Published : 29 Sep 2015 10:25 AM
Last Updated : 29 Sep 2015 10:25 AM

தொழில் கலாச்சாரம்: அரபு நாடுகளில் காத்திருக்கும் ஆயிரம் வாய்ப்புகள்!

சவுதி, துபாய், மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் நமக்கு இரண்டாம் வீடு மாதிரி. நம் சகோதரர்கள் வியர்வையில் இந்த நாடுகளின் பொருளாதாரம் அமோகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. நாமும் பலனை அனுபவிக்கிறோம். நம் சின்னச் சின்னக் கிராமங்களிலும், வசதிகள் கொண்ட வீடுகள். என் நண்பர், மேனேஜ்மெண்ட் ஆலோசகர் பால் சக்காரியா சொன்னார், “தமிழர்கள் பிசினஸ் முனைவர்கள். ஏனோ, அவர்கள் சவுதியில், வேலை பார்ப்பதில் திருப்தி அடைந்துவிடுகிறார்கள். அவர்கள் நினைத்தால், ஏற்றுமதி, இறக்குமதியில் எத்தனையோ சாதனைகள் செய்யலாம்.”

பூகோள அமைப்பு

ஒரு புறம் செங்கடல். மறுபுறம் பாரசீக வளைகுடா. ஏழு அண்டை நாடுகள் இராக், ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார், ஐக்கிய அரபுக் குடியரசு, யேமன். நிலப் பரப்பு 21,49,690 சதுர கிலோமீட்டர்கள். முக்கிய இயற்கைச் செல்வம் பெட்ரோல். உலகின் பதினாறு சதவிகிதப் பெட்ரோல் சவுதியில்தான் இருக்கிறது. தலைநகரம் ரியாத் .

சுருக்க வரலாறு

சவுதிதான் இஸ்லாம் மதத்தின் பிறப்பிடம். மெக்கா, மெதீனா ஆகிய இரு புனிதத் தலங்களும் இங்கேதான் இருக்கின்றன. சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, இங்கே மனித வாழ்க்கை தொடங்கியது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஏழாம் நூற்றாண்டில், இஸ்லாம் மதத்தின் தொட்டிலாகவும், அரபிய சாம்ராஜ்யத்தின் மையப்பகுதியாகவும் இருந்தது. இதற்குப் பிறகு பல குறுநில மன்னர்கள் நாட்டின் பல பகுதிகளை ஆண்டார்கள். 1932 - இல், அப்துல் அஜீஸ் அல் ஸாத் என்னும் அரசர் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைத்து, இன்றைய சவுதி அரேபியாவை உருவாக்கினார். மன்னராட்சி தொடர்கிறது. 1982 முதல் சவுதி அமெரிக்க ஆதரவு நாடாக இயங்குகிறது.

மக்கள் தொகை

சுமார் இரண்டு கோடி எண்பது லட்சம். அரபியர்கள் 90 சதவிகிதம். மொத்த மக்கள் தொகையில் 85 90 சதவிகிதம் இஸ்லாமியர்கள். கிறிஸ்தவர்கள், இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் போன்றோர் பிறர். ஆட்சிமொழி அரபுமொழி. 95 சதவிகிதம் மக்கள் கல்வியறிவு கொண்டவர்கள். ஆண்களின் கல்வியறிவு 97 சதவிகிதம்: பெண்கள், சோடை போகாத 91 சதவிகிதம்.

ஆட்சிமுறை

மன்னராட்சி நடக்கும் ஒரு சில உலக நாடுகளுள் சவுதியும் ஒன்று. குரான், நபிகள் நாயகம் ஆகியோர் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சட்டம் நாட்டுக்கு வழி காட்டுகிறது.

பொருளாதாரம்

சவுதி அரேபியப் பொருளாதாரத்தின் அடித்தளம் பெட்ரோல். உலகின் நம்பர் 1 பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதியாளர் சவுதிதான். ஆகவே, சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிப்பதில் இவர்கள் பலம் அதிகம். தேசிய வருமானத்தில் 80 சதவிகிதம் பெட்ரோலியத் தொழில்கள் மூலமாகக் கிடைக்கிறது. மின் தயாரிப்பு, தொலைத் தொடர்பு போன்ற பிற தொழில்களை வளர்க்க அரசு முயற்சிகள் எடுத்துவருகிறது. சுமார் அறுபது லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். தமிழர்களும், மலையாளிகளும் இவர்களுள் கணிசமானவர்கள் என்பது நமக்கு நல்ல சேதி. இதனால், உள்ளூர் இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன என்பது உள்ளூர் மக்களின் குறை. இளைய சமுதாயத்தினருக்குத் தொழிற்பயிற்சிகள் தந்து, இந்தக் குறையைப் போக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.

நாணயம்

ரியால் (Riyal). தற்போதைய நிலவரப்படி, 17 ரூபாய் 64 காசுக்குச் சமம்.

இந்தியாவோடு வியாபாரம்

சவுதிக்கு நம் ஏற்றுமதி ரூ. 68,065 கோடிகள். இதில் முக்கியமானவை, இரும்பு, உருக்குப் பொருட்கள், எந்திரங்கள், கெமிக்கல்கள், இறைச்சி, விமானங்கள். இதில் முக்கியமானவை. நம் இறக்குமதி ரூ. 1,72,057 கோடிகள். பெட்ரோலியப் பொருட்கள், கெமிக்கல்கள், உரங்கள், கந்தகம், பிளாஸ்டிக்ஸ் போன்றவை இந்தப் பட்டியலில் பிரதான இடம் பிடிக்கின்றன.

