Published : 27 Nov 2015 10:35 AM
Last Updated : 27 Nov 2015 10:35 AM

வணிக நூலகம்: புதுமை படைத்த இந்திய நிறுவனங்கள்

புதுமை என்றதும் நம் நினைவுக்கும் வரும் முக்கியமான நிறுவனங்கள் எவை?. குறிப்பாக ஆப்பிள், 3எம், சோனி, டுபாண்ட், மைக்ரோசாப்ட்,ஸ்டார்பக்ஸ் மற்றும் விர்ஜின் என்பவைகளாக இருக்கும். இந்திய நிறுவனங்களில் ஏதேனும் நம் நினைவுக்கு வருகின்றனவா? பெரும்பாலும் வருவதில்லை. ஏன் வருவதில்லை என்ற கேள்விக்கு கிடைக்கும் விடைதான் வேடிக்கையானது.

இந்திய அளவில் புதுமை கண்ட நிறுவனங்கள் மதிப்பு மிக்க நிறுவனங்களாக மதிக்கப்படுவதில்லை. பெரும்பாலான நிறுவனங்களை பற்றி நமக்கு தெரிவதில்லை. நாம் நம்மையே குறை கூறிக் கொள்வோமே தவிர நம்மிடம் உள்ள பெருமைகளை உரசிப் பார்க்க மாட்டோம். வளர்ந்த நாடுகளின் அறிவியல் தாக்கத்தை ஓங்கி பேசுவோமே தவிர உள்நாட்டு புதுமை காணலை புறம் தள்ளுவோம்.

ஆனால். கடந்த பத்து ஆண்டுகளில் பின்னோக்கி பார்த்தால் வளர்ச்சி அடைந்த நாடுகளின் புதுமை காணுதலை நாம் எந்த அளவிற்கு பின் தள்ளியிருக்கின்றோம் என்ற வியப்பின் கேள்விக்குறிக்கு விடைதான் நூலாசிரியரின் இந்த புத்தகம். இதுவரை பதிமூன்று பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. புத்தகத்தை படிக்கும் அளவுக்கு இந்த கட்டுரையில் ஆர்வம் இருக்குமா என்பது சந்தேகத்துக்கு உரியது.

ஆறாண்டுகள் முயன்று புதுமை கண்டவர்கள் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை 11 வித்தியாசமான சாட்சிகள் மூலம் காட்சிகளாக வரையப்பட்டுள்ளன.

மரபுகளை மீறுதல்

மரபுகளை மாற்றி புதிதாக பொருட்களையோ, சேவைகளையோ, விளம்பரங்களையோ கொண்டு வருவதற்கு இந்திய நிறுவனங்கள் பெரும்பாலும் விழைவதில்லை. முதல் இடத்திற்கு முன்னேற நீண்ட நாட்களும், அதிக பொருளும் நிலை நிறுத்தப்பட்ட தொழில் முறைகளும் பழங்கால மரபுகளும் தேவை என்ற தவறான கண்ணோட்டத்தை டைனிக் பாஸ்கர் (DAINIK BHASKAR) என்ற பத்திரிக்கை முதல் நாளில் ராஜஸ்தான், சண்டிகர், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் புதுமையான சந்தைப்படுத்து உத்திகளை பயன்படுத்தி வெளியிட்டது. அதே போல சோழா வாகன நிதி நிறுவனம் எவ்வாறு முயற்சிகளை மேற்கொள்ள விருப்பமில்லா கலாச்சாரத்தில் இருந்து புதிய உத்திகள் மூலம் வியக்கதகு வளர்ச்சியை கண்டது என்பதை பற்றி விரிவாக அலசப்பட்டுள்ளது.

வலிமையான நிறுவனத்தை எதிர் கொள்ளுதல்

வலிமை மிகுந்த நிறுவனங்களின் அளவு மற்றும் ஆதிக்கத்தை கண்டு அச்சப்பட்டு பின் வாங்கும் நிறுவனங்கள் வெற்றியை தவறிவிட்டன. மிகவும் சிறிய, எந்த துணையும் இல்லாத வளங்கள் வற்றிய, எதிர்ப்புகளை எதிர் கொள்ள திராணி இல்லாததால் இந்திய நிறுவனங்கள் மற்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டன.

