Last Updated : 18 Sep, 2015 06:52 PM

 

Published : 18 Sep 2015 06:52 PM
Last Updated : 18 Sep 2015 06:52 PM

பணவீக்கத்தை குறைவாக வைத்திருப்பதுதான் வளர்ச்சிக்கான வழி: ரகுராம் ராஜன்

நீடித்த நிலையான வளர்ச்சிக்கு பணவீக்கம் குறைவாக இருப்பதுதான் சிறந்த வழி என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்திருக்கிறார்.

மும்பையில் நடந்த சி.கே பிரகலாத் அவர்களின் நான்காவது நினைவு சொற்பொழிவில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.

அமெரிக்காவின் வளர்ச்சியுடன் சர்வதேச வளர்ச்சி இணைந்திருக்கிறது. சர்வதேச அளவில் பார்க்கும் போது சூழ்நிலை இயல்பாக இல்லை. சில நாடுகளைத் தவிர்த்து பெரும்பாலான உற்பத்தி நாடுகள் பிரச்சினையில் உள்ளன.

அதனால்தான் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை. இந்தியாவை பொறுத்தவரை மொத்த விலைக் குறியீட்டு எண்ணுக்கும் நுகர்வோர் குறியீட்டு எண்ணுக்கும் இடையே உள்ள இடைவெளி நமக்கு பிரச்சினையாக உள்ளது.

வளர்ச்சியை நோக்கி நாம் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். அந்த வளர்ச்சி நீடித்த வளர்ச்சியாக இருப்பது அவசியம். பணவீக்கம் இப்போது குறைவாக இருப்பது முக்கியமல்ல, நீண்ட காலத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

இன்னும் சில தகவல்களுகாக அமெரிக்க மத்திய வங்கி காத்திருக்கிறது என்று நான் யூகிக்கிறேன். அவர்கள் கூடுதல் தகவல்கள் கிடைத்த பிறகே இறுதி முடிவு எடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.

பயனற்ற குறுகிய கால தீர்வுகள் வேண்டாம்:

ஊக்க நடவடிக்கைகள் கொடுப்பது வட்டி விகிதம் மூலம் வளர்ச்சியை அடைவதை விட தொழில்புரிவதற்கான சூழலை உருவாக்கி அதன் மூலம் வளர்ச்சியை அடைவதே சிறந்த வழி.

தொழில்துறையினரின் புரிதலும் ஒத்துழைப்பும் நமக்கு அவசியம். பொறுமையின்மை மற்றும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் சாத்தியமற்ற விரைவு தீர்வுகளுக்கு அடிபோடக்கூடாது. அப்போதுதான் ஒரு தேசம் என்பதன் முழு ஆற்றலை உணர்ந்து விட்டதாக நான் நம்புவேன். குறுகிய தீர்வுகள் தேவைப்படாத வகையில் தேவையான அமைப்புகளை உருவாக்கும் கட்டுக்கோப்பு உத்தி நமக்கு தேவை. மேன்மைக்காக நாம் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும், அதற்கு தொழில்துறையினரின் பொறுமையும், ஒத்துழைப்பும் தேவை.

பிரிக்ஸ் நாடுகளில் பிரச்சினை நிலவும் போது இந்தியா தனித் தீவாக இருக்கிறது. பிரேசில் வேகமாக வளர்ச்சியடைய திட்டங்களை வகுத்தது. ஆனால் இப்போது ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் நிறுவனம் அந்த நாட்டுக்கான தகுதியை குறைத்திருக்கிறது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிது என்னவென்றால் ஊக்க நடவடிக்கைகள் மூலமாக மட்டும் நாம் வளர்ச்சியை அடைந்து விட முடியாது. ஊக்க நடவடிகைகள் காரணமாக எதிர்காலத்தில் பணவீக்கம் அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளன.

பிரேசில் அதிகம் செலவு செய்து பிரச்சினையில் இருக்கிறது. சீனா அதிகம் முதலீடு செய்து பிரச்சினையில் உள்ளது.

சி.கே.பிரகலாத் இந்திய தொழில்துறையினர் உலகம் வியக்கும் உயரத்தை எட்ட முடியும் என்று நம்பியவர். நானும் அவ்வாறே நம்புகிறேன்.

இவ்வாறு பேசினார் ரகுராம் ராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x