Published : 29 Jul 2020 08:33 PM
Last Updated : 29 Jul 2020 08:33 PM

ஹோமியோபதி, பாரம்பரிய மருத்துவம்: இந்தியா - ஜிம்பாப்வே ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்

புதுடெல்லி

பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இந்தியாவுக்கும் ஜிம்பாப்வேக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளை மேம்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்புக்கான வரையறைகளை அளிப்பதாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது. பாரம்பரிய மருத்துவத் துறையில் இரு நாடுகளும் இதனால் பயன்பெறும்.

சமநிலை மற்றும் பரஸ்பரப் பயன் என்ற அடிப்படையில், பாரம்பரிய மருத்துவத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது, மேம்படுத்துவது மற்றும் உருவாக்குதலை பிரதான நோக்கமாகக் கொண்டதாக இந்த ஒப்பந்தம் உள்ளது.

பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இந்தியக் குடியரசுக்கும், ஜிம்பாப்வே குடியரசுக்கும் இடையில் ஏற்கெனவே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம் 2018 நவம்பர் 3 ஆம் தேதி கையெழுத்தானது. பின்வரும் விஷயங்களில் ஒத்துழைப்பு மேற்கொள்ளலாம் என இந்த ஒப்பந்தத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது:

* புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அம்சங்களுக்கு உட்பட்டு கற்பித்தல், பயிற்சி செய்தல், மருந்துகள் மற்றும் மருந்து இல்லாத சிகிச்சை முறைகளின் ஒழுங்குமுறைகளை மேம்படுத்துவது;

* அனைத்து மருத்துவப் பொருள்களை வழங்குதல், அவற்றைப் பயன்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்கள் வழங்குதல் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அம்சங்களுக்கு உள்பட்ட நோக்கங்களை எட்டுவதற்கான மேற்கோள்களை அளிப்பது;

* பயிற்சி செய்பவர்கள், துணை மருத்துவ அலுவலர்கள், விஞ்ஞானிகள், கற்பித்தல் தொழிலில் இருப்பவர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயிற்சிகள் அளிப்பதற்கு நிபுணர்களைப் பரிமாற்றம் செய்து கொள்வது;

* ஆர்வம் உள்ள விஞ்ஞானிகள், மருத்துவப் பயிற்சி செய்வோர், துணை மருத்துவ அலுவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி, கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களில் சேர வாய்ப்பு அளித்தல்;

* மருந்தியல் நூல்கள் மற்றும் மருந்துகளின் செய்முறைகளை பரஸ்பரம் அங்கீகரித்தல்;

* இரு தரப்பினராலும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகளைப் பரஸ்பரம் அங்கீகரித்தல்;

* இரு நாடுகளிலும் மத்திய / மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அளிக்கும் கல்வித் தகுதிகளுக்கு பரஸ்பரம் அங்கீகாரம் அளித்தல்;

* அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கல்வி பயில்வதற்கு உதவித் தொகைகள் வழங்குதல்;

* அந்தந்த நாடுகளில் தற்போது அமலில் உள்ள சட்டங்களின்படி, தகுதி பெற்ற மருத்துவப் பயிற்சியாளர்களால், பாரம்பரிய மருந்துத் தயாரிப்புகளுக்கு பரஸ்பர அடிப்படையில் அங்கீகாரம் அளித்தல்;

* அந்தந்த நாடுகளில் தற்போது அமலில் உள்ள சட்டங்களின்படி, தகுதி பெற்ற மருத்துவப் பயிற்சியாளர்கள் மருத்துவம் செய்வதற்கு பரஸ்பர அடிப்படையில் அனுமதி அளித்தல்;

* இதன் பிறகு இரு தரப்பினராலும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்படும் எந்த அம்சங்களையும் பின்பற்றுதல் ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x