Published : 05 Sep 2015 09:09 AM
Last Updated : 05 Sep 2015 09:09 AM

14 மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தைகள் கடும் சரிவு

இந்திய பங்குச்சந்தைகளின் சரிவு இன்னமும் முடிவுக்கு வரவில்லை. வியாழன் அன்று ஓரளவுக்கு உயர்ந்து முடிந்தாலும் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2 சதவீதம் அளவுக்கு சரிந்து முடிந்தது. வாராந்திர அடிப்படையில் தொடர்ந்து நான்காவது வாரமாக பங்குச்சந்தைகள் சரிவில் முடிந்தன.

நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 562 புள்ளிகள் சரிந்து 25201 புள்ளியில் முடிவடைந்தன. சென்செக்ஸ் 2014-ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி வர்த்தகமான நிலையில் இப்போது உள்ளது. அதேபோல நிப்டி 167 புள்ளிகள் சரிந்து 7655 புள்ளியில் முடிவடைந்தன. நிப்டி 2014 ஆகஸ்ட் 11 நிலையில் வர்த்தகமாகியுள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 பங்குகளில் 28 பங்குகள் சரிவுடன் முடிவடைந்தன. பார்தி ஏர்டெல் மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் மட்டுமே உயர்ந்து முடிந்தன.

காரணம் என்ன?

வெள்ளிக்கிழமை மாலை அமெரிக்க வேலைவாய்ப்பு தகவல்கள் வெளியாக இருக்கின்றன. ஒருவேளை வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் பட்சத்தில் அமெரிக்க பொருளாதாரம் மீது நம்பிக்கை வரும், அதனால் விரைவில் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இதனால் வளரும் நாடுகளுக்கு பாதகமாகும் என்ற கணிப்பினால், இந்திய பங்குச்சந்தையில் இருந்த அந்நிய முதலீடு அதிகமாக வெளியேறியது. பங்குச்சந்தை சரிவுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

வரும் செப்டம்பர் 16-17 ஆகிய தேதிகளில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம் நடக்க இருக்கிறது. அப்போது வட்டி விகிதம் குறித்த முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, உள்நாட்டு நிலவரங்களும் சரியில்லாததால் பங்குச்சந்தை சரிவு ஏற்படுகின்றது. பருவமழை குறைவு, குறைவான விவசாய உற்பத்தி ஆகிய காரணங்களால் பங்குச் சந்தை சரிந்துள்ளது. இத்தனைக்கும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களுக்கு குறைந்த பட்ச மாற்று வரியில் இருந்த பிரச்சினை களையப்பட்ட போதிலும் அந்நிய முதலீடுகள் வெளியேறுவதை தடுக்க முடியவில்லை.

மேலும் சரியும்

இந்த சரிவு மேலும் தொடரும் என்றே பெரும்பாலான வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் இன்னும் 4 சதவீதம் வரை பங்குச்சந்தை சரியலாம். முதலீட்டாளர்கள் இப்போது முதலீடு செய்வதை விட இன்னும் சில நாட்களுக்கு சந்தையின் போக்கினை கவனிக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

வங்கி குறியீடு சரிவு

பி.எஸ்.இ. பேங்கெக்ஸ் குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்தது. கடந்த ஒரு வாரத்தில் சென்செக்ஸ் 3.5 சதவீதம் என்ற நிலையில் சரிந்திருந்தாலும் பேங்கெக்ஸ் 6.5 சதவீதமாக சரிந்திருக்கிறது. பொதுத்துறை மற்றும் தனியார் துறையை சேர்ந்த 13 வங்கி பங்குகள் தங்களுடைய 52 வார குறைந்தபட்ச விலையில் வர்த்தகமாயின. இதில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பெடரல் பேங்க், கனரா வங்கி உள்ளிட்ட 13 வங்கி பங்குகள் 52 வார குறைந்த விலையில் வர்த்தகமாயின.

அனைத்து துறை குறியீடுகளும் சரிந்து முடிந்தன. ரியால்டி(3.32%), இன்பிரா (3.24%) மின்சாரம் (3.03%) ஆகிய குறியீடுகள் சரிந்து முடிந்தன.

ஆகஸ்ட் மாதத்தில் 16877 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வெளியேறி இருந்தாலும் நடப்பு மாதத்தின் முதல் மூன்று வர்த்தக தினங்களில் 2,650 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது.

ரூ1.92 லட்சம் கோடி இழப்பு

நேற்றைய சரிவினால் முதலீட்டாளர்களுக்கு 1.92 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது பி.எஸ்.இ. சந்தை மதிப்பு 93.83 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x