிவாரண பொருட்கள் என சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

இறக்குமதி செய்யப்பட்ட பிறகு, இறக்குமதி செய்பவர், விமான நிலையம்/ துறைமுகத்தில் உள்ள சுங்க உதவி ஆணையரிடம் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விவரத்தை இறக்குமதி செய்யப்பட்ட தேதியிலிருந்து 6 மாதத்துக்குள் அல்லது நீட்டிக்கப்பட்ட 9 மாத காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விவர அறிக்கைக்கு மாநில அரசு நியமிக்கும் சிறப்பு அதிகாரி சான்றிதழ் அளிக்க வேண்டும்.

இந்த விலக்கு மூலம் இலவசமாக இறக்குமதி செய்யப்படும் கோவிட் நிவாரணப் பொருட்களுக்கு 2021 ஜூன் 30ம் தேதி வரை ஐஜிஎஸ்டி செலுத்த தேவையில்லை.

சுங்க வரிக்கு ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், இறக்குமதிக்கு இனி ஐஜிஎஸ்டியும் விதிக்கப்படாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x