ஆனால், தொழில்முனைவோர் வெற்றி எண்ணங்களை எப்படி உருவாக்குவது, பன்னாட்டு வணிகத்தில் சந்தைகளை கட்டுக்குள் வைத்திருக்கும் வலிமை மிகுந்த நிறுவனங்களை எப்படி எதிர் கொள்வது என்பதை கவின் கேர் மற்றும் SUKAM போன்ற நிறுவனங்கள் செய்முறையில் சாதித்து காட்டின. தொழில்முனைவோர் சார்ந்த நிறுவனங்கள் எவ்வாறு பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து புதிய பொருட்களையும், உத்திகளையும் சந்தைப்படுத்தினார்கள் என்பதை குறித்து மிகவும் விரிவாக கூறப்பட்டுள்ளது (பக்கம் 60 முதல் 70 வரை, 217 முதல் 232 வரை). சிக் ஷம்பு தொடங்கி ஃபேரவர் வரையான பால் சந்தைபடுத்துதல் வரை ஒவ்வொன்றிலும் புதுமை காணலை புகுத்திய விதம் வியப்புக்குறியது. ரூபாய் 10,000 முதலீட்டில் மின்சாரத்திற்கு மாற்று இயந்திரம் தொடங்கிய நிறுவனம் 600 கோடி ஈட்டு முதலை எட்டியது. செய்வதை திருந்தச் செய்ததால் புதுமை கண்டு பன்னாட்டு நிறுவனங்களை எதிர்கொள்ள முடிந்தது.

குறைவான சந்தையும், புதுமையும்

குறைவான வருவாய் உள்ளவர்கள் எந்த ஒரு சமுதாயத்திலும் அதிக அளவில் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கான புதுமையான பொருட்களோ, சேவைகளோ தனியாக உருவாக்கப் படுவதில்லை. ஆடம்பரம் இல்லாத அடித்து நொறுக்கப்பட்ட எளிமையான உத்திகளை கொண்டு ஏழ்மையான மக்களை சென்று சேருவது என்பது மிகப் பெரிய செயல். அவர்களுக்கு சிட்டி வங்கி தேவையில்லை மாறாக கிராம வங்கிகள் தான் தேவை. இதை மிகச் சரியாக புரிந்துக் கொண்ட ITC நிறுவனம் ECHOUPAL திட்டத்தைக் கொண்டு வந்தது.

மதுரை அரவிந்த கண் மருத்துவமனை பொருளாதாரத்தில் அடித்தட்டில் உள்ளவர்களுக்கான சேவை புரியும் வகையில் புதிய தொழில் முறையை புகுத்தி புதுமை கண்டது. இரண்டு லட்சம் கண் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் இந்த கண் மருத்துவ மையம் உலகின் முன்னோடியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஜான் ஷாப்கின்ஸ் மற்றும் ஹார்வேர்டு பல்கலைக் கழகங்களில் இருந்து இங்கு வந்து கற்று செல்கிறார்கள்.

அசலா நகலா

இந்திய சந்தை நகல் சந்தையாகவே பெரிதும் பார்க்கப்பட்டது. அசல் சந்தை ஆக்கிய பெருமை இந்தியாவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களை சேரும். பிஎப் பம்ப் என்ற டீசல் எஞ்ஜினில் இயங்கும் தானியங்கியை இந்திய பன்னாட்டு நிறுவனமான பாஷ், ஜெர்மன் நாட்டை எதிர் பார்க்காமல் இந்தியாவிலேயே புதுமைக்கண்டு புதுமையான கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கியது.

உலக டீசல் தானியங்கி அமைப்புகள் வியப்பின் உச்சத்திற்கே சென்றன. பிளிப்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் நகல் எடுக்காமல் அசலாகவே வியக்க தகு கண்டுபிடிப்புகளை இந்தியாவில் உருவாக்கி உலகெங்கும் பரவ செய்கிறார்கள். ஆக, நகல் இந்தியா என்ற நிலை மாறி அசல் இந்தியா என்ற பெருமை இந்த நிறுவனங்களால் கிடைத்தது. வளர்ந்த நாடுகளையும், மேற்கத்திய நாடுகளையும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் புறம் தள்ளிய நிகழ்வுகள் இவை.

