Published : 12 Jun 2020 06:52 AM
Last Updated : 12 Jun 2020 06:52 AM

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.12,201 கோடி கடன்- மத்திய நிதி அமைச்சகம் தகவல்

பொதுத்துறை வங்கிகள் மூலம் ஜூன் 9-ம் தேதி வரையான காலத்தில் ரூ.12,200.65 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 5 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 2 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்ததால் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் முடங்கிப் போயின. குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் (எம்எஸ்எம்இ) நிறுவனங்கள் முடங்கின. இவற்றுக்கு புத்துயிரூட்டும் வகையில் ரூ.3 லட்சம் கோடிஅவசர கால கடன் உதவி திட்டத்தைமத்திய அரசு அறிவித்துள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பிணையில்லாத கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் (இசிஎல்ஜிஎஸ்) ஜூன் 1-ம் தேதி முதல் இதுவரையில் ரூ. 24,260 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை முடுக்கிவிடுவதற்காகவும் சுய சார்பு பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சலுகை திட்டங்கள் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

இதில் ஜூன் 9-ம் தேதி வரையான காலத்தில் பொதுத்துறை வங்கிகள் மூலம் ரூ.24,260 கோடி இசிஎல்ஜிஎஸ் திட்டம் மூலம் அனுமதிக்கப்பட்டு அதில் ரூ.12,200.65 கோடி வழங்கப்பட்டு விட்டதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.2,637 கோடி கடன் வங்கிகள் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.1,727 கோடி வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரூ.2,547 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.1,225 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ரூ.13,363 கோடிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுவரை ரூ.7,517 கோடி வழங்கியுள்ளது.

பாங்க் ஆப் பரோடா ரூ.1,893 கோடி கடனுக்கு ஒப்புதல் வழங்கி ரூ.526 கோடியை இதுவரை அளித்துள்ளது. யூனியன் பாங்க் ஆப் இந்தியா ரூ.1,842 கோடி அளித்து ரூ.794 கோடியை வழங்கியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.1,772 கோடி கடனுக்கு ஒதுக்கீடு செய்து ரூ.656 கோடியை வழங்கியுள்ளது.

மத்திய அமைச்சரவை 9.25 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. பிணையில்லாத வகையில் அவசர கால கடன் வழங்க இது அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ.41,600 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியானது அடுத்த 3 நிதி ஆண்டுகளுக்கானதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x