Last Updated : 01 Sep, 2015 10:10 AM

 

Published : 01 Sep 2015 10:10 AM
Last Updated : 01 Sep 2015 10:10 AM

கடனுக்கு ஈடாக அரசு முதலீடுகளை பயன்படுத்த வேண்டாம்: வங்கிகளுக்கு ஆர்பிஐ செயல் இயக்குநர் அறிவுரை

வங்கிகளின் மூலதன தேவையை அதிகரித்துக் கொள்வதற்காக மத்திய அரசு முதலீடு செய்யும் தொகையை வங்கிகள் கடன் தொகையை ஈடு செய்ய பயன்படுத்தக் கூடாது என்று ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் என்.எஸ். விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அசோசேம் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: அரசு மேற்கொள்ளும் முதலீடுகள் மூலம் வங்கிகள் தங்களது மூலதனத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அரசு அளிக்கும் முதலீடுகளை நீங்கள் புதிதாக கடன் வழங்குவதற்குப் பயன்படுத்தினால் அதன் மூலம் வளர்ச்சி எட்டப்படும். மாறாக ஏற்கெனவே வழங்கிய கடன் தொகைக்கு ஈடாக அதை கணக்குக் காட்டினால் அதனால் எந்த பிரயோஜனமும் ஏற்படாது என்று அவர் கூறினார். வங்கிகள் அரசு முதலீடு தவிர்த்து மாற்று வழியில் நிதி திரட்ட முயற்சிக்க வேண்டும் என்று கூறினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பங்குச் சந்தையில் இப்போது நிலவும் சூழலில் நிதி திரட்டுவது கடினம் என வங்கித்துறையினர் தெரிவித்ததாக அவர் கூறினார். பேசல் 3 விதிப்படி வங்கிகள் வைத்திருக்க வேண்டிய மூலதனம் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஏற்கெனவே வகுத்த விதிமுறைகளை சற்று மாற்றியமைக்க முடிவு செய்துள் ளதாக அவர் கூறினார்.

12% வளர்ச்சியை எட்டுவதற்கு கடன் அளவு ரூ.180 லட்சம் கோடி தேவை என முன்பு ஆர்பிஐ கணித்திருந்தது. பின்னர் வங்கிகளின் மூலதனம், அவற்றின் கையிருப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இவை மாற்றி யமைக்கப்பட்டன. இதேபோல வங்கிகளின் ரொக்க கையிருப்பு (எஸ்எல்ஆர்) விகிதத்தைக் குறைப்பது குறித்தும் ஆர்பிஐ ஆராய்ந்து வருவதாகவும், வங்கி களின் மூல தனத்தை அதிகரிப்பது தொடர்பாக வங்கித்துறையினர் வைத்துள்ள கோரிக்கைகளை ஆர்பிஐ நிச்சயம் ஆராயும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

தொழில் நுட்ப ரீதியாகவும், திறன்மிகு பணியாளர்களைக் கொண்ட துறையாகவும் வளர வேண்டிய நெருக்கடி வங்கி களுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x