Last Updated : 25 Oct, 2015 12:57 PM

 

Published : 25 Oct 2015 12:57 PM
Last Updated : 25 Oct 2015 12:57 PM

ஆப்பிரிக்காவில் தொழில் வாய்ப்புகள் ஆராயப்படும்: நிர்மலா சீதாராமன் தகவல்

இந்திய - ஆப்பிரிக்க தொழில் கூட்டமைப்பின் மூன்றாவது மாநாடு இந்த மாதம் (அக்டோபர்) 26-ஆம் தேதியிலிருந்து 29-ஆம் தேதி வரை டெல்லியில் நடக்க உள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து மொத்தம் 54 நாடுகள் கலந்து கொள்ள இருக்கின்றன. 3,000 கோடி டாலரிலிருந்து 3,500 கோடி டாலர் வரை 41 ஆப்பிரிக்க நாடு களில் இந்தியா முதலீடு செய்துள் ளது. இந்த மாநாட்டில் மருத்து வம், கல்வி, வேளாண்மை போன்ற துறைகள்தான் முக்கிய கருப் பொருளாக இருக்கப் போகிறது.

இது தொடர்பாக ஜிம்பாவே நாட்டின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் மைக் பிம்கா, மற்றும் இந்தியாவின் தொழில் மற்றும் வர்த்தக துறை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மைக் பிம்கா பேசியபோது ‘‘ஆப்பிரிக்கா அதிக இயற்கை வளங்களை கொண்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து கை தேர்ந்த மனித வளத்தையும், தொழில்நுட் பத்தையும் பரிமாறிக்கொள்வதன் மூலம் அதிக அளவில் கிடைக்கும் மூலப் பொருட்களுக்கு கூடுதல் மதிப்பு சேர்க்க முடியும். மேலும் ஆப்பிரிக்க நாடுகள் அந்நிய முதலீட்டாளர்களை வரவேற்கும் விதமாக கதவுகளை திறந்தே வைத்துள்ளது. வர்த்தக மற்றும் முதலீட்டில் இந்தியாவோடு இணைந்து செயல்பட ஆவலாக உள்ளோம். இப்போது தடையற்ற வர்த்தக பகுதிகளை நிறுவும் செயல்பாட்டை மேற்கொண்டு வருகிறோம்’’ என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன் ‘‘தொழில் மற்றும் வர்த்தகத் துறையில் புதிய தொழில் வாய்ப்புகளை இந்த மாநாடு மூலம் உருவாக்க இருக்கிறோம். இதன் மூலம் ஆப்பிரிக்காவிலிருந்து அந்நிய நேரடி முதலீடு வருவது அதிகரிக் கும். இருநாடுகளும் இணைந்து அந்நிய நேரடி முதலீட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

பலநாடுகளுடனான வர்த்தகப் பிரச்சினைகளைத் தீர்க்க உலக வர்த்தக அமைப்புடன் இருநாடு களும் இணைந்து செயல்பட உள்ளது. இது குறித்து நைரோபி யில் டிசம்பர் மாதம் உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) நடத்த திட்டமிட்டுள்ள அமைச்சர்கள் அளவிலான மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. வர்த்தகத் தில் இணைந்த செயல்பாடு, தொழில்நுட்பம் மற்றும் ஆற்றலை மேம்படுத்துவது, உள்கட்டமைப்பு, வேளாண்மை, மருத்துவம், எரிசக்தி போன்ற துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன.

இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒரே மாதிரியான சவால்களை சந்தித்து வருகிறது. இருநாட்டு வர்த்தகம் தொடர்பாக எந்த இலக்கையும் நிர்ணயிக்கவில்லை என்று பேசிய நிர்மலா சீதாராமன் ’’தனியார் நிறுவனங்கள் இந்தியா விலும் ஆப்பிரிக்காவிலும் அதிக அளவு முதலீடு செய்ய வேண்டும். தனியார் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கி கொடுக்கப்படும் என்றும், இது குறித்து ஆப்பிரிக்க அதிகாரிகளோடு பேசியது மிக பயனுள்ளதாக இருந்தது, ஆப்பிரிக்கா மகத்தான ஆற்றல் வளங்களை கொண்டிருக்கிறது. ஏற்றுமதிக்கான சூழல் மட்டுமல் லாமல் அங்கிருந்து உள்கட் டமைப்பு வளர்ச்சி, மருத்துவ மேம்பாடு, கனிம வளங்களை இந்தியாவுக்கு கொண்டு வரவும் திட்டமிட்டு இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

``ஆப்பிரிக்காவிலிருந்து 37 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் இந்தியாவிலிருந்து 31 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் இந்திய ஆப்பிரிக்க தொழில் கூட்டமைப்பு - அமைச்சர்கள் சந்திப்பில் கலந்து கொள்கிறார்கள்” என்று மத்திய தொழில்கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் செயலர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

சில ஆப்பிரிக்க நாடுகளில் அரசியல் ரீதியாக நிலையில்லா தன்மை நிலவுவது பற்றி அமிதாப் காந்திடம் கேட்டபோது, ``ஆப்பிரிக்காவோடு குறுகிய கால உறவாக பார்க்கக்கூடாது. நீண்ட கால உறவாகப் பார்க்க வேண்டும். இந்த சந்திப்பில் உலக வர்த்தக பிரச்சினைகளை முக்கியமாக விவாதிக்க உள்ளோம்” என்று கூறினார்.

``ஆப்பிரிக்க யூனியன், உள் கட்டமைப்பு மற்றும் தொலைத் தொடர்பு துறைகளில் விதிமுறை களை தளர்த்த வேண்டும் அப்போதுதான் நீண்டகால மற்றும் அதிக முதலீடுகளை ஈர்க்க வாய்ப்பு இருக்கும்” என்று இந்திய-ஆப்பிரிக்க தொழில் கூட்டமைப்பு துணைத் தலைவர் ராஜன் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x