பிசினஸ் டிப்ஸ்

எந்த பிசினஸ் செய்ய வேண்டுமானாலும், உள்ளூர் ஸ்பான்சர்கள் வேண்டும். உங்கள் வெற்றி, தோல்விகள் இவர்களைப் பொறுத்துத்தான் அமையும். ஆகவே, இவர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். பிசினஸ்மேன்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, சலாம் சொல்லுவார்கள். நெருக்கமானவர்களாக இருந்தால், அடுத்தவரின் வலது கையைத் தங்கள் வலது கையால் அழுந்தப் பிடிப்பார்கள். இடது கை அவர் தோள்மேல். நம்மைப் போன்றவர்களோடு கை குலுக்கல்தான்.

நேரம் தவறாமை சவுதியில் பழக்கமல்ல. பதவியிலும், பணத்திலும் உயர்நிலையில் இருப்பவர்கள், தங்களைவிட சமூக அந்தஸ்தில் குறைந்தவர்களைக் காத்திருக்க வைப்பார்கள். தொழுகை நேரங்களில் யாரையும் சந்திக்கமாட்டார்கள். பகலில் வெயில் அதிகமாக இருப்பதால், இரவில் மீட்டிங் நடக்கும் சாத்தியம் அதிகம்.

விசிட்டிங் கார்டுகள் அவசியம். இவை ஒரு பக்கம் ஆங்கிலத்திலும், மறு பக்கம் அரபிய மொழியிலும் விவரங்கள் தருவது நல்லது. பெரும்பாலானவர்களின் கார்டுகளில் போன் நம்பர், ஈ மெயில் விலாசம் ஆகிய விவரங்கள் இருக்காது. நீங்கள் தனியாகக் கேட்டுத்தான் வாங்கவேண்டும்,

உயர் நிலையில் உள்ளவர்களோடு ஆங்கிலத்தில் பேசலாம். பிறரோடு பேசும்போது, உங்கள் ஸ்பான்சர் மொழி பெயர்ப்பில் உதவுவார். பேச்சு வார்த்தைகளின் நடுவில் போன் பேசுவார்கள். யார் யாரோ அறைக்குள் வருவார்கள். ஏன், சொந்தக்காரர்களும், குடும்பமும்கூட வரலாம். நீங்கள் இருப்பதையே மறந்து அவர்களோடு பேசுவார்கள். உங்களுக்கு அசாத்தியப் பொறுமை தேவை.

மீட்டிங் தொடங்கியவுடனேயே, பிசினஸ் சமாச்சாரங்களுக்கு வரமாட்டார்கள். உங்கள் பயணம், உடல்நிலை எனப் பல குசல விசாரங்களுக்குப் பிறகுதான் பிசினஸ் பேச்சு. அவசரமே காட்டமாட்டார்கள்.

மீட்டிங் முடிவில்தான் காப்பி வரும். மீட்டிங் முடியும் நேரம் நெருங்குகிறது என்னும் எச்சரிக்கை இது.

அவர்கள் வீட்டுப் பெண்கள், பொதுவாக பெண்கள் தொடர்பான சமாச்சாரங்களை பேசவே கூடாது. ``தடா” விதிக்கப்பட்ட இன்னொரு விஷயம் இஸ்ரேல். விளையாட்டுகள் பற்றிப் பேசலாம். கால்பந்தாட்டம், குதிரைப் பந்தயம், ஒட்டக ஓட்டப் பந்தயம் ஆகியவை அவர்கள் ரசிக்கும் விளையாட்டுக்கள்.

விருந்தோம்பலில் சிறந்தவர்கள். வகை வகையான உணவுகள் தந்து உங்களை அசத்திவிடுவார்கள். அவர்கள் வீடுகளுக்கு அழைத்தால், மறக்காமல் காலணிகளை வெளியே கழற்றி வைத்துவிட்டு வீட்டுக்குள் அடியெடுத்து வையுங்கள். நீங்கள் இடதுகைப் பழக்கமுடையவராக இருந்தாலும், வலது கையால் மட்டுமே சாப்பிடவேண்டும்.

எதையும் வலது கையால் மட்டுமே செய்யவேண்டும். சுட்டிக் காட்டிப் பேசுவது, தம்ஸ் அப் சைகை, கால் மேல் கால் போட்டு உட்காருவது ஆகியவை அநாகரிகச் செயல்கள்.

உடைகள்

அமெரிக்க பாணி ஷார்ட்ஸ், டி ஷர்ட் கூடாது. பாண்ட், முழுக்கைச் சட்டை, ஷூ தேவை. உள்ளூர் பிசினஸ்மேன்கள் பாரம்பரிய உடையில் வருவார்கள். நீங்கள் அத்தகைய உடைகள் அணிந்துபோகவே கூடாது. நீங்கள் கேலி செய்வதாக நினைப்பார்கள்.

பரிசுகள் தருதல்

பரிசுகளை எதிர்பார்க்கமாட்டார்கள். பரிசுகள் தந்தால், எல்லோர் முன்னாலும், திறந்து பார்ப்பார்கள். எல்லோரிடமும் காட்டுவார்கள். தரை விரிப்புகள், வெள்ளி, பிளாட்டின சாமான்கள், வாசனைப் பொருட்கள் தரலாம். தங்க நகைகள் கூடாது. பெண்களுக்குப் பெண்கள் மட்டுமே பரிசுகள் தரவேண்டும். ஆண்கள் தரவே கூடாது.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x