தடை கடந்து புதுமைகண்ட பொருட்கள்

மென்பொருள் வர்த்தகம், பிபிஓ, குறைந்த முதலீட்டில் மனித வளம் ஆகியன பற்றி புதுமை காணலில் இந்தியா பெருமைக் கொண்டிருந்தது. ஆனால் புதிய பொருட்கள் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், கனடா, தென் கொரியா, தாய்வான், பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து வெளிவந்தன இந்தியாவை தவிர. தடைகளை உடைத்து எறிந்து பொருட்களை புதுமைக்கணுதல் மூலம் உலகிற்கு டாடா நானோ மூலமும் டைட்டன் மூலமும் இந்தியா வழங்கியது. உலக நாடுகளால் முடியாததை முடித்த பெருமையை புதுமை காணலில் இந்தியா படைத்தது.

நோயுற்ற நிறுவனங்களை மாற்றுதல்

தமிழ்நாட்டில் திருச்சி நகரில் சமுதாய காவல் என்ற புதிய காவல் துறை முறையை பயன்பாட்டில் கொண்டு வந்தார்கள். காவல் துறையும், மாநகராட்சிகளும் புரையோடி போனதாக புலம்பும் நேரத்தில் சமுதாய காவலும், சூரத் நகரில் புதுமையை புகுத்திய மாநகராட்சி செயல்களும் எடுத்துக்காட்டுகளாகும்.

திருச்சியை தொடர்ந்து சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் சமுதாய காவல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அமைப்புகளிலும், செயல்முறைகளிலும் புதுமைகளை சூரத் மாநகராட்சி அறிமுகப்படுத்தியது புதுமை காணலின் அடுத்த பாகம். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் தலைமை பண்புகளின் வெற்று இடமும், மாற்றத்தை ஏற்காத மனப்பாங்கும் புதுமை காணலுக்கு எதிரிகளாக இருந்தன. சரியான தலைமை பண்பும், மாற்றத்திற்கு ஏற்றம் தரும் மனப்பாங்கும் இந்த செயல்களுக்கு புது வடிவம் கொடுத்தன.

அதே போலதான் உயிரியல் தொழில் நுட்பங்களில் நம்மால் சாதிக்க ஏதும் இல்லை என்ற மனப்பாங்கை தகர்த்து, மாற்றத்திற்கு ஏற்றம் தந்து, முறையான தலைமையில் சரியான கண்டுபிடிப்புகளை சாந்தா உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் வெற்றியை பதிவு செய்தது.

மேலே கூறிய அத்தனை நிகழ்வுகளும் எப்படியோ நிகழ்ந்தவை அல்ல. ஒவ்வொரு நிகழ்விலும் ஆழமான கருத்து தேக்கம், மாற்றத்திற்கு ஏற்றம் தரும் மனப்பாங்கு, தலைமை பண்புகளின் வெளிப்பாடு, நகல்படுத்துதலை நெட்டி தள்ளும் மனப்பாங்கு, அசல் பொருட்களை கண்டறிந்து உலகளாவிய சந்தை படுத்துதலின் வெளிப்பாடு ஆகியன தெளிவாக கோடிட்டு காட்டப்பட்டுள்ளன.

ஒரு பானை சோற்றில் ஒரு சோற்றை தான் கண்டிருக்கின்றோம். பானை நிறைய சோறு உண்டு எண்ணற்ற எண்ண குவியலும், கருத்து செறிவுகளும் மாற்றத்திற்கு மனப்பாங்கோடு இணையும் பொழுது புதுமையான பொருட்களும், சேவைகளும் இந்தியாவில் தொடங்கி உலகெங்கும் அசல் பொருட்களாகவே கிடைக்கும் நாள் இதோ இங்கே மிக அருகாமையில் உள்ளது. உங்களுக்கு தெரிகிறதா? முயன்று பாருங்கள். புதுமைகாண்போம், புவியில் இணைவோம்.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x